நான் மோட்சத்திற்குப் போவேனா?

1917, மே 13-ம் நாளன்று தாம் வழங்கிய முதலாம் காட்சியில் தேவமாதா இவ்வாறு பாத்திமா சிறுவர்களிடம் உரையாடினார்கள்: ''பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒரு தீமையும் செய்ய மாட்டேன்...'' என்று இனிய குரலில் மாதா பேசினார்கள். அதனால் திடமடைந்த சிறுவர்களில் லூசியா மாதாவிடம்: ''நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்க, ''நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்" என்று மாதா பதிலளித்தார்கள்.

பின்னர், 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டுப் பதில் பெற்ற லூசியா அடுத்ததாக மிக அற்புதமான ஒரு கேள்வியை தேவதாயிடம் கேட்டாள். "நான் மோட்சத்திற்குப் போவேனா?" அதற்கு மாதா, ''ஆம், போவாய்'' என்றுரைத்தார்கள். பின்னர் லூசியா : ''ஜசிந்தா?'' என்று கேட்க, ''அவளும் போவாள்" ; ''பிரான்சிஸ்?'' என்ற லூசியாவின் வினாவிற்கு மாதா, "அவனும் போவான், ஆனால் அதற்கு முன் அவன் அநேக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும்'' என்று பதிலளித்தார்கள்.

பின்னர் ஏற்கெனவே இறந்திருந்த தஸ்நேவிஸ் மேரி மற்றும் அமெலியா பற்றிக் கேட்டு, அவர்கள் முறையே மோட்சத்திலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருப்பதான செய்தியை லூசியா பெற்றாள்! (காண்க: பாத்திமா ! காட்சிகள், பக். 35, 36).

இப்படியாக, பாத்திமாவில் காட்சியளித்த மாமரியால் பேசப்பட்ட முதல் வார்த்தைகள் மனிதர்களின் மரணத்திற்குப் பிறகான நித்திய உண்மைகளான மோட்சம் மற்றும் உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றியதாக இருந்தது. தனது மூன்றாம் காட்சியில் (1917 ஜூலை 13) நரகம் இருத்தலின் சத்தியத்தை மிக அழுத்தமான முறையில் மாதா காட்டினார்கள்.

நமது உள்ளத்தில் எழ வேண்டிய கேள்வி: நான் மோட்சத்திற்குப் போவேனா? பாத்திமா முதல் காட்சியில் மாதா, "நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்" என்று கூறி யதும், ஒரு குழந்தைக்கே உரிய ஆர்வத்துடன் லூசியா, "நான் மோட்சத்திற்குப் போவேனா?'' என்று கேட்டாள். மனுக்குல இரட்சணியத்துக்காக வழங்கப்பட்ட பாத்திமா காட்சிகளில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் கடவுளால் சித்தம் செய்யப்பட்டது என்பது அறிந்ததே! அதன்படியே, இஸ்பிரீத்து சாந்துவால் ஏவப்பட்டுலூசியா அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

உலக ஆதாயமும், கடவுள் மறுப்பு நாஸ்தீக மனப்பான்மையும் மேலோங்கி, குறுகிய கால வாழ்நாட்களையே கொண்ட ஒவ்வொரு மனிதனும் உலக மாயையிலேயே மூழ்கித் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருக்கும் இயந்திரமயமான நமது காலத்தில் இந்தக் கேள்வி எப்பேர்ப்பட்ட பாடமாக இருக்கிறது! இன்றைய நாட்களில் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் மனதில் கூட இத்தகைய கேள்வி எழுமா என்பதே சந்தேகம். சிறுமி லூசியாவின் இந்தச் சிறு கேள்வி, எல்லா அர்ச்சியசிஷ்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளின் சுருக்கமாகவும், இரட்சணிய அலுவலின் இலக்காகவும் திகழ்கிறது என்றே கூறலாம்.

மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதே ''சர்வேசுரனை அறிந்து சிநேகித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவுமே" என்று நமது ஞானோபதேசம் போதிக்கிறது. நமது இவ்வுலக ஜீவியத்தின் அனைத்து செயல்களும் "நான் மோட்சத்துக்குப் போவேனா?" என்ற ஒரே அவசியமான - UNUM NECESSARIUM - ஒன்றைச் சுற்றியே திகழ்கிறது எனலாம். ஆனால் உலக மயமான சந்தோஷங்கள், உலகப் பொருட்கள் மீதான ஆசைகள் - ஆவல்களுடன் ஒப்பிடும்போது, "மறுமை" மீதான நமது அக்கறை, ஆவல், குறைவுள்ளதாவே இருக்கிறது!

இன்று உலக மக்களின், அதிலும் குறிப்பாக கத்தோலிக்க மக்களின் வாழ்வுகளைச் சற்று நோக்கினால் மரணத்தைப் பற்றியோ, இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நாம் எதிர்கொள்ள இருக்கும் நித்திய உண்மைகளான மோட்சம், உத்தரிக்கிற ஸ்தலம் மற்றும் நரகம் பற்றியோ எந்த சிந்தனை யும் இல்லாதவர்களாக வாழ்வதை அறியலாம். ஏதோ இவ்வுலக வாழ்வு நிலையானது போலவும், எந்த நொடியிலும் நமக்கு மறுமை திறந்து நித்தியத்திற்கு உட்படுவோம் என்ற எண்ணம் கடுகளவும் இல்லாதவர்களாகவே மனிதர்கள் வாழ்கிறார்கள்.

கிறீஸ்தவ மக்கள் தங்களது விசுவாசம் சுட்டிக் காட்டும் இந்த உண்மைகளை நினைக்கவே அஞ்சுகிறார்கள் - பயப்படுகிறார்கள். அதற்கேது வாக நம் ஆலயங்களின் பிரசங்கங்களில் மோட்சம் நரகம் பற்றிய போதனைகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இன்றைய நவீன குருக்கள் அவைகளை விசுவசிப்பதில்லை. ஏனெனில் குரு மடங்களில் அவர்களுக்கு அவை கற்பிக்கப்படுவதில்லை . அப்படியே விசுவசித்தாலும், வசதி யாக, நமதாண்டவரின் அளவற்ற "தேவ இரக்கத்தின் மீது சாக்குப்போக்குச் சொல்கிறார்கள். அளவில்லாத இரக்கம் மிகுந்த சர்வேசுரன் பாவிகளைத் தண்டிப்பதில்லை - மன்னிக்கிறார்.

எனவே நரகம் வெறுமையாக - காலியாகவே இருக்கிறது என்ற அபத்தத்தின் உச்சத்துக்கே போகும் நிலையையும் நாம் பார்க்கிறோம். போதிப்பவர்கள் இப்படி இருந்தால், போதிக்கப்படுபவர்களின் கதி அதோ கதிதான்! இதுதான் இன்றைய நவீன சங்கச் சபையின் நிலை!! இதனை முன்பே அறிந்து தான் தேவதாய் தனது பாத்திமா முதல் காட்சியிலேயே மோட்சம், உத்தரிக்கிற ஸ்தலம் என்ற நித்திய உண்மைகளை நமக்குக் கற்பிக்கிறார்கள், தனது ஜூலை காட்சியில் நரகத்தையே திறந்து காட்டினார்கள். அதற்குத் தப்பித்து, மோட்சம் செல்ல வழியையும் கூறினார்கள்.