எல்லாம் முடிந்தது

"சேசுநாதர் அந்தக் காடியை வாங்கிக்கொண்டபின்பு: எல்லாம் முடிந்தது என்றார்...'' என்று அர்ச். அருளப்பர் எழுதுகிறார் (அரு.19:30). இந்தக் கணத்தில், சேசுநாதர் தமது ஆத்துமத்தை வெளியிடுமுன், (சிலுவைப் பலியின் உருவகங்களாக மட்டுமே இருந்த) பழைய திருச்சட்டத்தின் பலிகள் அனைத்தையும், பிதாப்பிதாக்களின் அனைத்து ஜெபங்களையும், அவரது வாழ்வையும், மரணத்தையும் குறித்த அனைத்து தீர்க்கதரிசனங்களையும், தாம் அனுபவிக்க இருப்பதாக முன்னுரைக்கப்பட்ட எல்லாக் காயங்களையும், அவமானங்களையும் தம் கண் முன் கொண்டு வந்தார்; அவை அனைத்தும் இப்போது நிறைவேறி விட்டதென அவர் கண்டு: ""எல்லாம் முடிந்தது'' என்றார்.

நாம் இரட்சணியத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, மன தாராளத்தோடு ஓடி, இவ்வாழ்வில் நம் எதிரிகளோடு நமக்காகக் காத்திருக்கிற போராட்டத்தைப் பொறுமையோடு எதிர்கொள்ளும்படி அர்ச். சின்னப்பர் நம்மை ஊக்கப்படுத்துகிறார்: ""நமது விசுவாசத்தின் ஆதி கர்த்தாவும், அதைச் சம்பூரணமாக்குகிற வருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக் கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக்கடவோம்'' (எபி.12:1,2). இவ்வாறு, தம் சரீரத்தில் உயிர் இருந்த வரை, சிலுவையினின்று இறங்கி வராதிருந்த சேசுகிறீஸ்துநாதரின் மாதிரிகையைப் பின்பற்றி, முடிவு வரைக்கும் பொறுமையோடு சோதனைகளை எதிர்த்து நிற்கும்படி அப்போஸ்தலர் நமக்கு அறிவுறுத்துகிறார். இதைப் பற்றி அர்ச். அகுஸ்தினார் கூறுவதாவது: ""தாம் சிலுவையில் தொங்கியபோது, அதிலிருந்து இறங்கி வர சித்தமில்லாதிருந்தவர், உன் கடவுளில் பலமுள்ளவனாக நீ இருக்க வேண்டும் என்பதையன்றி, வேறு எதை உனக்குப் போதித்தார்?'' இறுதி வரை நிலைத்திருப்பவனைத் தவிர வேறு யாருக்கும் மகிமையின் வெகுமதி கடவுளால் தரப்படுவதில்லை என்பதை நமக்கு வலியுறுத்திக் கூறும்படி, சேசுநாதர் மரணம் வரைக்கும் தம் பலியை முழுமையாக்குவது பொருத்தமானது என்று நினைத்தார். அவ்வாறே அவர் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில்: ""முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் எவனோ, அவனே இரட்சண்ணியம் அடைவான்'' (10:12) என்று நமக்குக் கற்பிக்கிறார்.

ஆகவே, நம் சொந்த ஆசாபாசங்களின் வழியாக, அல்லது பசாசின் சோதனைகளின் வழியாக, அல்லது மனிதர்களின் துன்புறுத்தலின் வழியாக, நாம் கலக்கமுறுவதாகவும், நம் பொறுமையை இழக்கவும், கடவுளை நோகச் செய்யும் நிலைக்கு நம்மைக் கையளித்துவிடவும் தூண்டப்படுவதாகவும் நாம் உணரும்போது, சிலுவையில் அறையுண்ட சேசுவின் மீது நம் கண்களைப் பதிப்போம். அவர் நம் இரட்சணியத்திற்காகத் தம் திரு இரத்தம் முழுவதையும் சிந்தினார். அவர் மீதுள்ள அன்பிற்காக நாம் இதுவரை ஒரு துளி இரத்தத்தைக் கூட சிந்தவில்லை என்பதை யோசிப்போம்: ""பாவத்துக்கு விரோதமாய்ப் போராடுவதில் நீங்கள் இன்னும் இரத்தம் சிந்துமளவு எதிர்த்து நிற்கவில்லையே'' (எபி.12:4). ஆகவே, எந்த உலக மகிமையையாவது விட்டு விட, அல்லது எந்த ஒரு கோப உணர்வையும் தவிர்த்து விட, அல்லது ஏதாவது ஒரு மன திருப்தியை, அல்லது எதையாவது பார்க்க வேண்டுமென்ற நம் வினோதப் பிரியத்தை, நம்மிடமிருந்து விலக்கி விட, அல்லது நமக்கு வெறுப்பாயிருக்கிற எதையாவது செய்யும்படி நாம் அழைக்கப்பட்டால், இந்தப் பரிசை சேசுவுக்குக் கொடுக்க மறுப்பதற்கு நாம் வெட்கப்படுவோம். அவர் எதையும் தமக்கென நிறுத்தி வைத்துக் கொள்ளாமல் நம்மை நடத்தி வந்திருக்கிறார்; அவர் தம் சொந்த உயிரையும், தம் இரத்தம் முழுவதையும் நமக்குத் தந்திருக்கிறார். ஆகவே, அரைகுறை நேசத்தோடு அவரை நடத்துவதற்கு நாம் வெட்கப்படுவோம்.

நாம் கடமைப்பட்டுள்ளபடி, நம் எதிரிகளை முழு வலிமையோடு நாம் எதிர்த்து நின்று, சேசுகிறீஸ்துநாதரின் பேறுபலன்களிலிருந்து மட்டும் வெற்றி பெறுவோம் என நம்பி யிருப்போமாக. இந்தப் பேறுபலன்களின் வழியாக மட்டுமே புனிதர்களும், குறிப்பாகப் பரிசுத்த வேதசாட்சிகளும் தங்கள் வாதைகளையும், மரணத்தையும் வெற்றி கொண்டார்கள்: ""இந்த எல்லாக் காரியங்களிலும், நம்மை நேசித்துள்ளவரால் நாம் ஜெயங் கொள்ளுகிறோம்'' (உரோ.8:37). ஆகவே, நம் பலவீனத்தின் காரணமாக, வெற்றிகொள்வது மிகவும் கடினமாகத் தோன்றுகிற தடைகளைப் பசாசு நமக்கு முன் சித்தரித்துக் காட்டும்போது, நாம் சிலுவையில் அறையுண்டவரை நோக்கி நம் கண்களைத் திருப்புவோமாக, அவரது உதவியிலும், பேறுபலன்களிலும் முழு நம்பிக்கை கொண்டு, அப்போஸ்தலரோடு சேர்ந்து, ""என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதுவும் செய்ய என்னால் கூடும்'' (பிலிப்.4:13) என்று சொல்வோமாக. தனியாக என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் சேசுவின் உதவியோடு என்னால் எதுவும் செய்ய முடியும்.

இவ்வாறு, சிலுவையின் மீதுள்ள சேசசுவின் வேதனைகளின் காட்சியால், நம் இவ்வுலக வாழ்வின் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள நம்மை நாம் உற்சாகப்படுத்திக் கொள்வோம். ஆண்டவர் இந்தச் சிலுவையிலிருந்து சொல்வதாவது: ""இந்த மரத்தின் மீது உனக்காக நான் எவ்வளவு பெருந்திரளான வேதனைகளையும், அவமானங்களையும் அனுபவிக்கிறேன் என்று பார். என் திருச்சரீரம் மூன்று ஆணிகளில் தொங்குகிறது. என் சொந்தக் காயங்களின் மீது மட்டுமே அது இளைப்பாறுகிறது. என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் என்னை தூ´க்கிறார்கள், வேதனைப்படுத்துகிறார்கள். என் ஆத்துமம் எனக்குள், என் சரீரத்தை விட அதிகமாகத் துன்பப்படுகிறது. நான் உன் மீதுள்ள அன்பிற்காகவே எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்; நான் உன் மீது கொண்டுள்ள பாசத்தைப் பார், என்னை நேசி; துன்பங்களால் நிறைந்த ஓரு வாழ்வு வாழ்ந்த பின், உனக்காக இப்போது மிகக் கசப்பான ஒரு மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற எனக்காக எந்தத் துன்பத்தையும் அனுபவிப்பதில் நீ சோர்ந்து போகாதே.''

ஓ என் சேசுவே, நான் உம்மை நேசித்து, உமக்கு ஊழியம் செய்வதற்காக நீர் என்னை இந்த உலகில் வைத்திருக்கிறீர்; நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்கும்படி நீர் மிக அதிகமான ஒளிகளையும், வரப்பிரசாதங்களையும் எனக்குத் தந்திருக்கிறீர். ஆனால் என் நன்றியற்றதனத்தில், என் சொந்த இன்பங்களில் எதையும் நான் இழந்து விடாதபடி, எவ்வளவு அடிக்கடி உமது வரப்பிரசாதத்தை இழக்கவும், உம்மிடமிருந்து திரும்பிக் கொள்ளவும் நான் துணிந்திருக்கிறேன்! ஓ, என் பொருட்டு நீர் ஏற்றுக்கொண்ட ஆறுதலற்ற மரணத்தின் வழியாக, என் எஞ்சிய வாழ்நாட்களில் உமக்கு நன்றியுள்ளவனாக இருக்க எனக்கு பலம் தாரும். அதே வேளையில், இந்நாள் முதல் என் கடவுளும், என் நேசரும், என் சர்வமுமாகிய உம்முடையதாக இல்லாத ஒவ்வொரு நாட்டத்தையும் என் இருதயத்திலிருந்து அகற்றி விட நான் விரும்புகிறேன்.

மரியாயே, என் தாயாரே, என்னை இவ்வளவு அதிகமாக நேசித்திருக்கிற உங்கள் திருமகனுக்குப் பிரமாணிக்கமாக இருக்க எனக்கு உதவுங்கள்.