திவ்ய பலி பூசையின் சாதாரண பாகம்

குரு: பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் நாமத்தினாலே.  ஆமென்.

குரு: சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன்.

பரி:  எனது வாலிபத்தை மகிழ்விக்கும் சர்வேசுரனிடத்தில் பிரவேசிப்பேன்.

குரு: சர்வேசுரா, பக்தியற்ற சனத்திற்கு விரோதமாய் என் நியாயத்தை விசாரித்தருள்வீராக.  கெட்டவனும், கபடுள்ளவனுமாகிய மனிதனிடத்தினின்று என்னை விடுதலையாக்கும்.

பரி: ஏனெனில், சர்வேசுரா, நீரே எனக்குப் பலமாயிருக்கிறீர்.  ஏன் என்னைத் தள்ளி விட்டீர்?  என் சத்துரு என்னைத் துன்பப் படுத்தும் போது நான் துக்கங் கொண்டு திரிவானேன்?

குரு: உமது பிரகாசத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்.  அவைகளே உமது பரிசுத்த மலைக்கும், உமது வாசஸ்தலங்களுக்கும் என்னை நடத்திக் கொண்டு போயின.

பரி: சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன்.  எனது வாலிபத்தை மகிழ்விக்கும் சர்வேசுரனிடத்தில் பிரவேசிப்பேன்.

குரு: சர்வேசுரா, என் சர்வேசுரா, நான் வீணையைக் கொண்டு உம்மைத் துதிப்பேன்.  என் ஆத்துமமே, ஏன் வருத்தமாயிருக்கிறாய்?  ஏன் எனக்குக் கலக்கம் வருவிக்கிறாய்?

பரி: சர்வேசுரன் பேரில் நம்பிக்கையாயிரு.  ஏனெனில் அவரை இன்னும் துதிப்பேன்.  என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனும் அவரே.

குரு: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக் கடவது.

பரி:  ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருக்கக் கடவது.  ஆமென்.

குரு: சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன்.

பரி: என் வாலிபத்தை மகிழ்விக்கும் சர்வேசுரனிடத்தில் பிரவேசிப்பேன்.

குரு: (சிலுவை அடையாளம் வரைந்தபடி) ஆண்டவருடைய நாமத்தில்தான் நமக்கு உதவியிருக்கிறது.

பரி:  அவரே பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவர்.

குரு: (தலை குனிந்து) சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனோடேயும். . . பரி: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரன் உம்மீது இரக்கங் கொண்டு, உம்முடைய பாவங்களை மன்னித்து, உம்மை நித்திய சீவியத்திற்கு அழைத்துச் செல்வாராக.

குரு: ஆமென்.

பரிசாரகனும் விசுவாசிகளும் சேர்ந்து தலைகுனிந்தபடி): சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலுடனேயும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பருடனேயும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சிஷ்ட இராயப்பருடனேயும், சின்னப்பருடனேயும், சகல அர்ச்சிஷ்டவர்களுடனேயும், எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும் பாவசங்கீர்த்தனம் செய்கிறேன்.  ஏனென்றால் என் சிந்தனையினாலேயும், வாக்கினாலேயும், கிரியையினாலேயும் மகா பாவங்களைச் செய்தேனே.  என் பாவமே என் பாவமே, என் பெரும் பாவமே!

ஆகையால் எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயையும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலையும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பரையும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச். இராயப்பரையும், சின்னப்பçயும், சகல அர்ச்சிஷ்டவர்களையும், எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும் நம்முடைய ஆண்டவராயிருக்கிற சர்வேசுரனிடத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

குரு:  சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரன் உங்கள் மீது இரக்கங் கொண்டு, உங்கள் பாவங்களை மன்னித்து, உங்களை நித்திய சீவியத்திற்கு அழைத்துச் செல்வாராக.

பரி:  ஆமென். (நிமிரவும்)

குரு (சிலுவை அடையாளம் வரைந்து): சர்வ வல்லபரும், தயாபரருமான சர்வேசுரன் நமது பாவங்களுக்கு மன்னிப்பையும், பொறுத்தலையும், விமோசனத்தையும் நமக்கு அளிப்பாராக.

பரி: ஆமென்.

குரு: சர்வேசுரா, தேவரீர் எங்கள் பாரிசமாய்த் திரும்பி எங்களை உயிர்ப்பித்தருளும்.

பரி:  உமது சனமும் உம்மிடம் மகிழ்ச்சி கொள்ளும்.

குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும். 

பரி: உமது இரட்சணியத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.

குரு: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பரி: என் கூக்குரல் உம்முடைய சந்நதி மட்டும் வரக் கடவது.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

குரு: ஜெபிப்போமாக (என்று சொல்லிப் பீடத்தை நோக்கி ஏறியபடி சொல்லுவதாவது):

ஆண்டவரே, தேவரீருடைய மகா பரிசுத்த சந்நிதானத்தில் நாங்கள் சுத்த மனதுடன் பிரவேசிக்க அருகராகும்படி, எங்கள் அக்கிரமங்களை எங்களிடமிருந்து அகற்றியருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் பேரால்.  ஆமென்.

குரு: (பீடத்தை முத்தி செய்து அதன் மேல் கரங்களைக் குவித்து வைத்து)  ஆண்டவரே, இங்கு எந்தெந்த அர்ச்சிஷ்டவர்களுடைய பரிசுத்த பண்டங்கள் இருக்கின்றனவோ, அவர்களுடையவும், சகல அர்ச்சிஷ்டவர்களுடையவும் பேறுபலன்களைக் குறித்து என் பாவங்களையயல்லாம் மன்னிக்கத் தயை செய்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.  ஆமென்.

குரு பூசைப் புத்தகத்தருகில் சென்று பிரவேச வாக்கியத்தை வாசித்தபின் பீடத்தின் நடுவே வந்து கிருபை மன்றாட்டைச் சொல்கிறார்:

குரு: சுவாமி கிருபையாயிரும்.

பரி: சுவாமி கிருபையாயிரும்.

குரு: சுவாமி கிருபையாயிரும்.

பரி: கிறீஸ்துவே கிருபையாயிரும்.

குரு: கிறீஸ்துவே கிருபையாயிரும்.

பரி: கிறீஸ்துவே கிருபையாயிரும்.

குரு: சுவாமி கிருபையாயிரும்.

பரி: சுவாமி கிருபையாயிரும்.

குரு: சுவாமி கிருபையாயிரும்.