ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது!

1. மரணத்தால் நிரூபிக்கப்படும் ஆத்துமத்தின் இருத்தல்

இதை எண்பிப்பதற்கான முதல் வாதம் மனித மரணத்தில் அடங்கியிருக்கிறது. அவன் இரவில் படுக்கச் சென்ற போது உயிரோடிருந்தான். காலையில் செத்துக் கிடக்கிறான். அவனுடைய இந்த இரு நிலைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? நேற்று அவன் உயிரோடு இருந்ததற்கு மூல காரணமாக, ஆதாரமாக இருந்தது என்ன? அதைத்தான் நாம் ஆத்துமம் என்கிறோம்.

ஆன்மாவே சரீரத்தின் உயிராகவும், இயக்க சக்தியாகவும் இருக்கிறது. ஆன்மா இல்லையேல், அதாவது ஆன்மா சரீரத்தை விட்டுப் பிரிந்தவுடன், சரீரம் இனி பயனற்றதாகி, தான் எடுக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பிப் போகிறது.

2. தேவ நீதியால் நிரூபிக்கப்படும் ஆத்துமத்தின் இருத்தல் 

ஆன்மா என்பதன் இருத்தலுக்கான இரண்டாவது நிரூபணம் தேவ நீதி ஆகும். மரணத்திற்குப்பின் வாழ்வு இல்லையெனில், தேவ நீதி என்ற ஒன்று இல்லை என்றாகி விடும். இவ்வாழ்வில் நன்மையும் தீமையும் சமநிலையில் இல்லை. நல்லவர்கள் பெரும்பாலும் துன்பப்படுகிறார்கள். தீயவர்களோபெரும்பாலும் செழிப்புற்றிருக்கிறார்கள்; ஏழைகளைக் கொள்ளையிடுகிறார்கள், கொலை செய்கிறார்கள், அசுத்த மோகப் பாவங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இந்நிலையில் மறு ஜீவியத்தில் கடவுள் நல்லவர்களுக்கு ஆறுதலும், பேரின்பமும் தந்து, மனந்திரும்பாத தீயவர்களைத் தண்டிக்காமல் இருந்தார் எனில், அவரிடம் நீதியில்லை என்று ஆகிவிடும். ஆனால் சர்வேசுரன் உன்னத நீதி பரர், அவனவன் செயலுக்குரிய சம்பாவனை அல்லது தண்டனையை மறுவுலகில் அவர் நிச்சயம் வழங்கு கிறார், இவ்வுலகிலும் கூட அநேகர் தங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுகிறார்கள். மரணத் திற்குப் பின் கடவுளிடம் சம்பாவனை பெறவோ அல்லது தண்டனை பெறவோ ஆத்துமம் என்ற ஒன்று இருப்பது அவசியமாகிறது. இல்லையேல் தேவநீதி அர்த்தமற்றதாகி விடும்.

3. இயற்கை விதியால் நிரூபிக்கப்படும் ஆத்துமத்தின் இருத்தல்

மூன்றாவது நிரூபணம் இயற்கை விதி ஆகும். "கடவுள் மனிதனின் செவியை ஒவ்வொரு ஒலி அதிர்வையும் உணரும்படி அதியற்புதமாகப் படைத்து விட்டு, அந்த அதிர்வுகளை ஏற்படுத்தும் காரணிகளைப் படைக்காமல் விடுவாரா? அப்படிச் செய்வார் என்றால் அவர் செவியைப் படைத்ததில் அர்த்த மில்லை " என்கிறார் சுவாமி ரம்புல் என்பவர் (Fr. Rumble's book "Radio Replies Volume 3"). இதே விதமாக, அதே சர்வேசுரன் மனிதனை அதியற்புதப் படைப்பாக, தமது படைப்புகளையெல் லாம் ஆண்டு நடத்தக் கூடிய படைப்பின் சிகரமாக, அறிவும், ஆற்றலும், புத்தியும் உள்ளவனாகப் படைத்துவிட்டு, அவன் இந்த உலகோடு அழிந்து போக அனுமதிப்பாரா? ஒவ்வொரு படைப்பும் ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்படுகிறது. ஆத்துமம் என்ற ஒன்று மறு உலகில் நித்தியத்திற்கும் ஜீவிப்பது மட்டுமே அவர் மனிதனைப் படைத்ததை நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

4. தனித்தியங்கும் தன்மை

அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறபடி பிற உயிரினங்களின் 'ஆவிகள் ஓர் உடல் இன்றி பிழைத்திருக்க முடியாதவை. ஆனால் மனித ஆன்மாவோ சரீரமின்றி உயிர் வாழக் கூடியதாக இருக்கிறது. அது தனித்தியங்கக் கூடியதாக, தன்னிலேயே உயிருள்ளதாக இருக்கிறது. உண்மையில் அது கடவுளால் உடல் இன்றி தனியாகவே படைக்கப்படுகிறது. தாயின் வயிற்றில் கரு உருவாகும் கணத்தில் தான் ஆன்மா அதனுடன் இணைக்கப்பட்டு, ஒரு மனிதனை உருவாக்குகிறது.

5. அழியாமை

ஆத்துமம் ஒருபோதும் அழிய முடியாதது. சரீரம் சடப் பொருண்மையுள்ளது. எனவே அது வளரவும் தேயவும், அழியவும் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆத்துமம் அழியக்கூடிய சடப் பொருண்மை அற்றதாக இருக்கிறது. எனவே அது தன்னிலேயே அழிய முடியாததாக இருக்கிறது.

கடவுள் தமது சாயலாக மனிதனைப் படைத்தார். தேவ சாயல் என்பது நேசித்தல், அழியாமை ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. ஆத்துமம் கடவுளை அறிந்து நேசிக்க வல்லதாக இருக்கிறது.

சர்வேசுரன் மனிதனை அழியக்கூடியவனாகப் படைக்கவில்லை. பாவத்தின் விளைவாகத்தான் மரணம் வந்தது. ஆயினும் மரணம் கூட ஆத்துமத்தின் அழிவாக இராமல், சரீரத்திலிருந்து ஆத்துமம் பிரியும் செயலாக மட்டுமே இருக்கிறது. எனவே ஆன்மா தொடர்ந்து வாழக் கூடியதாக இருக்கிறது.

மேலும் கடவுள் தம் உயிரின் ஆவியை மனிதனுக்குள் ஊதவே அவன் ஆத்துமம் உள்ளவன் ஆனான் என்றும் வேதாகமம் கூறுகிறது. சுபாவத்துக்கு மேலான ஆத்துமத்தின் இந்த உயிரே தேவ இஷ்டப் பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. இது கடவுளால் ஆத்துமத்திற்குத் தரப்படும் இலவசக் கொடை யாக இருக்கிறது. இவ்வாறு கடவுளின் ஆவியையே தன்னுள் கொண்டிருந்த ஆதாம் மரணத்தைச் சுவை பாராமலே, அதாவது தனது ஆத்துமமும் சரீரமும் பிரிக்கப்படாமலே மோட்சத்திற்கு உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டு, சர்வேசுரனோடு நித்திய காலமும் பேரின்பத்தில் ஜீவிக்கும்படியாகவே படைக்கப்பட்டான். சாவான பாவம் மட்டுமே, அதாவது பாவத்தைப் பற்றிய அறிவோடும், அதன் மீது எந்த வற்புறுத்தலுமற்ற விருப்பத்தோடும் கட்டிக் கொள்ளப்படுகிற கனமான பாவம் மட்டுமே ஆத்துமத்தின் இந்த தேவ உயிரைக் கொல்ல வல்லதாக இருக்கிறது. இதனாலேயே இந்தப் பாவம் சாவான (சாவு ஆன) பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவத்திற்காகத்தான் பொதுத் தீர்வைக்குப் பின் சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மனிதன் நரகத்தில் தள்ளப்பட்டுத் தண்டிக்கப்படுகிறான்.

6. கிறீஸ்துநாதரின் மனிதாவதாரத்தின் முதன்மையான நோக்கம்

நாம் ஏற்கெனவே அறிந்துள்ளது போல், அளவற்றவராகிய சர்வேசுரனுக்குத் தகுதியுள்ள ஆராதனை யையும், நேசத்தையும் தர, தனது அளவுக்கு உட்பட்ட தாழ்நிலையின் நிமித்தம் மனிதன் இயலாத வனாக இருந்தான் (காண்க: கிறீஸ்துநாதரின் மனிதாவதாரத்தின் முதன்மையான நோக்கம், மாதா பரிகார மலர், இதழ்: நவம்பர் - டிசம்பர், 2018). இதனால், ஒரே சமயத்தில் கடவுள் என்ற முறையில் கடவுளுக்கு சமமானவராகவும், மனிதன் என்ற முறையில் அவருக்குத் தாழ்ந்தவருமான தேவ மனிதனாக தேவசுதன் அவதரிக்க வேண்டுமென்று தமத்திரித்துவ சர்வேசுரன் சித்தங் கொண்டார்.

இவ்வாறு தேவ சுதன் மனுக்குலத்தில் வந்து பிறக்கும்படியாகவே, மனிதன் படைக்கப்பட்டான். மனிதர்களின் ஆத்துமத்தையும், சரீரத்தையும் படைப்பதைத் தம் சொந்த உரிமையாகக் கொண் டிருக்க சர்வேசுரன் விரும்பினார். இவ்வாறு ஒவ்வொரு மனிதனுடையவும் மெய்யான தந்தையா யிருக்க கடவுள் விரும்பினார். இவ்வாறு, தேவமாதா தேவ சுதனைக் கருத்தாங்கிய அதே முறையில் பெண் தன் மாசற்றதனத்தை இழக்காமலே குழந்தைகளைக் கருத்தாங்குவதும், இவ்வாறு உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்தில், மாசற்றவனாக, மாமரி யைப் போலவே உற்பவிக்க வேண்டுமென்பதும் தேவ சித்தமாயிருந்தது. இத்தகைய மாசற்றவர்கள் நடுவேதான் தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து, கடவுளுக்கு உரிய, தகுதியுள்ள ஆராதனையையும் நேசத் தையும் அவருக்குச் செலுத்த வேண்டும் என்பதும், அவரது சகோதரர்களாகிய மனிதர்கள் அவரோடு ஒன்றித்து கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும் ஆராதனையும், நேசமும் இதன் மூலம் சர்வேசுரனுக்குத் தகுதியுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுமே அவரது திட்டமாக இருந்தது. இதில் இஸ்பிரீத்து சாந்து வானவரின் பிறப்பிக்கும் வளமையையன்றி, எந்த மனித வல்லமையும் தலையிடலாகாது என்று கடவுள் விரும்பினார்.

இந்தப் பரம இரகசியம் கடவுள் - மனிதனின் காவியம், முதல் புத்தகத்தில் எவ்வளவு தெளிவாகவும், அழகாகவும் விளக்கப்படுகிறது என்று சுவைத்துப் பாருங்கள்:

''சர்வேசுரன், சிருஷ்டிகரான பிதா, எத்தகைய சம்பூரணமான அன்பின் நியதியுடன் மனிதனை யும், மனுஷியையும் உண்டாக்கியிருந்தார் என்றால், அதன் முழுமையை இப்போது உங்களால் கண்டு பிடிக்கக் கூட இயலாது. சாத்தானால் மனிதன் அறிவூட்டப்படாதிருந்தால், மனித இனம் எப்படி வந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டு அதில் அமிழ்ந்திப் போகிறீர்கள். கனிகளையும், விதைச் செடிகளையும் பாருங்கள். அவை ஒழுக்க நெறி தவறியா பழங்களையும், விதைகளையும் உற்பத்தி செய்கின்றன? நூறு சேர்க்கைகளில் ஒரு வளப்படுத்தலையா பெறுகின்றன? இல்லை. ஆண் பூவிலிருந்து மகரந்தம் வெளியேறி, (பல்வேறு காரணிகள் வழியாக) பெண் பூவின் சூலுக்கு வர, அது திறந்து அதை ஏற்று, உற்பத்தியை அடைகிறது. அது தன்னைக் கறைப்படுத்தாமல், நீங்கள் மறுநாளிலும் அதே உணர் வைப் பெறுவதற்காகச் செய்வது போல் உற்பத்தியை மறுப்பதில்லை. அது விளைவைத் தந்து, அடுத்த பருவகாலம் வரையிலும் மகரந்தத்தை ஏற்பதில்லை. அது ஏற்பது உற்பத்தி செய்வதற்காக மட்டுமே...

நீங்களோ, உங்கள் ஆசிரியனாக சாத்தானைக் கொண்டீர்கள்... இன்னும் அவனையே விரும்பு கிறீர்கள். நீங்கள் விரும்பிய ஆசிரியனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்களையே நீங்களும் செய் கிறீர்கள். கடவுளுக்கு நீங்கள் பிரமாணிக்கத்துடன் இருந்திருந்தால், பகுத்தறிவும், ஆவித் தன்மையு முடைய ஆன்மா இல்லாத மிருகங்களும் கூட அறியாத அசுத்த வெட்கக் கேடான உறவுகளில் உங்களை ஆயாசப்படுத்தாமலும், வேதனை இல்லாமலும், ஒரு புனிதமான முறையில் குழந்தைகளைக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பீர்கள் ... ஓ சாத்தானே, சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனித ருடையவும் தந்தையாக இருக்கும் மகிழ்ச்சியை கடவுள் அடையாதபடி செய்து விட்ட சபிக்கப் பட்டவனே! ..." (புத்தகம் 1, பக்கங்கள் 48 - 51).

7. தேவ சுதனின் மனிதாவதாரத்தின் இரண்டாம் நோக்கம்

இவ்வாறு, மனித ஆத்துமமும் சரீரமும் கடவுளுக்குத் தகுதியுள்ள அன்பையும், ஆராதனையை யும் செலுத்துவதற்காகவே படைக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஆதாமின் கீழ்ப்படியாமை யால், பசாசின் தூண்டுதலின் வழியாக, பாவம் உலகில் நுழைந்தது. இதனால் மனித உற்பத்திக்கான கடவுளின் திட்டம் சீர்குலைக்கப்பட சகல மனிதர்களுக்கும் தந்தையாயிருக்கும் கடவுளின் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு, தேவ சித்தப்படி இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமையால் கற்பமாய் உற்ப வித்துப் பெண்ணிடமிருந்து பிறக்க வேண்டிய மனிதன், அசுத்த உறவின் வழியாக உலகில் ஜென்மப் பாவத் தோடு பிறக்கும் அவல நிலை உருவானது. மனிதன் தேவ சாயலையும், கடவுளின் மகன் என்ற உரிமையையும் இழந்து, பசாசுக்கு அடிமையானான்; நரகமே அவனது கதியாயிற்று; துன்பங்களும், வியாதி வருத்தங்களும், உழைப்பின் கடுமையும், சோர்வும், இறுதியாக, ஆன்ம, சரீரமரணங்களும் மனித வாழ்வை ஆக்கிரமித்தன.

8. மனிதனை இரட்சிக்க சித்தங்கொண்ட தேவ இரக்கம்

ஆயினும் தமக்கேயுரிய முறையில் மனிதனை அளவற்ற விதமாக நேசிக்கிற நல்ல தேவன் இந்தப் பரிதாபமான நிலையில் அவனைக் கைவிட்டு விட விரும்பவில்லை. எனவே இப்போது திருச்சுதனின் மனிதாவதாரத் திட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்படுகிறது. இது வரை பரிசுத்தமும், பாக்கியமுமான, துன்பங்கள் அற்ற பரலோகப் பாதை, மனிதனின் பாவத்தின் காரணமாக, பரிகாரப் பாதையாக மாறுகிறது; இது வரை இன்பங்கள் மட்டுமே நிறைந்த மலர்ப் பாதையாக இருந்தது, துன்பங்கள் நிறைந்த சிலுவைப் பாதையாக மாறுகிறது. தேவ சுதன் தமது பரம பிதாவுக்குக் கீழ்ப்படிய தமக்குக் கிடைத்த இந்த முதல் வாய்ப்பில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். அவர் துன்புறும் மனிதனாக, இசை யாஸ் தீர்க்கதரிசி கூறுவது போல், கடவுளின் துன்புறும் ஊழியராக உலகிற்கு வர சித்தங் கொள்கிறார். தம்முடைய மனிதாவதாரத்தின் முதல் நோக்கத்தின்படி மனுக்குலத்தின் பெருமையாகவும், மகிமையாகவும், மகுடமாகவும் உலகிற்கு வர இருந்த இந்தப் பரலோக அரசர், இப்போது பாவப் பரிகாரத் திற்குரிய பலிப் பொருளாக, தம் ஆத்துமத்தில் சிலுவையின் அட்சரம் பதிக்கப்பட்டவராக, தரித் திரத்தில் பிறந்து, தரித்திரத்தில் வாழ்ந்து, அனைவராலும் கைவிடப்பட்டவராக, உலகின் அவமானச் சின்னமாகிய சிலுவையில் அனைத்தையும் இழந்து மரிப்பதற்காக உலகிற்கு வரத் தீர்மானிக்கிறார்.

9. ஆத்துமத்தின் இறுதிக்கதி!

ஆத்துமம் சுபாவ உயிர், சுபாவத்திற்கு மேலான தேவ உயிர் ஆகிய இரு வகை உயிர்களைக் கொண்டுள்ளது. இவற்றை அது, தான் படைக்கப்படும்போது, கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்கிறது ('Catechism for the Latter Days'). முதல் வகை உயிரைக் கொண்டு ஆத்துமம் இனி நித்தியத்திற்கும் வாழ்ந்து கொண்டிருக்கும். அது தன் இருத்தலை இனி ஒருபோதும் இழக்கப் போவதில்லை. உலக வாழ்வுக்குப் பிறகு, அது ஒன்றில் நித்திய மோட்ச பேரின்பத்தில், கடவுளோடு என்றென்றும் இணைந்திருக்கும், அல்லது நித்திய நரகத்தில், சாத்தானுக்கு இனி என்றென்றும் அடிமையாயிருந்து, எல்லாவாதைகளையும் நித்தியத்திற்கும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.

10. ஆத்துமத்தின் சத்துவங்கள்

கடவுள் மனித சரீரத்தை ஐந்து வெளிப்புலன்களோடு (கண், காது, மூக்கு, வாய் மற்றும் ஸ்பரிசம்) படைத்தது போலவே, ஆத்துமத்தையும் புத்தி, மனது, நினைவு, ரூபிகரம் என்னும் சத்துவங்களோடு சிருஷ்டித்துள்ளார். புத்தி என்பது அறியக்கூடிய எல்லாவற்றையும் உணர்ந்து, கண்டுபிடிக்கச் செய்யும் சக்தியாகும். மனது என்பது தன் இஷ்டப்படி எதையும் செய்யவும், செய்யாமலிருக்கவும், ஒன்றை விரும்பவும், விரும்பாலிருக்கவும் செய்யும் சக்தியாகும். இவ்வாறு இரண்டு காரியங்களில் ஒன்றைத் தெரிந்து கொள்ள நம்மால் முடியும். நினைவு என்பது அறிந்தவைகளையும், நடந்த எண்ணங்களையும், காரியங்களையும் புத்தியில் வைத்துக் காப்பாற்றி மறுபடியும் நினைவுகூரச் செய்யும் சக்தியாகும். ரூபிகரம் என்பது, தியானத்தில் நாம் செய்வது போல, நாம் கண்டவையும், காணாதவையுமான காரியங்களை மனக்கண் முன் காண உதவும் ஆத்துமத்தின் சக்தியாகும்.