உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆத்துமங்கள்

அவர்களுக்கு நம் உதவி தேவை - அவர்களுக்கு உதவ நமக்கிருக்கும் நேரம் குறைவு - நித்தியம் என்றென்றும் இருப்பது.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆர்வமில்லாதவன் யார்? எங்கோ ஓரிடத்தில், கல்லறை என்று அழைக்கப்படுகிற அந்தத் துயரார்ந்த பெட்டியில் தன்னுடைய பொக்கிஷம் ஒன்றை எப்போதாகிலும் புதைத்து விட்டு வராதவன் யார்? அப்படிப் புதைக்கப்பட்ட யாரும் அவர்களுக்கு இல்லை என்றாலும், ஒருபோதும் ஒரு நண்பனை இழந்திராத மிகச் சிலரில் அவர்களும் அடங்குவர் என்றாலும், அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் மீது எப்படியும் பலமுள்ளதும், ஆழ்ந்ததுமான ஆர்வம் கொண்டுதான் தீர வேண்டும்,

ஏனெனில் கடவுளின் நண்பர்கள் அங்கிருக்கிறார்கள். கடவுளோ அவர்கள் வேறோர் இடத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இந்த அன்பின் கைதிகளை விடுவிக்க உதவும்போது, நீ என்ன செய்கிறாய் என்பதை சிந்தித்துப் பார். மிக அச்சத்திற்குரிய கசப்பான வேதனையிலிருந்து ஓர் ஆத்துமத்தை விடுவிக்கிறாய்; மோட்சத்தில் மேலும் ஒரு பிரஜையைக் கொண்டு போய்ச் சேர்க்கிறாய்; சம்மனசுக்களுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறாய். சேசுவையும், அவருடைய மாதாவாகிய கன்னி மாமரியையும் தேற்றி, அவர்களை மகிழ்விக்கிறாய்....

(சகோதரி சார்ல்ஸ் பொரோமியோ, O.S.D.-யின் எழுத்துக்களிலிருந்து)

நான் இன்றிரவு உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தேன். ஒரு பாதாளத்திற்குள் நான் நடத்திச் செல்லப்பட்டது போலிருந்தது, அங்கே ஒரு பெரிய கூடத்தை நான் கண்டேன். பரிதாபத்திற்குரிய ஆத்துமங்களை இவ்வளவு அமைதியோடும், துயரத்தோடும் பார்ப்பது மனதை நெகிழ்த்துவதாக இருக்கிறது. இருந்தாலும், கடவுளின் நேச இரக்கத்தைப் பற்றிய அவர்களுடைய தியானத்தின் காரணமாக, தங்கள் இருதயங்களில் அவர்கள் மகிழ்ச்சியோடிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு மகிமையுள்ள சிங்காசனத்தின் மீது, நான் திவ்விய கன்னிகையைக் கண்டேன், நான் முன் ஒருபோதும் கண்டிராத அளவுக்கு, அவர்கள் அதிக அழகாக இருந்தார்கள். ''உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள துன்புறும் ஆத்துமங்களுக்காக ஜெபிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்துமாறு நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில், நன்றியின் காரணமாக அவர்கள் உங்களுக்காக நிச்சயம் மிக அதிகமாக ஜெபிப்பார்கள்.

இந்தப் பரிசுத்த ஆன்மாக்களுக்காக செய்யப்படும் ஜெபம் கடவுளுக்கு மிகப் பிரியமானதாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் அதிக சீக்கிரமாக அவரைக் காண அது அவர் களுக்கு உதவுகிறது'' என்று திவ்விய கன்னிகை கூறினார்கள்.... (முத். அன்னா கேத்தரீன் எம்மெரிக்கின் வெளிப்பாடுகளில் இருந்து).

கார்மேல் மலை மாதாவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களும் இந்த அற்புதமான புத்தகத்தை வாசிப்பவர்கள் மற்றும், இதைப் பரப்ப உதவுபவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு உதவி செய்வார்களாக.