தேவமாதாவின் அமலோற்பவம் - ஒரு வரலாற்றுப் பார்வை!

''கன்னிகையே, உம்முடைய கெற்ப உற்பத்தியில் நீர் மாசற்றவளாயிருந்தீர். நீர் பெற்ற குமாரனின் பிதாவிடனிடத்தில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
(மாதாவின் மந்திரமாலை)

திருவழிபாட்டில் அமலோற்பவ சத்தியம்! (தொடர்ச்சி)

பைஸாண்டின் (Byzantine) ரீதியிலான வழிபாட்டில் அர்ச். அன்னம்மாளின் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதில் கன்னிமாரியைக் குறித்து இப்படிப் பாடப் படுகிறது:

"ஓ கன்னிகையே, உம்மைச் சார்ந்த ஒவ்வொன்றும் அசாதாரணமானது. அனைத்துமே அதிசயத்திற்குரியது! இவை அனைத்தும் நீர் கடவுளின் தாயாவதற்குப் பொருத்த மானவையான தகுதியாயிருக்கின்றன. இப்போது எங்களது புகழ்ச்சிக்குரியதாக இருக்கிற உமது உற்பவமும் கூட அற்புதமானது. பழைய ஏற்பாட்டின் அர்ச்சியசிஷ்டவர்கள் கூட தங்கள் தாயின் உதரத்திலிருந்து வெளியே வந்த பிறகு தான் அர்ச்சிக்கப்பட்டார்கள். ஆனால் நீர் மட்டுமே எல்லாப் பெண்களுக்குள்ளும், பிறப்புக்கு முன்பே ஏற்கெனவே அர்ச்சிக்கப்பட்டீர்! இதுவே நீர் சுபாவத்திற்கு மேலாகவும், எல்லா மனிதர்களுக்கும் மேலான தன்மையிலும், கடவுளின் தாய் என்ற மிகப் பெரிய சலுகையைப் பெறும் தகுதியைப் பெற்றுத் தந்தது. உமது வணக்கத்துக்குரிய உற்பவத்தை விசுவாசத்தோடு கொண்டாடும் எங்களுக்காகப் பரிந்து பேசும்...!" (Maximilian: De Liturg. Oriental.1:40).

அது போல, ஆர்மேனியன் திருவழிபாட்டில் தூபமிடும் சடங்கில் பாடப்படும் கீதத்தில்: சர்வேசுரனிடத்தில் உமது கன்னித்தாயின் பரிந்துரையின் மூலம் மன்றாடும் எங்களது ஜெபங்களை ஏற்றுக்கொள்ளும் என்றும், ஏனெனில் திருச்சபை பரிசுத்த கன்னிமரியாயைக் கடவுளின் தாய் என்றும், அவர்களிடமிருந்தே அழியாத நித்திய அப்பமும், புகழ்ச்சிக்குரிய கிண்ணமும் (இரசம்) எங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று பாடப்படுகிறது.

இந்த ஆர்மேனியன் வழிபாடு, மாமரிக்கு இரட்சணியத்தின் விளைவான, ஜென்மப் பாவ தோஷத்திலிருந்து விடுதலை சிறப்பான வகையில் வழங்கப்பட்டிருக்கிறது என்று புகழ்ந்து பாடுகிறது. அதன் தமிழாக்கம் :

''நீரே மோட்சத்தின் வாசல், மோட்ச இராச்சியத்தின் கதவு!
மனுக்குலத்தின் சாபம் அணுகாமல் விலகியவர் நீரே. 
நீரே பூமியில் நாங்கள் மகிமைப்படுத்தும் சிநேகமானவள்! 
நீரே எங்களது குற்றங்களையும், பாவத்தையும் அழிப்பவர்.
பரிசுத்த தாயே! கன்னிகையே!! 
உம் வழியாகவே தண்டனையின் தீர்ப்பு 
முழுவதுமான காலாவதியைக் கண்டது. 
அதுபோலவே, உம் மூலமாகத்தான், 
வீழ்ந்த தாயான ஏவாள், 
மீண்டும் ஒருமுறை தலை நிமிர்ந்து
எழுந்தாள். பரிசுத்த தாயே! கன்னிகையே...''

(Laudes et Hymni in ss. Virg. Honor. ex Armenorum Breviario Excerptae, Venice, 1877,54).

இதே ஆர்மேனிய ரீதியின் பாடல்களில் மாமரியின் உற்பவம்: "சர்வேசுரனின் நறுமணம் கமழும் நடப்பட்ட விருட்சம் (மரம்)" என்றும், ''கடவுளின் வேலைப்பாடுகளோடு புனையப் பட்ட (சிருஷ்டிக்கப்பட்ட மோட்சம்" என்றும், அது சேசுவைக் குறிப்பிட்டு, ''அவரே, தாயே, உமது தாயின் உதரத்திலிருந்தே உம்மை அர்ச் சித்தார்" என்றும், "மாமரி பாவமென்ற முட்களி டமிருந்து விடுவிக்கப்பட்ட கடவுளின் விளை நிலம்" என்றும் பலவாறு புகழ்ந்து குறிப்பிடப் படுகின்றன.

சிரியன் திருச்சபையின் (Syrian Church) திருநாள் அல்லாத நாட்களின் (Ferial Office) கட்டளை ஜெபத்தில் (1853, 292)): "அன்னம்மாளிடமிருந்து மரியாய் அவர்களது பாவமில்லாத மகிமையிலும், தூய்மையிலும் உற்பவிக்கப்பட்டார்கள்... வாழ்க! ஓ பாவம் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தாத மிகவும் அடைக்கப்பட்ட நகரே! வாழ்க! குற்றமில்லாத பரிசுத்தமே! ஒருபோதும் காயப்படாத மகிமையான வளே! புதிய ஏவாளே! வாழ்க, நீரே புதிய எம்மானுவேலனுக்குப் பிறப்பை அளித்தீர்!' என்று புகழ்ந்து பாடல் இசைக்கப்படுகிறது.

அது போலவே, கிரேக்க வழிபாடும் குருக்கள் கட்டளை ஜெபத்தில் மாமரியின் மத்தியஸ்தத்தையும், குறிப்பாக அவர்களது ஜென்மப் பாவத்திலிருந்து பெற்ற விடுதலை யையும் பற்றி வலியுறுத்தி இப்படிக் கூறுகிறது: ''மிகவும் பரிசுத்த கன்னிகையே (Panagia)! நீரே மனுக்குலத்தை அதன் ஜென்ம தண்டனை யிலிருந்து விடுவித்தீர்'' (ஆகஸ்ட் 15 கட்டளை ஜெபம்; அவர்களே "அமலோற்பவக் கன்னிகை, கடவுளைத் தாங்கியவர்கள், எந்த வகையிலும் குற்றமேதும் அணுகாதவர்கள்" (Panamomete) (Ode 7 for 15 Sept.); அவர்கள் (மாமரி) இப்படிக் கூறப்படுகிறார்கள்: ''நீரே ஜென்மக் குற்றத்தால் கறைப்பட்ட எங்களது தன்மை யைப் புதுப்பித்தவர், ஓ! மிகவும் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்திரீயே! ஓ!! கடவுளால் மிகவும் நேசிக்கப்பட்ட வர்களே (Theokharitotate)!'' (Ode 6, for 18th Feb.).

மேலும் இதே கிரேக்க ரீதியில் மாமரியின் பிறந்த நாளுக்கு முந்தின திருவிழிப்பு நாளின் கட்டளை ஜெபத்தில் மரியாயைத் "தனது இதழ்களை ஒருபோதும் விரிக்காத தெய்வீக ரோஜாப்பூ'' என்றும், "எங்கள் முடைநாற்றம் வீசும் பாவங்களை அழித்தொழிக்கும் வல்லமை யுள்ளவளே' என்றும் போற்றிக் கூறப்படுகிறது (Ode 8, 7th Sep.).

(தொடரும்)