பரிசுத்த ஆவியின் வருகை.

திருச்சபையின் முதல் நவநாள் ஆரம்பித்தது . இயேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவ தாயும் அப்போஸ்தலர்களும் கூடி பரிசுத்த ஆவியின் வருகைக்காக செபத்தில் நிலைத்திருந்தனர். பத்தாம் நாள் பெரும் புயல் காற்று வீசியது. தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் பரிசுத்த ஆவி அக்கினி ரூபமாய் இறங்கி வந்தார் .

மனுதாவதாரத்தின் அலுவல் அன்பின் அலுவல். ஒவ்வொரு மனிதனின் ஆத்துமத்திலும் - ஒவ்வொருவனும் அந்த அன்பில் பங்கு பெற்று , அதைத் திருப்பிக் கொடுப்பதால் -  அந்த அலுவல் முற்றுப் பெற வேண்டும் . தம் தயாளத்திற்கு அளவேயில்லா மோட்ச பிதாவானவர் தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளை , தேவ சிநேகத்தின் ஆவியை அனுப்பி வைத்தார் . ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் விருந்தினரைப் போலும் , வழிகாட்டியாகவும் ,ஆலோசனை தருகிறவராகவும் தைரியம் ஊட்டுகிறவராகவும் வசிப்பார். அன்பின் ஆண்டவர் நமக்களித்த எல்லாக் கொடைகளிலும் அவர் தான் பெருங் கொடை. அவர் தேவ சிநேகத்தின் ஆளல்லவா ? இரண்டாம் தேவ ஆள் உலகத்திற்கு வந்து யாவருக்கும் சம்பாதித்த ஈடேற்றத்தை இரட்சணியத்தை ஒவ்வொருவரிடமும் உத்தமமாக்க வேண்டியவர்

பார்வைக்குரிய அளவில் தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் வந்த வரைக்கும் , உறுதிப்பூசுதலில் காணக்கூடாத விதமாய் ஒவ்வொருவர் மேலும் வருவதற்கு அது சான்று . கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது . இறைவனுடைய அன்பு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இறங்கி அதில் ஊன்றிப் போய் -  உண்பதும் , குடிப்பதும் ,ஓடுவதும் , ஆடுவதுமான -  நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஞான மதிப்பளித்து அது அன்பின் ஒளியாகத் திகழ வேண்டும்

பரிசுத்த ஆவியின் வரவு திருச்சபையின் பரம இரகசியம் . பலவீனர்களான அப்போஸ்தலர்கள் பலசாலி ஆனார்கள் . விவேகமற்ற அப்போஸ்தலர்கள் ஞானி ஆனார்கள் . தன் ஊர் தன் கிராமம் என்று ஒடுங்கிய அற்ப புத்தியுள்ளவர்கள் பரந்த உலகின் மக்களாயினர். பாடுகளின் காலத்தில் பயந்து ஓடி ஒளிந்து -  இயேசுவின் உத்தானத்திற்குப் பின் உயரிய நோக்கமின்றி -  இந்நேரமாவது இஸ்ராயேலரின் அரசியலைத் திரும்ப எழுப்புவாரா என்று கேட்டார்கள் அல்லவா ? இப்பொழுது ஞானோதயம் பிறந்தது , பலம் வந்தது , உலகமெங்கும் போய் போதித்து தங்கள் போதனையின் உண்மைக்குச் சான்றாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்

பிரகாசத்தின் பிரவாகத்தை -  வெள்ளத்தை -  புனித இராயப்பரின் முதல் பிரசங்கத்தில் காணலாம் . உலகின் பற்பல கோடியிலிருந்து பற்பல மொழிகள் பேசுகிறவர்கள் , இராயப்பர் அரமேயிக் மொழியில் போதித்தாலும் அதை ஒவ்வொருவனும் தத்தம் மொழியில் கேட்டான் . வேதாகமம் விளங்கியது ; உத்தானம் , ஈடேற்றம் முதலியவற்றின் பொருள் விளங்கியது . தடுமாற்றம் இல்லை . அந்நாளே மூவாயிரம் பேருக்கு மேல் மனந்திரும்பினர் . மற்ற ஒவ்வொரு பிரசங்கத்திலும் ஆயிரமாயிரம் பேர் மனந்திரும்பினர் . இயேசுவின் பேரால் நோயாளிகளுக்குச் சுகத்தை கொடுத்தார் .

 ஆண்டவரை மறுதலித்து மறைந்து பதுங்கியவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக -  முதல் பாப்பாண்டவராக -  எல்லா உரிமையையும் கொண்டாடினார் .

அக்கினி ரூபமான நாவுகள் : 
பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள் கண்டு கொள்ளுவார்கள் . அக்கினி , ஆத்துமார்த்ததினுடையவும் பரிசுத்த தனத்தினுடையவும் அடையாளம் . சுத்தம் செய்து தெளிவைக் கொடுத்து நீதி செலுத்தும் கடவுளுடைய நிகரில்லா வல்லமையின் அடையாளம் . பரிசுத்த ஆவியின் மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் பார்த்தவர்களுக்கு விதவிதமான வரப்பிரசாதத்தைக் கொண்டு வந்தார் என்பது தெரியும் .நிறைந்த அருளைக் கொண்டு வந்தார் . பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் நிரப்பப் பெற்றார்கள் என்றது வேத வாசகம் . நிறைந்த இறை அருள் , அந்தஸ்துக்கு அவசியமான இறை அருள் , கேட்கிறவர்களுக்கும் போதிக்கிறவர்களுக்கும் அவசியமான நிறைந்த அருள் - இவைகளைக் கொணர்ந்தார்

பரிசுத்த ஆவி அன்பின் ,அருளின், இரக்கத்தின் , சமாதானத்தின் தேவன் . உலகை ஒரு புதிய பிரசன்னத்தால் மகிமைப்படுத்தவும் , அர்ச்சிக்கவும் , ஆறுதல் அளிக்கவும் அகமகிழச் செய்யவும் வந்தார்

பரிசுத்த ஆவி வந்தார் , போய்விடவில்லை; இருக்கிறார் . உலக முழுவதையும் நிரப்பினார் . திருச்சபையான அவரின் ஞான சரீரத்தின் அவயவங்கள் நாம் ; நம்முடைய அலுவல் அவரது பிரசன்னத்தை உலகம் அறியும்படி செய்வதாம்.