புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 12 :

மாதாவுடன் புனிதைக்கு உள்ள தோழமை..

“ மாதாவுக்கு ஒரு புகழ்ச்சிப் பண் “

அர்ச்சிஷ்ட்டவர்களின் பேரரசியான தேவதாயுடன் புனிதை ஒரு இனிய நெருக்கமான உறவைக் கொண்டிருந்தாள். “ பரிசுத்த தாய் “ என்பது புனிதை தேவதாயைக் குறிப்பிட பயன்படுத்திய வார்த்தைகள். தேவதாயைப் பற்றி உயர்வாக, நிறைவாக, கனிந்த வார்த்தைகளில் பேசுவாள். தேவதாய் திருநாட்களின் போது தேவதாயின் திரு நாட்களின்போது, தேவ தாயின் தெய்வீகத் தாய்மை குறித்த பல இரகசியங்கள் புனிதைக்கு வெளிப்படுத்தப்பட்டன. அவள் அனுபவித்த ஐந்தாண்டு சோதனையின்பொது தேவதாயின் திருவிழா நாட்கள் நம் புனிதைக்குப் பாலைவனச்சோலியையாக மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்தன.

தேவதாய் பரலோகத்திற்கு ஆரோபணமான திருநாளில் பரவசமான புனிதை,

“ ஓ மரியாயே! நீர் எவ்வளவு மகிமை பொருந்தியவர்! மகிமை பொருந்திய மரியம்மாள்! உமது கண்களின் அழகில் விண்ணகமே களிகூர்கிறது. பரிசுத்த தமத்திருத்துவமே உம்மைப் பார்க்க விரும்புகிறது” என்று வியந்து கூறினாள்.

“ மரியம்மாள் ஒரு நீரூற்று. அது கன்னிமை என்ற முத்திரை பதிக்கப்பட்ட நீரூற்று. நித்திய வார்த்தையானவர் உம்மை கன்னியும், தாயும் என அழைக்கிறார். பரிசுத்த தமத்திருத்துவத்தின் மகிழ்ச்சி நீர்! தாயே, நீர்தான் நித்திய வீடாகிய மோட்சப் பேரின்ப நாட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லும் பாதை. நித்திய வார்த்தையானவர் இப்பாதை வழியாகத்தான் இவ்வுலகிற்கு வந்தார். 

1. மரியம்மாள் இல்லாவிட்டால் என்னைப் பொறுத்தவரை மோட்சமே இல்லை. 

2. மரியம்மாள் இல்லாவிட்டால் மோட்சம் களையிழந்து காணப்படும். 

3. மரியம்மாள் இல்லாவிட்டால் விண்ணகத்தில் பல இருக்கைகள் வெறுமையாக இருந்திருக்கும்

4. மோட்சமே நிறைவானதாக இருக்காது.

5. தேவதாய் இல்லையென்றால் அர்ச்சிஷ்ட்டவர்கள் முழுமையான மகிமையை அடைந்திருக்கமாட்டார்கள்

6. ஏனெனில் தேவதாயிடமிருந்துதான் அர்ச்சிஷ்ட்டவர்கள் தங்கள் மகிமையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

7. தேவதாயின்றி ஆண்டவரால் கூட, தமது மகிமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

8. காரணம் தேவ தாயைப்போல ஆண்டவரின் மகிமையைப்  பெற்றுக் கொள்ள வல்ல ஒரு படைப்பு வேறேதுவுமில்லை.

மரியாயே, நீர் எவ்வளவு அழகு வாய்ந்தவர்! எவ்வளவு தூய்மையானவர்! உமது பார்வையில் வார்த்தையானவரை மகிழ்ச்சியடையச் செய்கிறீர். சம்மனசுக்களின் ஆனந்தம் நீர்! பாவிகளுக்கு ஆறுதல் நீர்! ஆண்டவரின் சினத்தைத் தனிப்பவர் நீர்! மோட்சத்தில் நீர் மரியாள், மார்த்தாள் இருவரின் பணியையும் செய்கிறீர். மரிய மதலேனாள் போல் ஆண்டவர் பாதத்தினருகே  அமர்ந்து இருந்து மகிழ்கின்றீர்; மார்த்தாளைப் போல் எமக்காகப் பரிந்து பேசுகின்றீர்.

ஓர் அன்புள்ள தாயாக தேவமாதா அவருடைய பிள்ளைகளுக்குக் காண்பிக்கும் படிப்பினை என்னெவெனில்,

“ நாம் மோட்சத்தை உற்று நோக்குகிறபோது இப்பூமியில் உதவி தேவைப்படும் நமது சகோதரிகளை மறந்துவிடக் கூடாது என்பதே, ஓ மரியாயே! எனது ஆன்மாவை, எனது மனதை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக உமது ஆன்மாவை, உமது மனதை எனக்குத்தாரும் “ என்று தேவதாய் மீதுள்ள அன்பை எடுத்துரைத்தாள்.

தேவதாயும் தனது மகளான நமது புனிதையின்மீது கொண்ட அன்பை பல்வேறு வழிகளில் எண்பித்தார்கள். 1584- ம் ஆண்டு தேவதாய் பரலோகத்திற்கு ஆரோபணமான திருநாளன்று தன் அன்பின் அடையாளமாக ஒரு தங்கக் கழுத்தணியைப் புனிதைக்கு அளித்தார்கள். 1587-ம் ஆண்டு செப்டம்பர் 17- ம் தேதி ஒரு வெண் முக்காட்டை தேவதாய் புனிதைக்கு சூடி, பரிசுத்தனத்திற்கு எதிரான எந்த சோதனையும் புனிதைக்கு வராது என்று கூறினார்கள். பலமுறை தேவதாய் குழந்தை சேசுவைப் புனிதையின் கரங்களில் தந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்கள்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோ. பால்ராஜ் Ph. 9487609983, தூத்துக்குடி 

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !