அன்னை மாமரி நித்தியக் கன்னிகை!

முப்பொழுதும் அவள் கன்னியம்மா
எப்பொழுதும் நம் அன்னையம்மா!

யோவான் 19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

26. இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம் "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.

27. பின்னர் தம் சீடரிடம்,  "இவரே உம் தாய்" என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

அன்னை மரியாவிற்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் ஆண்டவர் இயேசு தனது தாயை சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தனது மற்ற குழந்தைகளுடன் அன்னை வாழ்ந்திருக்க முடியும். மற்ற பிள்ளைகளும் அன்னையை பாதுகாத்து பராமரித்து இருப்பர்.

தங்கள் தாயைப் பராமரித்து பாதுகாப்பது பிள்ளைகளின் உரிமையாக இருக்கும் போது அந்த அவர்களின் உரிமையை ஆண்டவர் இயேசு கண்டிப்பாக மீறியிருக்கமாட்டார்.

ஆனால் ஆண்டவர் இயேசு அன்னை மரியின் ஏக மகனாக இருப்பதால்தான் அன்னையை தனது மரணத்திற்கு பிறகு யாருடைய பராமரிப்பும் இன்றி தன்னந்தனியாக விட்டுவிட விருப்பமில்லாமல் சிலுவை மரத்தடியில் தனது தாயை தனது சீடரின் பராமரிப்பில் ஒப்படைக்கின்ற பொறுப்பை அவர் செயல்படுத்துகின்றார்.

சீடரும் அன்னையை தன் இல்லத்தில் ஏற்றுக் கொள்ள, அன்னையும் அந்த சீடருடன் அவரது இல்லத்திற்கு சென்று அங்கே வசிக்கிறாள். இவ்வாறு தேவனின் தாய் ஒரு மனிதனை  தன் மகனாக தத்தெடுத்துக் கொள்கிறாள்.

இந்த நிகழ்வானது தனது தாயை இவ்வுலகின் அனைத்து மக்களின் தாயாகவும், இவ்வுலக மக்களனைவரையும் அன்னை மரியாவிற்கு பிள்ளைகளாகவும் இயேசு ஆண்டவர் ஒப்படைக்கும் ஓர் உன்னத அடையாள நிகழ்வாகவும் அமைகிறது.

இறுதியாக....

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய எல்லாம் வல்ல கடவுள் தனது தூதர் வழியாக அன்னை மரியாவிற்கு ஒரு வாக்கு கொடுத்தார்.

லூக்கா 1:31 "இதோ, கருவுற்று 'ஒரு' மகனை பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்பதே அவ்வாக்கு.

தந்தை கடவுளின் வாக்கின்படி அன்னை மரியாள் கருவுற்று பெற்றது இயேசுவை மட்டுமே.  ஆனால் கருவுற்று பெறாத பிள்ளைகளாக என்னையும் உங்களையும் சேர்த்து கோடாணக் கோடிக்கணக்கோர் இவ்வையகம் எங்கும் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருகிறார்கள்.

லூக்கா 1:48 ல் "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்"

என்று அன்னை தீர்க்கதரிசனமாக உரைத்தபடி அன்னைக்கு கொடுக்க வேண்டிய மகிமையை அன்னை மரியாவுக்கு கொடுப்போம்.

அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் - 2

கன்னிமையில் இறைவன் உருக் கொடுத்தார் -
அந்த மன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள்-2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் - அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள்
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்.

ஆமென்.