அசுத்த மோக பாவங்கள்

ஆத்துமங்களே, நம் ஆண்டவரின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் : "புனிதமாய்ப் பிறந்த உன் ஆத்துமம் (நரக) வேதனையை அடைவதற்குத் தகுதியாகும்படி, (ஏவாளின்) அந்தக் கனி அவ்வளவு இனிமையானதா? உன் இருதயம் ஒரு அசுத்த சரீரத்தில் வாழ்ந்து உயிரையும், ஆசாபாசத்திற்கு உஷ்ணத்தையும் தரும்படி துடிக்கவும், அதனால் அது தீமையால் சோர்ந்து போகவும் அதைக் கட்டாயப்படுத்தினாயே, அவ்வளவிற்கு அந்தக் கனி இனிமையானதா?'' (கடவுள் - மனிதனின் காவியம், புத்தகம் 2, அத். 123, பக். 745). இந்த அசுத்த சிற்றின்பத்திற்காக ஆத்துமத்தையே விலையாகக் கொடுக்கத் துணிகிறார்கள்? ஏனெனில் அவர்கள் கடவுளின் அன்பாகிய பேரின்பத்தை அறியவில்லை!

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ இஷ்டப்பிரசாதத்தால் உங்கள் ஆன்மா நிறைக்கப் படும் போது, இந்தப் பாவமும் அதன் சந்தர்ப்பங்களும் கசப்பாக, அருவருப்பாகத் தோன்றுவதை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த அசுத்தக் கனி அதிக சுவையுள்ளது எனக் கண்டு மீண்டும் அந்த மரத்திடம் ஏன் திரும்பிச் செல்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் அவரை நேசிக்கவில்லை. அவரை நேசிக்கும்படி உங்களை நீங்கள் பலவந்தப்படுத்தவில்லை, திவ்ய நன்மை, தேவ நற்கருணை சந்திப்பிலும், சேசுவின் திருப்பாடுகளின் தியானத்திலும் அவரது அன்பில் திளைத்து, உங்கள் பிரதியன்பை அவருக்கு நீங்கள் செலுத்துவதில்லை என்பதுதான் காரணம்.

தேவ இஷ்டப்பிரசாதத்தின் இனிமை குறைவதாகத் தோன்றும்போது உடனே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடனே மீண்டும் பாவசங்கீர்த்தனம் செய்வதும், அதிக நேசப் பற்றுதலோடு திவ்ய நற்கருணை நாதரைத் தேடிச் செல்வதும்தான். மேலும் ஜெபமாலையைக் கொண்டு மகா பரிசுத்தவதியும், பாவமே அறியாதவர்களும், அமலோற்பவியுமான மாதாவோடு உங்க சேர்த்துக் கட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், குறிப்பாக சோதனை உங்களைத் தாக்கும் ஒவ்வொரு கணமும் மாதாவுக்கு அன்போடும், நம்பிக்கையோடும் உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்போது, உங்கள் கற்பு பரிசுத்தமாகவும் உங்கள் ஆன்மாவிலுள்ள தேவ இஷ்டப்பிரசாதமும், அது தருகிற தெய்வீக சமாதானமும் பத்திரமாகவும் இருக்கும். மாதா எங்கே இருக்கிறார்களோ, அந்தத் திசை நோக்கிப் பசாசு தலைவைத்துப் படுக்கவும் துணிவதில்லை!

திருச்சிலுவை சிநேகம் : துன்பங்களைப் பொறுமையோடு மட்டுமின்றி அன்போடும் ஆர்வத்தோடும் ஏற்றுக்கொள்ளுதல்

''நாம்... சர்வேசுரனுடைய சுதந்திரக்காரரும், கிறீஸ்துநாதருக்கு உடன் சுதந்திரக்காரராகவும் இருக்கிறோம். ஆயினும் அவரோடு பாடுபட்டால்தான் அப்படி இருப்போம்" (உரோ 8:17). இவ்வாறு கடவுள் அனுப்பும் துன்பங்களும், நம் தவமுயற்சிகளும், பரித்தியாகங்களும் கிறிஸ்துவின் சிலுவையோடு நம்மைப் பிணைக்கின்றன, அதன் மூலம் அவரது நித்திய மகிமையில் நாம் பங்குபெறச் செய்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் பொறுமையோடு மட்டுமின்றி, மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொள்கிற துன்பங்கள், நமக்காக சகல துன்பங்களையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் அளவற்ற விதமாய் நம்மை நேசித்த ஆண்டவருக்குப் பதில் சிநேகம் காண்பிப்பவையாக இருக்கின்றன. ''கடவு ளுக்காகத் தாங்கிக் கொள்ளப்படும் துன்பங்கள் தான் அவர் மீது நமக்குள்ள நேசத்திற்கு அனைத்திலும் மேலான சாட்சியமாக இருக்கின்றன. சேசுக்கிறிஸ்துநாதரை நேசிக்கும் ஓர் ஆன்மா, அவர் நடத்தப் பட்டது போலவே உலகத்தால் நடத்தப்பட வேண்டும் : அது வறுமையிலும், நிந்தித்து, அவமதிக்கப் பட்ட நிலையிலும் இருக்க ஆசைப்பட வேண்டும்" என்று அர்ச். அல்போன்ஸ்லிகோரியார் கூறுகிறார்.

அன்பர்களே, இந்த இடத்தில் உங்களுக்கு ஓர் இரகசியத்தைக் கூற விரும்புகிறோம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும், வெறுத்தாலும், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பங்கள் வரத்தான் போகின்றன. எனவே எப்படியும் , நீங்கள் அனுபவித்தே தீர வேண்டிய அவற்றை நீங்கள் ஏன் மனமுவந்து ஏற்றுக்கொள்ளக்கூடாது? அப்படி ஏற்றுக்கொள்வதால் நித்திய பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்கிறீர்கள், அவற்றையே வெறுப்போடு அனுபவிப்பீர்கள் என்றால், அவையே உங்கள் ஆன்ம வாழ்வுக்குக் கேடாகவும் மாறி விடக்கூடும்.

மற்றொரு இரகசியம்: நம் வாழ்நாளில் வீட்டிலோ, மடத்திலோ நமக்கு ஏற்படும் அவமானங்கள், நிந்தையான, கசப்பான வார்த்தைகள் நம் ஆத்துமத் தைக்குத்திக் காயப்படுத்தும்போதெல்லாம் சேசுவின் திருப்பாடுகளையும், நமக்காக அவர் எவ்வளவு அதிகமான நிந்தை அவமானங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார் என்று தியானித்து, அவற்றைப் பொறுமையாக ஏற்றுக்கொள் வது நமக்கும் பிறருக்கும் தேவையான இரட்சணியப் பேறுபலன்களை ஏராளமாகப் பெற்றுத் தரும். மேற்கூறிய இரு துன்பங்களையும் சேசுவுக்கும் மாதாவுக்கும் நிந்தைப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கலாம்.

இவ்வுலக வாழ்வில்தான் எத்தனை துன்பங்கள், பிரச்சினைகள் மின் கட்டணம், வீட்டு வரி, சாலை வரி, தொலைபேசிக் கட்டணம், வண்டிக் காப்பீடு, குழந்தைகளின் பள்ளி, கல்லூரிச் செலவுகள், பல்வேறு சான்றிதழ்களுக்காக அரசு நிறுவனங்களுக்கு நடையாய் நடத்தல், குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகள் என்று ஒரு குடும்பத் தலைவன் எத்தனை பிரச்சினைகளை நாள்தோறும் எதிர்கொள் கிறான்? தன் தங்கையின் (சகோதரிகளின்) திருமணத்திற்காகத் தன் வாழ்வையே இழந்து, மறந்து, இயந்திரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பாசமிக்க சகோதரர்கள் நம்மிடையே இல்லையா? நீங்கள் குடும்ப பாரம் தாங்காமல் காடுகளுக்கு ஓடிப் போய்விடுவதில்லையே! எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்தபடி தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறீர்கள்? இந்தத் துன்பங்களுக்குக் கைம் மாறாக உங்களுக்குக் கிடைப்பது தியாகத்தின் ஆன்ம திருப்தி மட்டும்தானே? வேறு எந்தப் பலனும் இல்லை என்று நன்கு தெரிந்தும், உங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?

அப்படியானால், கற்பனைக்கும் எட்டாத ஒரு மகா உன்னத சம்பாவனைக்காக, சிறிது காலம் நாம் ஏன் துன்பங்களை மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் ஏற்றுக்கொள்ளக் கூடாது? அதை விட மேலாக, நம் மீதுள்ள நேசத்திற்காகத் தம் ஏக சுதனையே பலியாக்கத் துணிந்த நம் நேசத் தந்தைக்குப் பிரதிநேசம் காட்டும்படி நாம் ஏன் இந்தத் துன்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? உண்மை யான தேவ சிநேகம் துன்பங்களை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. இதனால்தான் அர்ச்சியசிஷ்டவர்கள் துன்பங்களை ஏக்கத்தோடு தேடினார்கள். இதனால்தான் அர்ச். பிரான்சிஸ் அசிசியார் தம் செல்வப் பெருக்கைத் துறந்து, தரித்திரத்தைத் தம் எஜமானியாகத் தேர்ந்து கொண்டார்; நம் ஞானத் தகப்பன் அர்ச். சவேரியாரும் கெளரவமிக்கதொரு வாழ்வின் சொகுசுகளையெல்லாம் துறந்து, அந்நிய நாடுகளில் ஆன்மாக்களின் மீது ஏக்கம் கொண்டு சுற்றித் திரிந்தார்; செல்வச் சீமாட்டியாய்ப் பிறந்த அர்ச். பாஸி மரிய மதலேனம்மாள் மடத்தினுள் தன்னை அடைத்துக் கொண்டு, சேசுநாதரின் திருப்பாடுகளைத் தன் சரீரத்தில் அனுபவிப்பதில் இன்பம் கண்டாள். ஆம் சகோதரரே, நம் துன்பங்கள் கடவுளுக்கும் அவரது திருமாதாவுக்கும் ஆறுதல் அளிக்கின்றன, மிகப் பெரும் இரட்சணியப் பேறு பலன்களை விளைவிக் கின்றன, இறுகிப் போன ஆன்மாக்களையும் கூட அவை மனந்திருப்பவல்லவையாக இருக்கின்றன.

ஆம்! "துன்புறுவோரே, ஆண்டவர் தொலைவாக இல்லை, அவர் மிக அருகிலிருந்து, உங்க ளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தத் துயரத்தை, இந்த வேதனையை ஏற்றுக்கொள்ளும்படி அவர் நம்மிடம் கெஞ்சுகிறார். இந்தத் துயரங்களை நமக்குத் தருவது அவரை வேதனைப்படுத்தி னாலும் அவர் தம்மை அறிந்திருப்பது போல நாமும் அவரை அறியவும், கடவுளுக்குச் சொந்தமான வர்களாக ஆகவும் இது ஒன்றுதான் வழி என்பதை அவர் அறிந்திருக்கிறார்" (அர்ச். குழந்தை தெரேசம் மாள்). துன்பம் இன்றும் நாளையும்தான்; அதன்பின் நித்தியப் பேரின்பம்! (கிறீஸ்துநாதர் அனுசாரம்).