பீடத்தை முத்தி செய்தல்!

உரோமையர் கிரேக்க கலாச்சாரத்தின் படி வீட்டில் உண்ணும் பிரதான உணவு வேலை ஓர் புனிதமான நிகழ்வாக இருந்தது. எனவே உணவுருந்த அமர்ந்திருப்போர் உணவு மேசையை முத்தி செய்வர்.

கொன்ஸ்டன்டைன் மன்னின் காலத்தில் வழிபாட்டிற்காக இடங்கள் அமைக்கப்பட்டபோது இப்பழக்கமும் உள்வாங்கப்பட்டு அதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது. காரணம் திருப்பீடம் கிறிஸ்துவை அடையாளப்படுத்தியது.

மேலும் திருப்பீடம் வீரசாட்சிகளின் கல்லறைமேல் அல்லது அவர்களுடைய புனித பண்டம் திருப்பீடத்தில் பதிக்கப்பட்டது. திருப்பீடத்திற்கு தூபம் இடுதல் இன்னும் ஒரு மரியாதைக்குரிய செயலாக மாறியது. உரோமைய அரசனுக்கும் வேற்று தெய்வங்களுக்கும் தூபம் இடுவதனால் இச்சடங்கு மிகவும் மெதுவாகவே திருச்சபையின் வழிபாட்டுமுறைக்குள் புகுந்தது. இதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது.

முதன்மையாக தூபம் இறைவனை நோக்கி எழும் ஜெபமாக (திருவெளிபாடு 5:8) அடையாளப்படுத்தப்பட்டது. மேலும் பலிப்பீடம் கிறிஸ்துவை குறிப்பதனால் அது பலியிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு எதற்கும் அதனை பயன்படுத்தக்கூடாது. எனவே திருப்பலிக்கு தேவையான திருப்பலி புத்தகம். திருமேனிதுகில், திருப்பாத்திரங்கள், திருமேனித்தட்டு போன்றவை மட்டுமே பீடத்தின் மேல் வைக்கப்பட வேண்டும் என்ற பொதுப்போதனை சொல்கிறது.

ஆகவே தான் பீடத்தின் மேல் பூக்கள் கூட வைக்க கூடாது பீடத்திற்கு அருகில் வைக்கப்படல் வேண்டும். அதுவும் உயிருள்ள, உயிர் தருகின்ற இறைவனுடைய பிரசன்னத்தில் செயற்கை பூக்கள் அல்ல இயற்கை பூக்கள் மாத்திரமே வைக்கப்படல் வேண்டும். மேலும் திருப்பலியின் ஆரம்பத்தில் திருப்பீடம் வெறுமையாக இருக்க வேண்டும். காணிக்கையின் போது தான் ஏனையவை திருப்பீடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

மூவொரு கடவுள் பெயரால்

பீட வணக்கம் முடிந்ததும் குரு வழிபாட்டு 'தலைவருக்குரிய இடத்திலிருந்து தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே" என்று திருப்பலியை தொடங்குகின்றார். நாம் மூவொரு இறைவன் பெயரால் திருமுழுக்கு பெற்றோம் என்பதை இது நினைவூட்டுகின்றது.

சிலுவை வழியாகத்தான் நமக்கு மிட்பு உண்டாகிற்று. 'நாம் வாழ்வதும். நாம் இருப்பதும், நாம் இயங்குவதும் அவரிலே தான்" என்ற உண்மையை இது உணர்த்துகின்றது. மேலும் நாம் எதை செய்ய தொடங்கினாலும் அதை கடவுளின் பெரால் செய்யத்தொடங்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றது.