தேவமாதாவின் நித்திய கன்னிமைக்கு நிந்தைப் பரிகாரம்!

சரீர பரிசுத்ததனம்தான் கன்னிமை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஆத்தும கன்னிமை இன்றி யாரும் சரீர கன்னிமையை அனுசரிக்க இயலாது. கன்னிமை என்பது ஒருவன் தன் முழு ஆத்துமத்தோடும், சரீரத்தோடும் சர்வேசுரனை மட்டுமே நேசிப்பது. 


மாதாவின் நித்திய கன்னிமை பற்றி திருச்சபையின் போதனை

இந்த உன்னதமான சத்தியத்தைப் பின்வரும் வார்த்தை களில் முதலாம் மார்ட்டின் என்ற பாப்பரசர் கி.பி. 649-ம் ஆண்டில் லாத்தரன் பொதுச்சங்கத்தில் பிரகடனம் செய்தார்:

"காலம் நிறைவேறியபோது, மனிதத் துணையின்றி இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதத்தால் காலங்கள் அனைத்துக்கும் முன் பிருந்தே பிதாவிடமாய் ஜெனித்து வருபவரான தேவ வார்த்தை யானவரை அமலோற்பவக் கன்னிமாமரி கருத்தரித்து, தன் கன்னிமையின் மகிமை குன்றாமலே அவரைப் பெற்றெடுத்தார்கள், அவரது பிறப்புக்குப் பின்னும் பழுதற்ற கன்னிகையாகவே நிலைத் திருந்தார்கள் என்று பரிசுத்த பிதாக்களோடு ஒப்புக்கொள்ளாத எவனும் சபிக்கப்படக்கடவானாக." 


பரிசுத்த வேதாகமத்தில் மாதாவின் கன்னிமை

1. "தேவதூதன் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூருக்கு சர்வேசுரனால் அனுப்பப்பட்டு ஒரு கன்னிகையிடத்தில் வந்தார். அந்தக் கன்னிகையின் பெயர் மரியம்மாள்" (லூக். 1:26-27). இவ்வாக்கியத்தில் இஸ்பிரீத்து சாந்துவானவர் தம் திவ்ய பத்தினியைக் "கன்னிகை" என்று இரு முறை வலியுறுத்திக் கூறுவதை சிந்தியுங்கள்.

2. "இந்த வாசலின் கதவு பூட்டியே கிடக்கும். அது திறக்கப்படுவதில்லை ... இஸ்ராயேலின் தேவனாகிய ஆண்டவர் மாத்திரமே அதனுள் பிரவேசிப்பார்" (எசேக். 19:2). இந்த வசனத்திற்கு அர்ச். அகுஸ்தினார் கூறும் விளக்கம்: மரியாயின் கன்னிமை பூட்டப்பட்ட வாசல், தேவமனிதனின் பிறப்பால் அது சிதைவுபடவில்லை என்பதே.

3. கருகாமல் எரிந்து கொண்டிருந்த முட்செடி (யாத் 3: 2) மாதாவே என்றும், அது மாதாவின் கன்னிமைக்கு உவமானமானது என்றும் திருச்சபை மாதாவின் மந்திரமாலையில் பாடுகிறது.

4. "சகோதரியான என் மணவாளி அடைக்கப்பட்ட தோட்டமும், வேலி சுற்றி வைக்கப் பட்ட நந்தவனமும், முத்திரையிடப்பட்ட நீர் ஊறும் கிணறுமேயாம்'' (உந். சங். 4:12). இந்த வேத வாக்கியமும் மாதாவின் நித்திய கன்னிமைக்கு ஓர் அழகிய உபமானமே.

5. "மகா உந்நதர் தமது வாசஸ்தலத்தை அர்ச்சித்தார். கடவுள் அதன் நடுவில் இருந்ததால் அது கலங்குவதில்லை " (சங். 45:3-4). மாதாவின் கன்னிமை குன்றாத திருவுதரமே இந்த தெய்வீக வாசஸ்தலம். கடவுள் அதை அர்ச்சித்ததால் அது கலங்காமல் காப்பாற்றப்பட்டது என்பது திருச்சபையின் வேதபாரகர்களின் விளக்கமாகும்.