புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 13 :

திவ்ய நற்கருணை ஆண்டவர் குறித்து புனிதையின் போதனை..

“ சகோதரிகளே, நாம் தேவ நற்கருணை வாங்கிய சிறிது நேரம் சுதனாகிய சவேசுவரன் தமது பிதாவின் மடியில் எப்படி இயங்குவாரோ, அப்படியே நம்முள்ளும் இயங்குகிறார். பிதாவானரும், வார்த்தையானவரும், இஸ்பிரீத்துசாந்துவானவரும் சேர்ந்தே நம்முள் வருகிறார்கள். ஆகவே தேவ நற்கருணை வாங்கும்போது நாம் மனுவுறுவெடுத்த வார்த்தையானவரை மட்டுமல்ல, மகா பரிசுத்த தமத்திருத்துவத்தையே வாங்குகிறோம் ( நாம் பாத்திமா காட்சிகளில் பார்த்ததும் இதுதான்). இதனை நாம் நன்கு உணர்ந்தால், அற்ப காரணங்களுக்காக தேவ நற்கருணை உட்கொள்ளும் பாக்கியத்தை இழந்து விட மாட்டோம்” என்றாள்.

இந்த விலையேறப்பெற்ற திரவியத்தைத் தகுதியுடன் பெற்றுக் கொள்வதற்கு தங்களை எவ்வாறு தயாரிப்பது என்று சில நவகன்னியர் கேட்டபோது, “ தினசரி நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஒப்புக்கொடுங்கள் ( இதுவும் மாதா பாத்திமாவில் கூறியதுதான். புனிதை சொல்லிய ஆண்டு 1585). ஆனால் அவை பரிசுத்தமான கருத்துடன் இருக்க வேண்டும். ஆண்டவர் தமது பரிசுத்தமான கண்களால் பார்க்கின்றபோது அவை ஆண்டவருக்கு ஏற்புடையதாயிருக்க வேண்டும். அது மட்டுமல்ல ஆண்டவருடை இரத்தத்தையும், பாடுகளையும் ஒப்புக்கொடுக்க வேண்டும். என்னைப் பொறுத்த மட்டில் ஆண்டவருடைய இரத்தத்தை ஒப்புக்கொடுக்காமல் நான் இந்த தெய்வீக அரசரிடம் நெருங்கத் துணிய மாட்டேன்” என்றாள் புனிதை.

தொடர்ந்து, “ கவனமாக யோசியுங்கள். நீங்கள் கடவுளைப் பெற்றுக்கொள்ள செல்கிறீர்கள். அற்ப மனிதர்களாகிய நாம் கடவுளையே நம்முள் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த தெய்வீக உணவிலிருந்து நாம் பலன் அடையவில்லையென்றால், அதற்குக் காரணம் நமது கவனமின்மையும், நமது அசட்டைத்தனமுமே காரணம் “.

தேவநற்கருணை, ஐக்கியத்தின் தேவதிரவிய அனுமானமாகும். ஆண்டவருக்கும், ஆன்மாவுக்கும் மட்டுமல்ல, ஆன்மாக்களுக்கு இடையிலுமுள்ள ஐக்கியத்திற்குமான தேவதிரவிய அனுமானமும் நற்கருணையே ஆகும். ஒரே தெய்வீக உணவை உண்ணும் ஆன்மாக்கள் ஆண்டவரில் ஒரே ஆன்மாவாக மாற்றுருப் பெற வேண்டும்.

புனிதை தனது நவகன்னியரிடம், ஒருவரோடொருவர் கொண்டுள்ள ஐக்கியத்தைப்பற்றி ஆன்ம சோதனை செய்தபின் தேவ நற்கருணை வாங்க வேண்டும் என்று கற்பிப்பாள். மேலும்,

“ தேவநற்கருணை உட்கொண்டபின் வெகுநேரம், நம்மிடம் வந்துள்ள தெய்வீக விருந்தாளியுடன் நாம் செலவிட வேண்டும் ( நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்.. குறைந்தது பத்து நிமிடங்கள்..???) என்று வலியுறுத்துவாள். “ அவரோடு உரையாடவும், எப்படி அவரது திருவுளப்படி நடந்து அவருக்கு ஊழியம் செய்யவேண்டுமென்றும், அவரிடம் கற்பதற்கான தருனம் இதுவே” என்றும் கூறுவாள்.

“ இன்று காலை உங்களது இதயத்தில் வந்ததிற்காக, எத்தனை முறை ஆண்டவருக்கு நன்றி கூறினீர்கள்?” என்று தனது நவகன்னிகையிடம் அவள் அடிக்கடி கேட்பாள்.

“ ஒவ்வொரு நாளின் முற்பகுதியை ஆண்டவர் தேவ நற்கருணை வடிவில் உங்களிடம் வந்ததற்கு நன்றி செலுத்தவும், பிற்பகுதியை அடுத்த நாள் தேவ நற்கருணை பெறுவதற்கான தயாரிப்பதற்காகவும் செலவிட வேண்டும். போதுமான தயாரிப்புடன் பெறப்படும் ஒரேயொரு தேவநற்கருணை நம்மை புனிதராக்குவதற்குப் போதுமானது “ என்பாள் புனிதை..

மடத்திலிருந்த சகோதரி ஒருவர் இறந்து பல நாட்களாகியிருந்தன. புனிதை ஒரு காட்சியில் அந்த சகோதரி வெண்ணாடை அணிந்து தீச்சுவாலையால் சூழப்பட்டவராக பீடத்தின் மகா பரிசுத்த அனுமானத்தை ஆராதித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அச்சகோதரிக்கு ஆறுதலாக இருந்த அந்த வென்ணாடை, அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது கொண்டிருந்த தூய்மைக்கான பரிசு எனவும், அவரை வாதித்த தீச்சுவாலை அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது தகுந்த காரணமின்றி தேவநற்கருணை வாங்குவதை அடிக்கடி தவிர்த்து வந்ததற்கான தண்டனை எனவும் புனிதை தன் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொண்டாள்..

புனிதை நற்கருணை நாதரிடம் கொண்டிருந்த அன்பும், விசுவாசமும், அவளை நற்கருணை நாதரை அடிக்கடி சந்திக்கத் தூண்டியது. தனது ஓய்வு நேரம் முழுவதையும் தேவநற்கருணைப் பேழைமுன் செலவிடுவாள். அடிக்கடி இரவு முழுவதும் நற்கருணைப் பேழைமுன் இருந்து ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருப்பாள். சகோதரிகள் ஆண்டவரை ஆராதிப்பதற்காக குருவானவர் நற்கருணையை எழுந்தேற்றம் செய்துவைக்கும்போதெல்லாம் புனிதையின் மகிழ்ச்சி கரைபுரண்டோடும்..

“ பீடத்தின் தேவதிரவிய அனுமானத்திற்கு முன்பு மனப்பூர்வமாக மன்றாட முன்வாருங்கள். ஏனெனில், ஆண்டவர் மோட்சத்தில் பிரசன்னமாய் இருப்பதுபோல இங்கேயும் பிரசன்னமாயிருக்கிறார் “ என்று நவகன்னியருக்கு அடிக்கடி நினைவூட்டுவாள்.

 நன்றி : புனித பாசி மரிய மதலேனாளின் சரிதை.., மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !