திவ்விய நற்கருணை ஸ்தாபகம்.

புதிய ஏற்பாட்டில் நான்கு இடங்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வினை நாம் காண்கின்றோம். (மத் 26:26-28; மாற் 14:22-24; லூக் 22:19-20; 1கொரி 11:23-26) இப்பகுதிகளை வாசிக்கும் போது, பல வித்தியாசங்களை நாம் உடனடியாக அவதானிக்க முடியும். ஏன் இத்தகைய வேறுபாடுகள் என்ற கேள்வி எழும்? வெவ்வேறு வழிபாட்டு பழக்கங்கள் இவ்வேறுபாட்டுக்கு காரணம் எனலாம். அதேவேளை சில ஒற்றுமைகளையும் இப்பகுதியில் நாம் காணலாம்.

ஒற்றுமையை நோக்கும் இடத்தில் இந்த நான்கு புதிய ஏற்பாடு பகுதிகளை இரண்டாக பிரிக்கலாம். மத்தேயு, மாற்கு நற்செய்தி பகுதிகள் ஒன்றாகவும், லூக்கா, 1கொரிந்தியர் பகுதிகள் இன்னுமொரு கூறாகவும் காணலாம்.

மத்தேயு, மாற்கு நற்செய்தியில் இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் பேற்றுவதையும், (மத் 26:26; மாற் 14:22) கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் (மத் 26:27; மாற் 14:23) கூறுகையில், லூக்காவும் பவுலும் இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று கூறி, ஈற்றில் 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று கட்டளையிடுவதை லூக்காவும் பவுலும் மாத்திரமே சொல்கின்றனர். (லூக் 22:19; 1கொரி 11:24-25) இக்கட்டளை மத்தேயு, மற்றும் மாற்குவில் காணப்படுவதில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன?

மத்தேயுவும், மாற்குவும் பாலஸ்தீன வழிபாட்டு மரபுகளை பின்பற்றி எழுதுகின்றார்கள். யூத வழிபாட்டு மரபைப் போன்று அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றுதலும், கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் காணலாம்.

லூக்காவும் பவுலும் அந்தியோக்கியா, அலெஸ்சாந்திரியா வழிபாட்டு முறைமைகளை கடைப்பிடிப்பது போன்று இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று சொல்கின்றார்கள். இதுவே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் கொண்டாடிய விதமாக காட்டப்படுகின்றது. இதில் இருந்து எங்களுக்கு கிடைக்கின்ற விளக்கம் என்ன?

அதாவது யூதர்களுக்கு 'நினைவு கூறல்" மிக இன்றியமையாத ஒர் அனுபவம். வாழ்வின் முக்கிய கூறு. எனவேதான் மத்தேயு, மாற்கு 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று வெளிப்படையாக கூறுவதில்லை. ஏனெனில் 'நினைவு கூறல்" அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒர் அனுபவம். அதற்கு மாறாக லூக்காவும் பவுலும் தாம் எழுதிய யூதரல்லாதோர்க்கு இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே சொல்கின்றார்கள்.

மத்தேயு நற்செய்தியின் படி இயேசு கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி கூறிய வார்த்தைகள் '.......... பலருடைய பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28) இது மாற்கு நற்செய்தியில் காணப்படுவதில்லை.

காரணம் மத்தேயு தன் நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகின்றார். இதில் மூன்று முக்கிய காரணிகளைக் காணலாம்.

முதலாவது, இயேசு துன்புறும் ஊழியனோடு அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றார். இரண்டாவது கிறிஸ்துவின் பலி, ஏனைய பலிகளை விட சிறந்தது. மூன்றாவது இயேசுவை உரோமையர்கள்/யூதர்கள் கொடுமையாக கொன்றனர் என்ற நிலைப்பாடு தவறானது.

மாறாக துன்புறும் ஊழியனாகிய இயேசு மக்களின் பாவங்களுக்காக தன்னுயிரைக் கையளித்தார் (எசா 53:6-12) என்ற உண்மைகளை வெளிப்படுத்த மத்தேயு இதனைச் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தி இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை கூறுவதில்லை. கடைசி இராவுணவின் போது இயேசு சீடர்களின் பாதம் கழுவியதையும், அதன்பின் நீண்டதோர் உரை நிகழ்த்துவதையும் காண்கின்றோம். (யோவா 13:1-17, 26) மாறாக யோவான் நற்செய்தி 6ம் அதிகாரம், இயேசு உண்மையான உணவு என்பதை வலியுறுத்துகின்றது.

இது இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையோடு (யோவா 6:1-15) தொடர்புடையது. இப்புதுமை நற்கருணையோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த இரண்டு நிகழ்வின்போது ஒரே வகையான செயலில் கிறிஸ்து ஈடுபடுகின்றார்.

இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதனை தன் சீடர்களுக்கு கொடுத்தார். யோவான் நற்செய்தியில் 6:51-58 பகுதியில் இயேசு தன்னை விண்ணிலிருந்து இறங்கி வந்த அப்பமாக அடையாளப்படுத்துகின்றார்.

'விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர். (யோவா 6:57) மானிட மகனுடைய உடலை உண்டு, இரத்தத்தை குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" (யோவா 6:53-54)

இயேசுவின் இவ்வார்த்தைகள் சிலருக்கு கடினமாக இருக்கின்றது. ஏனெனில் மோயீசனின் சட்டப்படி மனித உடல், இரத்தம் இவைகளை உண்பது தவறானதாகும். (லேவி 11:1-47; லேவி 17:10,12) கிறிஸ்துவிற்குப் பின் முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்ற குற்றஞ் சாட்டப்பட்டனர்.

ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளினை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். உடலை கொண்டுதான் ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா? என நாம் அடையாளம் காண முடியும். அதற்கு இன்றியமையாதது இரத்தம் (லேவி 17:11) இது ஒருவர் உயிருடன் உள்ளார் என்பதற்கு அடையாளம். அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறி கிறிஸ்துவை நம் ஆன்மீக உணவாக பெறுகின்றோம்.