பிதாவே, உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்

"சேசுநாதரோ உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக்கொடுக்கிறேன் என்றார்'' (லூக்.23:46).

சேசுநாதர் தமது பிதாவாகிய சர்வேசுரனை அழைப்பதை அனைவரும் கேட்டு, அவரே சர்வேசுரனுடைய உண்மையான திருமகன் என்பதைப் புரிந்து கொள்ளும்படியாக, அவர் உரத்த சத்தமாய் இந்த வார்த்தைகளைக் கூறினார் என்று யூத்தி´யஸ் என்பவர் கூறுகிறார். சேசுநாதர் கட்டாயத்தால் அல்ல, மாறாகத் தமது சொந்த சித்தத்தின்படி மரிக்கிறார் என்பதை நமக்குக் கற்பிக்கும்படியாக, தாம் மிகவும் பலவீனமாகவும், தம் வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலையிலும் இருக்கும்போதும் மிகப் பலமான குரலில் இவ்வார்த்தைகளை உச்சரித்தார் என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் எழுதுகிறார். தமது வாழ்வின் போது சேசு கூறியிருந்த காரியத்தோடு ஒத்துப் போவதாக இது இருந்தது. தமது எதிரிகளின் சித்தத்தாலும், துர்ப்புத்தியாலும் அன்றி, தாமே முன்வந்து தம் ஆடுகளுக்காகத் தம்மைப் பலியாக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார்: ""என் உயிரையும் என் ஆடுகளுக்காகக் கொடுக்கிறேன். . . என்னிடத்திலிருந்து அதைப் பறிக்கிறவன் ஒருவனுமில்லை. ஆனால் நானாக அதைக் கொடுக்கிறேன்'' (அரு.10:15,18).

சிரசானது மற்ற உறுப்புகளோடு சேர்ந்து ஒரே சரீரத்தை உருவாக்குவது போல, சேசுநாதர் இவ்வாறு பிதாவுக்குத் தம்மை ஒப்புக்கொடுப்பதில், தம் வழியாக இரட்சணியம் அடையக் கூடிய விசுவாசிகள் அனைவரையும் அதே வேளையில் பிதாவுக்கு ஒப்புக் கொடுத்தார் என்று அர்ச். அத்தனாசியார் கூறுகிறார். ""பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தருளினவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு உம்முடைய நாமத்தினாலே அவர்களைக் காத்தருளும்'' என்றும், தொடர்ந்து: ""நீர் எனக்குத் தந்தருளின மகிமையை நீர் எனக்குத் தந்தருளினவர்களும் காணும்படியாக, நான் இருக்கிற இடத்தில் அவர்களும் என்னோடிருக்க வேண்டுமென்று மனதாயிருக்கிறேன்'' என்றும் சேசுநாதர் முன்பு செய்த ஜெபத்தை (அரு17:11,24) அவர் மீண்டும் இச்சமயத்தில் சொல்ல விரும்பினார் என்று இதே புனிதர் மீண்டும் குறிப்பிடுகிறார்.

இதனாலேயே அர்ச். சின்னப்பர்: ""நான் யாரை விசுவசித்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அவரிடத்தில் நான் ஒப்புவித்திருக்கிறதை அவர் அந்த மகாநாள் வரைக்கும் காக்க வல்லவரென்று நிச்சயித்திருக்கிறேன்'' என்று கூறுகிறார் (2 திமோ.1:12). அப்போஸ்தலர் சேசுவுக்காகச் சிறையில் துன்பப் பட்டுக்கொண்டிருந்தபோது, இப்படி எழுதினார். சேசுநாதர் மீதுள்ள அன்பிற்காகத் துன்புறுபவர்களுக்கு அவர் எவ்வளவு நன்றியும் பிரமாணிக்கமும் உள்ளவராயிருக்கிறார் என்பதை அறிந்தவராக, அவர் தமது துன்பங்கள் மற்றும் தமது சகல நம்பிக்கைகளின் திரட்டை அவரது திருக்கரங்களில் ஒப்புக் கொடுத்தார்.

"உம்முடைய கையில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்; சர்வ சத்தியமுடைய தேவனாகிய ஆண்டவரே! நீர் என்னை மீட்டு இரட்சித்தீர்'' (சங்.30:5) என்று தாவீதரசர் கூறியபோது, இனி வரவிருக்கும் மீட்பரில் அவர் தம் நம்பிக்கைகள் அனைத்தையும் வைத்தார். இப்போது நம் மீட்புச் செயலை முடித்து விட்ட சேசுநாதரின் மீது நாம் எவ்வளவு அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்? ஆகவே நாமும் அதிக நம்பிக்கையோடு, ""ஆண்டவரே, நீர் என்னை மீட்டு இரட்சித்து விட்டீர்! உமது கரங்களில் எனது ஆத்துமத்தை ஒப்புக் கொடுக்கிறேன்! பிதாவே, உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்!'' என்று ஜெபிப்போம். இவ்வார்த்தைகள் நமது மரணத் தருவாயில் நரக சோதனைகளுக்கு எதிராகவும், அச்சமயத்தில் நம் பாவங்களின் காரணமாக நமக்கு ஏற்படும் அச்சங்களுக்கு எதிராகவும் நமக்கு மிகப் பெரும் ஆறுதலை வருவிக்கின்றன.

ஆனால், என் மீட்பராகிய சேசுவே! என் ஆத்துமத்தை உமக்கு ஒப்புக்கொடுக்க நான் என் மரணம் வரை காத்திருக்க மாட்டேன்; இப்போதே அதை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; மீண்டும் உம்மிடமிருந்து திரும்பிக் கொள்ளும் பரிதாபத்திற்கு நான் ஆளாக விடாதேயும். என் கடந்த கால வாழ்வு உம்மை அவமதிப்பதற்கு மட்டுமே உதவியுள்ளது என்று நான் காண்கிறேன். எனக்கு இன்னும் எஞ்சியிருக்கிற நாட்களில் உம்மை நான் தொடர்ந்து நோகச் செய்ய என்னை அனுமதியாதேயும். ஓ சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையே, சிலுவையின் மீது பலியாக்கப்பட்டவரே, அன்பின் பலியாகவும், துக்க துயரங்களால் சுட்டெரிக்கப்பட்டவராகவும் எனக்காக மரித்தவரே, உமது மரணத்தின் பேறுபலன்களைப் பார்த்து நான் என் முழு இருதயதய்தோடும் உம்மை நேசிக்கவும், எனக்கு எஞ்சியுள்ள வாழ்வில் முற்றிலும் உம்முடையவனாய் இருக்கவம் எனக்கு அருள்வீராக. நீர் என் மீதுள்ள அன்பால் மரித்தீர்; நானும் உம் மீதுள்ள அன்பிற்காக மரிப்பேனாக. நீர் உம்மை முழுமையாக எனக்குத் தந்திருக்கிறீர்; நானும் என்னை முழுமையாக உமக்குத் தருகிறேன். ""ஆண்டவரே, உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன். ஆண்டவரே, சத்தியத்தின் தேவனே, நீர் என்னை மீட்டு இரட்சித்திருக்கிறீர்!'' நீர் உமது திரு இரத்தம் முழுவதையும் சிந்தினீர்; என்னை இரட்சிப்பதற்காக நீர் உமது உயிரைத் தந்திருக்கிறீர். என் பாவத்தால் இதையெல்லாம் நான் இழந்து போக அனுமதியாதேயும். ஓ என் சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன், உமது பேறுபலன்களின் வழியாக உம்மை நான் என்றென்றும் நேசித்திருப்பேன் என்றும் நம்பியிருக்கிறேன். ""ஆண்டவரே! நான் உம்மிடத்தில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்; நான் நித்திய காலத்திற்கும் வெட்கமடையேன்'' (சங்.30:1).

ஓ மரியாயே, தேவதாயாரே, நான் உங்கள் ஜெபங்களில் நம்பிக்கை வைக்கிறேன்; உங்கள் திருமகனுக்குப் பிரமாணிக்க முள்ளவனாக நான் வாழவும், இறக்கவும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அர்ச். பொனவெந்தூரோடு நானும் சேர்ந்து உம்மை நோக்கி: ""என் இராக்கினியே, உம்மில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நான் நித்திய காலத்திற்கும் வெட்கமடையேன்'' என்று சொல்வேன்.