நீதிமானான புனித சூசையப்பர்!

(மத்தேயு 1: 18-21)

18. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.

19. அவர்  கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20. அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்.

21. அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு  இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை  அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

கன்னி மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்ட நீதிமானான புனித சூசையப்பர், தூய ஆவியால் நிழலிடுவதால் கடவுளையே பெற்றெடுக்கும் மாபெரும் அதிசயமான உலக சரித்திரத்தையே புரட்டி போடும் அந்த இறைமகனின் பிறப்பு, அன்னை மரியாளின் வழியாக நடக்க போகிறது என்பதை கடவுளின் தூதர் மூலமாக எப்போது அறிந்து கொள்கிறாரோ அதற்கு பிறகு அன்னை மரியாளை புனித பெண்ணாகதான்  அணுகியிருப்பார்.

கடவுள் குடியிருக்கும் கோவிலாகதான் பாவித்திருப்பார். மிகுந்த மரியாதையோடும், பயபக்தியோடும் கடவுளின் தாயான அவருக்கு பணிவிடை செய்திருப்பார்.

பொது சமூகத்தில் அல்லது நமது உறவுகளில் கூட யாராவது குருக்களாகவோ, ஆயராகவோ, கன்னியராகவோ இருந்தால் நாம் அவர்களிடம் சாதாரண உறவு நிலையை கடந்து அவர்களின் புனித பணியை முன்னிட்டு இறை பணிவோடு பழகுவோம் அல்லவா!

அப்படியிருக்கும் போது தூய ஆவியாரால் நிழலிடப்பட்டு கடவுளின் திருமகனையே தன் உதரத்தில் தாங்கி, பெற்றெடுத்த அன்னை மரியாளிடம் எத்தகைய பணிவோடு நீதிமானான புனித சூசையப்பர் பழகியிருப்பார் என்பதை எண்ணிபாருங்கள்.

அங்கே சாதாரண மனித உறவுக்கு இடமில்லை. மாறாக இயேசு கிறிஸ்துவோடு இணைந்து தந்தை இறைவன், தூய ஆவியார் ஆகிய மூவொரு இறைவனின் பிரசன்னத்தில் அன்னை மரியாளும், சூசைத் தந்தையும் அந்த தெய்வீக பேரின்பத்தை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்துருப்பார்கள்.

மேலும் வேதம் நமக்கு சொல்கிறது...

எசேக்கியேல் 44:2 ல் ஆண்டவர் என்னிடம் கூறியது: இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன் வழி நுழைந்தார்.  இது மூடியே இருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு அன்னை மரியாளுக்கு வேறு பிள்ளைகளும் உண்டு  என சொல்வானகில்  அவன் அன்னையை அல்ல இயேசுவையே அவமதிக்கிறான். அவன் தன்னையும் அறியாமல் சாத்தானோடு சேர்ந்து இயேசு ஆண்டவரல்ல என அறிக்கையிடுகிறான்.

ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து ஆண்டவர் தான் என்றால், ஆண்டவராகிய கடவுள் இம்மண்ணில் வந்த வாசலான அன்னை மரியாள் வழியாக இன்னொரு உயிர் இவ்வுலகில் நிச்சயமாக வரவே முடியாது. ஒருவேளை அவ்வாறு அன்னை மரியாளுக்கு இயேசுவுக்கு பிறகு வேறு பிள்ளைகள் பிறந்திருந்தால் இயேசு கிறிஸ்து இறைவனாக இருக்க முடியாது.

ஆகவே..

அன்னை மரியாள் கன்னிகை என்று நாம் அறிக்கையிடும் போதெல்லாம் அன்னையை மட்டும் அல்ல எல்லாம் வல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே மகிமைபடுத்துகிறோம். இயேசுவே ஆண்டவர் என்று உலகிற்கு அறிவிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.