எப்படி இருக்க வேண்டும் கத்தோலிக்க மக்களின் மனப்பான்மை?

கத்தோலிக்க மக்களாகிய நமது மனப்பான்மை பாத்திமா சிறுவர்களின் மனப்பான்மையோடு ஒத்திருக்கவேண்டும். லூசியா மாதாவிடம் தான் மோட்சம் செல்வதை மட்டுமே கேட்காமல் ஜஸிந்தா, பிரான்சிஸம் அங்கு செல்ல ஆவல் கொண்டவளாகக் கேள்விகளைக் கேட்டாள். அதோடு மட்டுமின்றி தனது அயலகத்தாரின் (அமெலியா, தஸ்நேவிஸ் மேரி) ஆன்மாக்களின் மீதும் அக்கறை கொண்டவளாக மாதாவிடம் வினாக்களை எழுப்பினாள்.

கத்தோலிக்கர்களாகிய நாமும் நமது ஆத்தும இரட்சணியத்தை மட்டுமல்லாமல் "எனது குழந்தைகளின் மறுமை (மரணத்திற்குப் பிந்திய வாழ்வு எப்படியிருக்கும்? எனது நண்பர்கள், அயலார்கள், உறவினர்கள், என் எதிரிகள், நம் நாட்டின் சக பிரஜைகள் மற்றும் கிறிஸ்துநாதரின் ஞான சரீரமாகிய திருச்சபையின் மற்ற உறுப்பினர்களின் நித்திய முடிவு என்னவாக இருக்கும்? அவர்களின் வாரிசுகளின் நித்திய வாழ்வு எப்படி இருக்கும்? அவர்கள் மோட்சத்திற்குப் போவார்களா?" என்று அக்கறை கொள்பவர்களாகத் திகழ வேண்டும்.

உண்மையான கத்தோலிக்கப் பிறர் சிநேகம் நாம் நேசிப்பவர்களை இரட்சணியத்திற்கு மோட்சத்துக்கு அழைத்துச் செல்வதில்தான் அடங்கியிருக்கிறது. பாத்திமா சிறுவர்கள் இத்தகைய பிறர் சிநேகத்தைக் கொண்டிருந்தார்கள். சிறுமி அர்ச். ஜஸிந்தா, 'நரகம்! நரகம்! ஆன்மாக்கள் நரகத்துக்குச் செல்வது பற்றி எவ்வளவு வருந்துகிறேன்!'' என்றும், ''பிரான்சிஸ் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க வா. நரகத்தில் ஆன்மாக்கள் விழாமலிருக்க நாம் அதிகமாக ஜெபிப்பது அவசியம். நிறைய பேர் அங்கு செல்கிறார்கள். ஆ எத்தனை பேர்!'' என்று நரகத் துக்குச் செல்லும் ஆன்மாக்களைப் பற்றிக் கவலை கொண்டு ஜெபித்தாள். தேவதாய் கேட்டுக் கொண்டபடியே, ''பாவிகள் மனந்திரும்பும்படியாகக் கடவுள் அவர்களுக்கு அனுப்பும் எல்லாத் துன்பங்களையும் பரிகாரமாக ஏற்று" ஒப்புக் கொடுத்தார்கள் அந்தச் சிறுவர்கள்.

ஆம்! நீ மோட்சம் செல்வாய்! 

''பிரான்சிஸ் மோட்சம் செல்வானா?'' என்று லூசியா கேட்டதற்கு, ''அவனும் போவான், ஆனால் அவன் அநேக ஜெபமாலைகளை ஜெபிக்க வேண்டும்" என்று மாதா பதிலளித்தார்கள். அதன்படியே பிரான்சிஸ் அநேகமதிக ஜெபமாலைகளை ஜெபித்தான். (சேசு, மாதாவையும் நேசித்தான்) இன்று பாத்திமா சிறுவர்களான ஜஸிந்தாவும், பிரான்சிஸம் அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்டு, பீட வணக்கத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள். அதாவது, மாதா முன் உரைத்தபடியே அவர்கள் மோட்சத்துக்குச் சென்று விட்டார்கள்.

நம் நிலையும் இதுதான். ''ஆம், நீ மோட்சம் செல்வாய்!'' என்று மாதா நமக்கு உறுதியளிக்க வேண்டுமானால், சிறுவனான அர்ச். பிரான்சிஸிடம் மாதா கேட்டதை நாமும் செய்ய வேண்டும். அதாவது அநேக ஜெபமாலைகளை ஜெபிக்க வேண்டும்! ஜெபமாலை என்பது மாமரி நமது ஆன்மாவை மீட்கப் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த அருட்கருவியாகத் திகழ்கிறது. அதனால்தான் தனது ஆறு காட்சிகளிலும், தினமும் ஜெபமாலை ஜெபிக்கும்படி மாதா கேட்டார்கள். அப்படி ஜெபித்தோமானால், சேசு மரிய இருதயங்களை நேசித்து ஆறுதல் அளிக்கும் வல்லமையையும் பெறுவோம். மேலும் தேவத்திரவிய அனுமானங்களை (தேவநற்கருணை, பாவசங்கீர்த்தனம்) அடிக்கடி பெற்று தேவ வரப்பிரசாதத்தையும், இரக்கத்தையும் அடைந்து கொள்வோமாக. இவ்வுலகில் பாவத்தின் நிழலிலிருந்து விடுபட்டு, அர்ச்சியசிஷ்டவர்களாக வாழ வரப்பிரசாதங் களைப் பெற்று, மோட்சம் செல்லத் தகுதியானவர்களாவோம்!

நமது கடமை! மாதாவின் அன்புப் பிள்ளைகளான நமது உள்ளத்தில் ''நான் மோட்சத்துக்குப் போவேனா?" என்ற வினாவை எப்போதும் கொண்டிருந்து, அதற்கேதுவான வாழ்வை வாழ முயல்வோமாக. பாத்திமா செய்திகளில் மாதா நமக்கு மோட்சம் செல்ல உதவும் உபாயமான மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியை (ஜெபமாலை பக்தி உள்ளடக்கம்) அனுசரித்து, மாதா கேட்டுக்கொள்ளும் ஜெபமாலைகளைப் போதிய அளவு ஜெபித்து, 'ஆம்! நீயும் மோட்சத்துக்குப் போவாய்!'' என்ற அவர்களது புனித வார்த்தைகளைக் கேட்க முயன்று பெற்றுக்கொள்வோமாக!

மரியாயே வாழ்க!