கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்.

இயேசுநாதர் தம் அலுவலை முடித்து விட்டார் . திருச்சபையின் அமைப்பை வகுத்து விட்டார் . அவர் மோட்சத்துக்குப் போவதனால் நமக்குப் பெரும் பயன் உண்டு . தமது மோட்ச ஆரோகணத்தால்  நம்மில் விசுவாசத்தின் வாழ்வை உறுதிப்படுத்தினார் . நமக்காக ஏற்கனவே அவர் மோட்சத்தை சுதந்திரித்திருந்தபடியால் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் . பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பும் மகிமையான கொடைகளினால் விசேசமாய்த் திவ்விய பரிசுத்த ஆவியை அனுப்புவதினால் நம்மில் தேவ சிநேகத்தையும் அதிகரித்தார் . அவர் மோட்சத்திற்கு ஏகியிராவிடில் பரிசுத்த ஆவி நம்மேல் இறங்கி வந்திருக்க மாட்டார். மோட்சமும் நமக்குத் திறந்திராது

இதைப் பற்றி அர்ச் அகுஸ்தீன் சொல்லுகிறார் "இயேசுவின் உத்தானம் நமது நம்பிக்கை . அவருடைய ஆரோகணம் நமக்கு மகிமை . இயேசுவின் மோட்ச ஆரோகணத் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் . சரியான விதமாக விசுவாசத்தோடும் , பக்தியோடும் , பரிசுத்தமாகவும் அன்போடும் ஆண்டவரின் ஆரோகணத்தைக் கொண்டாடுவோமேயாகில் நாம் அவரோடு மேலே ஏற வேண்டும் . அங்கு நம் இதயம் உயர வேண்டும் . மேலேறுகையில் கர்வம் மேலே ஏறக் கூடாது . நமது பேறுபலன்களைக்  கொண்டே நாம் மேலே போகிறோம் என்ற மதி மோசம் இருத்தலாகாது . ஆண்டவருக்காக என்பதை மறந்து உயரப் பறப்பது அகங்காரம் . ஆண்டவரோடு நம் உள்ளம் மேலே போகுமேயாகில் அது நமது சொந்த வீடேகுவதாம்

கவனியுங்கள் சகோதரர்களே என்ன அதிசயம் ! கடவுள் மேலே இருக்கிறார் . நீ மேலே ஏறப்பார். அவர் உன்னை விட்டுப் பறந்து விடுகிறார் . தரைமட்டம் உன்னைத் தாழ்த்து . அவர் உன்னிடம் கீழே வருகிறார் . இது ஏன் ? ஆண்டவர் உயர்ந்தவர் . தாழ்ச்சியுள்ளவர்கள் மேல் தன் கண்ணைத் திருப்புகிறார் . உயர்ந்தவர்களை எட்டி நின்று பார்க்கிறார் . தங்களைத் தாழ்த்துகிறவர்களை அருகிலிருந்து இரக்கத்தோடு எழுப்பி விடுகிறார் . அகங்காரமுள்ள பெரியோரை எட்டி நின்று பார்த்துக் கீழே உருட்டி விடுகிறார்

ஆண்டவரின் ஆரோகணம் மனித சுபாவத்தின் ஆடம்பர வெற்றி . என்றென்றுக்கும் கடவுளும் மனிதனுமான இரண்டாம் தேவ ஆளோடு ஒன்றித்து மோட்சம் கொண்டு போகப்படுகிறோம் . இயேசுநாதருடைய பாடுகளாலும் மரணத்தாலும் அவருடைய மனித சுபாவம் மோட்சத்தில் எல்லா சிருஷ்டிகள் மேல் அரசுரிமை பெற்றது . தேவ சுபாவத்தில் அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமம் . மனித சுபாவத்திலும் தேவ வல்லமையிலும் சுதந்திரம் பெற்று மனுக்குலத்திற்கே நீதிபதியும் அதிபதியும் ஆனார் . முள்முடி தான் அவரது ஆட்சியின் சுதந்திரத்தின் சின்னம் . அவர் கரத்தின் மூங்கில் கோல் நீதி செலுத்த அவருக்குள்ள அதிகாரத்தின் சாட்சி . அவரது கரங்களிலும் கால்களிலும் உள்ள காயங்கள் பேயின் மேலும் உலகின் மேலும் உடலின் மேலும் அவர் கொண்ட வெற்றியைப் பறையடிக்கின்றன

இயேசுவின் ஆரோகணம் அப்போஸ்தலர்கள் உள்ளத்தில் அதிசயத்தையும் அக்களிப்பையும் ஊட்டின . இயேசுநாதர் தம் அலுவலை முடித்து ஆனந்தத்தில் மகிமையில் பிரவேசித்து விட்டார் . அவருக்கு இனிமேல் மகிழ்ச்சியும் மகிமையுமே . அவரது அரசுக்கு முடிவில்லை . ஆதலால் நாம் இயேசுவுக்காக மகிழ்வோம் . மோட்சம் இனிமேல் நமதே . நம்மைக் குறித்தும் அகமகிழலாம் . பாவத்தை எந்நாளும் தவிர்த்து நடப்பது சங்கட அலுவல் . எனினும் பாவமின்றி வாழ்ந்தால் போதுமென்ற தாழ்ந்த மனப்பான்மை நம்மிடம் தாமதிக்கலாகாது . புண்ணியத்தின் ஏணியில் மேலும் மேலும் ஏற வேண்டும் .இயேசுவோடு பந்திக்கும் ஐக்கியத்தில் நாளுக்கு நாள் அதிகம் நெருங்க வேண்டும் எனும் தீர்மானம் உறுதிப்பட வேண்டும்.