ஆண்டவரின் தாய் எக்காலத்திலும் கன்னியானவள்!

மத்தேயு 1:25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

'ஆண்டவரின் தாய் எக்காலத்திலும் கன்னியானவள்' என்ற கத்தோலிக்க திருச்சபையின் போதனையை குறைக்காணும் கெட்ட நோக்கில்,

இந்த இறைவசனத்தில் 'வரை' என்று எதற்காக அழுத்தம் கொடுத்து சொல்லப்பட்டிருக்கிறது? என்று திருச்சபையிலிருந்து பிரிந்துபோன சபையினர் கேள்விகள் எழுப்புகின்றனர்.

எதற்காக இந்த இறைவசனத்தில் 'தம் மகனை பெற்றெடுக்கும் வரை' என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்து மனித உறவின் காரணமாக பிறந்தவர் அல்லர். மாறாக தூய நிழலிடுதலால் பிறந்தவர். ஆகவே இயேசு நம்மை போன்ற சாதாரண பிறவியல்ல, மாறாக இறைவனின் திருமகன் என்பதை சொல்லவே அன்னை மரியா தம் மகனை பெற்றெடுக்கும் வரை யோசேப்புடன் கூடி வாழவில்லை என அழுத்தம் கொடுத்து நற்செய்தியாளர் சொல்கிறார்.

ஏனெனில் இயேசு கிறிஸ்து பிறக்கும் போது தூய அன்னை மரியாவிற்கும் புனித சூசையப்பருக்கும் திருமணம் முடிந்திருந்தது. ஆகவே மனித உறவினால் பிறந்த சாதாரண மனிதர் தான் இயேசு என மக்கள் நினைக்கக் கூடும். ஆகவே,  மனித உறவினால் இயேசு உருவாகவில்லை என்பதை எல்லா மக்களும் அறிந்துக் கொள்ளவேண்டும்  என்பதற்காகவே இயேசு பெற்றெடுக்கும் வரையில் மரியா யோசேப்புடன் கூடி வாழவில்லை என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளளது.

ஆனால்...

எந்த வார்த்தையை வைத்து யாரை குறைகூறலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு வேதாகமத்தை வாசிக்கும் நமது பிரிவினை சபை சகோதரர்கள் சிலர் இந்த இறைவசனத்தை மேற்கோள் காட்டி இயேசு பெற்றெடுத்த பிறகு அன்னை மரியா யோசேப்பை அறிந்தார் என்ற வேதாகமத்தில் எங்கேயும் சொல்லப்படாத தமது சொந்த கருத்தை தன் சுய உணர்வோடும், அறிவோடும் புகுத்தி,  நற்செய்தியாளர்  என்ன நோக்கத்திற்காக இந்த இறைவசனத்தை அழுத்தம் கொடுத்து  எழுதினாரோ அதை விட்டுவிட்டு அன்னையை எப்படியாவது பழிக்க வேண்டும் என்ற தங்களது கெட்ட எண்ணத்தினால் அந்த இறைவசனத்திற்கு தவறான அர்த்தம் தேடி போதிக்கின்றார்கள்.

வேதாகம வசனத்தில் தமது சொந்த கருத்துக்களை கூட்டி சேர்த்து அதன்படி போதிப்பது கடவுள் முன்னிலையில் மிகப்பெரிய குற்றம். இதை இறைவன் கடுமையாக கண்டிக்கிறார்.

திருவெளிப்பாடு 22:18 "இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எவையாவது யாரெனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.

19. இந்த நூலில் உள்ள இறை வாக்குகளுள் எதையாவது யாரெனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்."

வேதாகமத்தில் இருக்கிற இறை வசனங்களோடு தனது சொந்த சிந்தனைகளையும், யூகங்களையும், கற்பனைளையும் கூட்டிச் சேர்த்து வேதாகமத்தில் இல்லாததை இருப்பதாக காட்டி அதை அப்படியே போதிக்கும் முன்பு நமது பிரிவினை சபை சகோதரர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக. அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள முயலுவார்களாக.