சேசுவைப் பெற்றெடுக்குமுன் மாதாவின் கன்னிமை!

1. "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அற்புத அடையாளம் தருவார். இதோ கன்னிகை கர்ப்பமாகி ஒரு மகவைப் பெறுவாள்" (இசை. 7:14) என்று இசையாஸ் கூறுகிறார். திருவிவிலியத்தில் உள்ளது போல, "கருவுற்றிருக்கும் இளம் பெண்" அல்ல, மாறாக, உண்மையான கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ளது போல, ஒரு கன்னிகை கருத்தாங்கி மகவைப் பெறுவதுதான் கடவுள் தரும் அற்புத அடையாளமாக இருக்க முடியும். இவ்வாறு, கடவுளின் தாயாகத் தெரிந்து கொள்ளப்பட்ட மாமரி, ஒரு கன்னிகையாயிருந்து அவரை ஈன்றெடுக்க வேண்டும் என்பது தேவ சித்தமாக இருந்தது. 

2. "மரியம்மாள் தேவதூதனைப் பார்த்து : இது எப்படியாகும்? நான் புருஷனை அறியேனே என்றாள்" (லூக். 1:34). அர்ச். சூசையப்பருக்குத் திருமண ஒப்பந்தமாகியிருந்த நிலையில், மாதாவின் இவ்வார்த்தைகள், அவர்களுக்கும், சூசையப்பருக்கும் நிகழ இருந்த திருமணம் உலகத் தன்மையானதல்ல, மாறாக, சர்வேசுரனைக் கருத்தாங்கிய நிலையில் உலகின் கண்களுக்கு மாமரி ஒரு குற்றவாளியாகத் தோன்றாதபடி காப்பாற்றவும், தாயும் சேயும் பராமரிக்கப்படவும் கடவுளே ஏற்பாடு செய்த கன்னிமை - விரத்தத்துவத் திருமணம் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றன.