சம்மனசுக்களின் கீதம், சுவிசேஷ வாசகம்

குரு: உன்னதங்களில் சர்வேசுரனுக்கு மகிமையுண்டாவதாக.

பரிசாரகனும், விசுவாசிகளும்: பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதருக்குச் சமாதானமும் உண்டாவதாக.  நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்.  உம்மை வாழ்த்துகிறோம்.  உம்மை ஆராதிக்கிறோம்.  உம்மை மகிமைப்படுத்துகிறோம்.  உமது மேலான மகிமையினிமித்தம் உமக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறோம்.  தேவனாகிய ஆண்டவரே, பரலோக அரசரே, சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரா, ஏக குமாரனாய்ப் பிறந்த சுதனாகிய ஆண்டவரே, சேசுகிறீஸ்துவே, தேவனாகிய ஆண்டவரே, சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையே, பிதாவின் குமாரனே, உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.  பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.  ஏனெனில் நீர் ஒருவர் மாத்திரமே பரிசுத்தர்; நீர் ஒருவர் மாத்திரமே  ஆண்டவர்; நீர் ஒருவர் மாத்திரமே மகா உன்னதமானவர்; சேசுகிறீஸ்துவே! யீஇஸ்பிரீத்து சாநதுவோடு பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையில் வீற்றிருக்கிறீர்.  ஆமென்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

(குரு பூசைப் புத்தகத்தருகில் சென்று, சபைச் செபம் சொல்லுகிறார்.  அதன் முடிவில்)

குரு: . . . . .என்றென்றைக்கும், சதாகாலமும்.

பரி: ஆமென்.

(அடுத்து குரு நிரூப வாசகத்தை வாசிக்கிறார். அதன் முடிவில்)

பரி: சர்வேசுரனுக்குத் தோத்திரம்.

(அதன்பின் குரு படிக் கீதத்தையும், அல்லேலுய்யா கீதத்தோடு சேர்ந்த வசனங்களையும் வாசிக்கிறார். அதன் பின் பரிசாரகன் பூசைப்புத்தகத்தைப் பீடத்தின் வலப்பக்கத்துக்கு மாற்றுகிறான்)

குரு: இசையாஸ் தீர்க்கதரிசியின் உதடுகளை எரிகிற அக்கினித் தழலைக் கொண்டு தூய்மைப்படுத்தியருளிய சர்வ வல்லபரான சர்வேசுரா, தேவரீர் என்னுடைய இருதயத்தையும், உதடுகளையும் சுத்திகரித்து, உமது பரிசுத்த சுவிசே­த்தைத் தகுந்த வண்ணம் போதிக்க நான் அருகனாகும்படி என்னை உமது தயவுள்ள இரக்கத்தினால் பரிசுத்தப் படுத்தக் கிருபை கூர்ந்தருளும்.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் பேரால்.  ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

குரு: அர்ச். மத்தேயு (மாற்கு, லூக்காஸ், அருளப்பர்) எழுதிய பரிசுத்த சுவிசே­ஷத்தின் தொடர்ச்சி (அல்லது ஆரம்பம்).

பரி: ஆண்டவரே, உமக்கு மகிமை உண்டாவதாக.

(சுவிசேஷ­ வாசக முடிவில்)

பரி: கிறீஸ்துவே உமக்குப் புகழ் உண்டாவதாக.

குரு: இப்போது வாசித்த சுவிசேஷ­ மொழிகளால் நம்முடைய பாவங்கள் ஒழியக் கடவன.