கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.

கர்த்தர் உயிர்த்தெழுந்ததை நேரில் கண்டவர்கள் கல்லறைக் காவலர்களே . "மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால் , மரித்தவர்களிடத்திலிருந்து ஒருவர் உயிர்த்து வந்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் " என்று இயேசு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையானது .

அப்போஸ்தலர்களுக்குப்  பயம். இயேசுநாதர் உயிர்த்ததைக் கேட்டு பயம் , உயிர்த்த இயேசுவைக் கண்டு பயம் . விசுவாசம் எவ்வளவு மெதுவாய் அவர்கள் உள்ளத்தில் ஊர்ந்தூர்ந்து உதித்தது . தாம் உயிர்த்து வரப் போவதாக இயேசுநாதர் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார் . இயேசு உயிர்த்தெழுந்ததாக சம்மனசுக்கள் கூறியும் , தரிசனை கண்ட பெண்கள் கூறியும் , தாங்களே இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்னும் உடனே அவர்கள் விசுவசிக்கவில்லை.

அப்போஸ்தலர்களின் பயத்துக்குக் காரணம் என்ன ?மரித்தவர் உயிர்த்து வந்தால் யாவருக்கும் பயம் தான் . ஆண்டவர் உயிர்க்க வேண்டும் என்னும் வேத வாசகத்தை விசுவாசிக்கததால் வந்த பயம் . உயிர்த்த இயேசுவின் மகிமையையும் பிரகாசத்தையும் கண்டு கலங்கினார்கள் . இந்நிலையில் அவரைப் பார்த்தும் அறிந்து கொள்ளவில்லையே . அவரை விட்டு ஓடி ஒளிந்து அவரை அவர்கள் மறுதலித்து விட்டபடியால் இப்போது பயம்

எனினும் அச்சம் ஒரு பக்கம் , மகிழ்ச்சி மறு பக்கம் . சந்தோசம் ,பயத்தை முற்றும் விரட்டிவிடவில்லை . அவர்கள் பயந்தார்கள் , மகிழ்ந்தார்கள் . சமயத்துக்குச் சமயம் குறுகிய நேரம் ஒன்றாய் வாழ்ந்தனர் . ஏரிக்கரையில் நிற்கிறார் . அவர்களோடு உண்கிறார் ,அவர்களுக்குப் போதிக்கிறார் . தேற்றரவானவரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் அவரது மனித சுபாவம் பூண்ட தேவ ஆளின் பரம இரகசியத்தை , அவர் கொண்டு வந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கற்பித்தபின் மறைந்தார்

அவரது உத்தானத்தால் நம்மில் நம்பிக்கையை வளர்க்கிறார் . அவர் எழாதிருந்தால் மரித்தவர்களில் ஒருவரும் உயிர்த்து எழுந்திரார். அவரது உத்தானம் நமது உத்தானத்தின் அச்சாரம், அடையாளம் , அவர் ஜெயித்தார் . நம்மையும் ஜெயம் பெறச் செய்வார் . கிறிஸ்துவோடு நாம் உயிர்த்த வாழ்க்கை நடத்த வேண்டும் . "இயேசுவோடு உயிர்த்திருப்பீர்களேயாகில் மேலிருக்கும் காரியங்களை நாடிச் செல்லுங்கள் "

உத்தானத்தினால் வந்த புது வாழ்க்கையைத் திருச்சபை தன் சடங்கு முறையில் துலங்க வைக்கிறது . புது நெருப்பு மந்திரிக்கப்படுகிறது . ' கிறிஸ்துவின் ஒளி' என்ற கீதத்தில் திரி அர்ச்சிக்கப்படுகிறது . மக்கள் உள்ளத்தை கழுவி இயேசுவின் திரு இரத்தத்தில் வெண்மையாக்க குளிர்ந்த நீர் மந்திரிக்கப்படுகிறது . மகிழ்ச்சியின் அடையாளமாக மணிகள் ஒலிக்கப்படுகின்றன . பிரார்த்தனை பாடப்படுகிறது . அதில் உயிர்த்த ஆண்டவர் பாதம் நம் குறைகள் யாவையும் சமர்ப்பிக்கிறோம் . அவருக்கு நம் மேல் கவலை உண்டல்லவா? புதிதாய் மந்திரித்த தூபமும் வான் நோக்கிப் பறக்கிறது

இயேசுவின் உத்தானம் அவரது தெய்வீகத்திற்கு அசையாத சாட்சி , பூமியில் அவர் கொண்டு வந்த போதனையின் பிணை ; அவரோடு வர இருக்கும் மகிமையின் அச்சாரம் . இயேசுவின் உத்தானம் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஞான ஜீவியத்தில் வாழவும் வளரவும் மனிதனுக்கு வல்லமை அளித்தது

அவர் ஒரே தரம் மரித்து நித்திய ஜீவியத்தில் சேர்ந்தார் . நாம் ஒவ்வொரு நாளும் சாக வேண்டும். திரும்பத் திரும்ப எழ வேண்டும் . அதாவது நம்மில் பழைய மனிதனை , பழைய ஆதாமைக் களைந்து விடுவது , இயேசுவோடு முற்றிலும் மரிப்பது , பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அடியோடு சாவது . இவை யாவும் வாழ்நாள் முழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவல் . சுய ஒறுத்தலாலும் தபத்தாலும் நாம் தினம் தினம் மரிப்போமேயாகில் மாமிச இச்சையின் குழியிலிருந்து கல்லறையிலிருந்து ஒவ்வொரு நாளும் எழுந்து கடவுளின் வளர்ப்புப் பிள்ளைகளின் மகிமையில் சேருவோம்

உயிர்த்த இயேசு தன் தாய்க்குத் தானே முதலில் தோன்றி இருப்பார்? சொல்லொணா மகிமை பூண்டு வந்த மகனைக் கண்டார் . அவரது அதிசயத்தையும் ஆனந்தத்தையும் அன்பு வளர்ச்சியையும் அறிகிறவர் யார்?