இயேசுவின் சகோதர சகோதரிகள்!

பிரிவினை சகோதரர்கள் மேற்கோள் காட்டுகின்ற இயேசுவின் சகோதரர்கள் பற்றிய இறைவசனங்கள் இனி பார்போம்.

மத்தேயு 12:47 ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்" என்றார்.

மாற்கு 3:31 அப்போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

32. அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது, அதோ உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுக் கொண்டு உம்மை தேடுகிறார்கள்" என்று அவரிடம் சொன்னார்கள்.

லூக்கா 8:19 இயேசுவின்  தாயும் சகோதர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால்  மக்கள் திரளாக இருந்த காரணத்தால்  அவரை அணுகமுடியவில்லை.

20. "உம் தாயும் சகோதரர்களும் உம்மை பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.

யோவான் 7:3 இயேசுவின் சகோதர்கள் அவரை நோக்கி, "நீர் இவ்விடத்தைவிட்டு யூதேயா செல்லும் அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்."

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களின் பெயர்கள்:

மத்தேயு 13:55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

56, இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்றார்கள்.

மாற்கு 6:3 "இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன் தானே! யாக்கோபு, யோசே, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள் இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்ள்.

இங்கே யோசே என்ற பெயர் யோசேப்பு ( JOSEPH ) என்று ஆங்கில மொழி பெயர்ப்பில் ( GOOD NEWS BIBIL) காணப்படுகிறது.

எனவே மேற்கண்ட இறைவசனங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சகோதர சகோதரிகள் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் பெயர்கள் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்று தெரியவருகிறது.

ஆனால் அவர்கள் அன்னை மரியாவின் பிள்ளைகள்  என்று வேதாகமத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.

பிரிவினை சபை சகோதர்கள் இந்த வசனங்களில் கூறப்படும் இயேசுவின் சகோதரர்கள் அனைவருமே அன்னை மரியாவிற்கு பிறந்தவர்கள் என அவர்களாகவே யூகம் செய்து அதன்படி போதிக்க தொடங்கிவிட்டார்கள். சகோதர சகோதரி உறவு பல முறைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது பிரிவினை சகோதரர்களுக்கு அன்னை மரியாவை தாக்குவதும் இழிவுபடுத்துவதும் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் இந்த சகோதர சகோதரி உறவு ஆண்டவர் இயேசுவுக்கு ஏற்படுவதற்குரிய மற்ற வழிகளையும், வாய்ப்புகளையும் குறித்து சிந்திக்காமல் இயேசுவின் சகோதர சகோதரி என கூறப்படுபவதெல்லாம் அன்னை மரியாவின் குழந்தைகள்தான் என அறுதியிட்டு கூறி அன்னை மரியாவை இழிவுபடுத்துகிறார்கள்.

இவ்வாறு அன்னை மரியாவுக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்குள் தொடக்கநூல் 3:15ல் கூறப்படும் பெண்ணான அன்னை மரியாவின் பகைவனான சாத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

வேதாகமம் குறிப்பிடுகின்ற ஆண்டவர் இயேசுவின் சகோதரர்கள் யார்? அவர்கள் யாருடைய மக்கள்?

சில பெண்மணிகள் இயேசு எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த நகரங்கள் கிராமங்களிலெல்லாம் இயேசுவின் பனிரெண்டு சீடர்களோடு சேர்ந்து அவரை பின் தொடர்ந்து செல்கிறார்கள்.

லூக்கா 8:1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைச்சாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தர்.

2. பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியாவும் 3. ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும், சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்கு பணிவிடை செய்துவந்தார்கள்.

இங்கே மகதலாமரியாவும் யோவன்னா சூசன்னா இவர்களுடன் பலப்பெண்களும் பனிரெண்டு சீடர்களுடன் இருந்து ஆண்டவருக்கு பணிவிடை செய்து அவர் சென்ற இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்றதை பார்க்கிறோம்.

இவர்களில் பல பெண்கள் ஆண்டவரின் கொல்கொதா சிலுவைப்பலி வரை அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

மத்தேயு 27:55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலைவில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

56. அவர்களிடையே, மகதலா மரியாவும் யாக்கோபு யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

இங்கே கொல்கொதாவில் ஆண்டவர் இயேசு  சிலுவையில் அறையப்பட்ட போது அங்கே மகதலா மரியாவுடன் யாக்கோபு யோசேப்பு என்பவருடைய தாயான இன்னொரு மரியாவும் நிற்பதை பார்க்கிறோம்.

இதே நிகழ்வை யோவானும் தனது நற்செய்தியில் விளக்கியுள்ளார். அங்கேயும் மகதலா மரியாவுடன் இன்னொரு மரியாவைக் காண்கிறோம். ஆனால் யோவான் இந்த மரியாவை யாக்கோபு, யோசேப்பு இவர்களின்  தாயாக வெளிப்படுத்துவதற்கு பதில் அவளது சகோதரி வழியாகவும் கணவர் வழியாகவும் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.

இந்த இன்னொரு மரியா அன்னை மரியின் சகோதரி ஆவார்.

யோவான் 19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும் மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.

இவ்வாறு அன்னை மரிக்கு ஒரு சகோதரி இருப்பதையும் அவளது பெயரும் மரியா என்பதையும் இந்த இறைவசனங்ளில் நாம் காண்கிறோம்.

இந்த மரியா குளோப்பாவின் மனைவியும், யாக்கோபு, யோசேப்பு என்பவர்களின் தாயுமாக இருக்கிறாள்.

எனவே இந்த யாக்கோபு, யோசேப்பு இயேசுவுக்கு சகோதரர்களாகிறார்கள்.