இயேசுவின் அன்பு நிறைந்த இருதயமும், புனித மரியாயின் அன்புள்ள இருதயமும்!

மே மாதம் மரியன்னையின் மாசற்ற இருதயத்துக்கும், ஜூன் மாதம் இயேசுவின் திருஇருதயத்துக்கும் தனித்தனியே ஆராதனை தோத்திரம் செலுத்தின பிற்பாடு, இன்று அவ்விரு இருதயங்களுக்கும் சேர்த்து நமது சிநேகப்பற்றுதலைக் காண்பிப்போமாக. இந்த இரண்டு இருதயங்களுக்கும் எவ்வளவு ஒருமைப்பாடு இருக்கிறதென்றால், அவைகளை ஒன்றை விட்டு ஒன்று பிரிக்கமுடியாது. ஒரு இருதயமானது தன்னிலே நம்மை இன்னொரு இருதயத்துக்கு இட்டுக் கொண்டு போகிறது.

ஓர்நாள் ஒரு பக்தியுள்ள சகோதரி நமது ஆண்டவரை நோக்கி அவருடைய திரு இருதயத்தில் பிரவேசிக்க தான் வெகு ஆசையுள்ளவளாயிருக்கிறதாக வெளியிட்டு, இந்த ஆசை நிறைவேறும்படி, தான் என்ன செய்யவேணுமென்று கேட்டாள். இயேசுக்கிறிஸ்துநாதர் பதிலாக : "நமது இருதயத்தில் நீ பிரவேசிக்கப் பிரியப்பட்டால், மரியன்னையின் வழியாய் நம்மிடம் வா. நமது மாதாதான் நமது இருதயத்துக்கு வாசற்படி" என்றார். ஆதலால் மரியன்னையின் வழியாக இயேசுவின் திரு இருதயத்தை அண்டிப் போவோமாக. புனித மரியாதான் இடையர்களையும் மூன்று அரசர்களையும் திவ்விய பாலகனாகிய இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்தாள். மரியன்னை தெரிந்துகொள்ளப்பட்ட சகலரையும் நித்திய பாக்கியமாகிய இயேசுவின் மகிமை நிறைந்த இருதயத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாள். ஆதலால் திருச்சபையானது மரியன்னையை நோக்கி, மோட்சத்தின் வாசற்படி என்று அழைக்கிறது சரியே.

மரியன்னை நமது ஆண்டவருடைய தாயாராயிருக்கிறதைப் பற்றி, சர்வேசுரனுக்குப் பிற்பாடு சகலருக்கும் மேலான மகிமையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறாள். ஆதாம் என்பவருடைய மக்களுக்குள் புனித கன்னிமரியாயிதான் ஜென்மப் பாவமின்றி ஜென்மித்த விசேஷ சுதந்திரம் பெற்றவள். ஜென்மதோஷமின்றி ஜென்மித்த அந்த க்ஷணத்திலேதானே அவளுடைய இருதயமானது எவ்வளவு ஏராளமான கொடைகளால் அலங்கரிக்கப்பட்டதென்றால், சகல சம்மனசுகளுக்கும் புனிதர்களுக்கும் மேலாய் உயர்த்தி ஸ்தாபிக்கப்பட்டாள்.

இயேசுவின் திரு இருதயத்தினிடம் மரியன்னைக்கு சொல்லொண்ணா செல்வாக்கு இருப்பதால், உனக்கு வரும் சகல துன்பத்திலும், மரியன்னையின் பெயரை உச்சரிக்க கவலை கொள். அவளுடைய திருநாமம் எப்போதும் உன் நாவிலும் இருதயத்திலுமிருக்கட்டும். நமக்கு உதவிபுரிய அவளுடைய சக்தியும் நல்ல மனதும் ஒருபோதும் குறைவுபடாது. ஏனென்றால், அவள் பரலோக இராக்கினி. தேவ குமாரனுடைய தாய், இரக்கமும் உருக்கமான அன்பும் நிறைந்த தாய். அவளே தன் மன்றாட்டால் சர்வ வல்லபமுள்ளவள் என்று புனித பெர்நர் தென்பவர் வெகு தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார்.

மரியன்னை சர்வேசுரனை மன்றாடுகிறாள். ஏனென்றால் அவள் தெய்வமல்ல. ஆனால் சர்வேசுரனுடைய மகா உச்சிதமான உத்தம் சிருஷ்டி. அவளுக்குச் சர்வேசுரன் எப்போதும் செவிகொடுப்பார். அவளுடைய சகல மன்றாட்டும் கொடுக்கப்படும்.

இயேசு தமது அருட்கொடைகளையெல்லாம் மனிதர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பவளாகத் தமது திருத்தாயை நியமித்திருக்கிறார். தம் தாய்மேல் வைத்த சிநேகத்தால், அவள் கையில் தனக்குச் சொந்தமான திவ்விய பொக்கிஷங்களையெல்லாம் ஒப்படைத்து, அவளிஷ்டம் போல் பக்தர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும்படி உத்தரவு பண்ணுகிற ஓர் இளவரசனுக்கு ஒத்தவண்ணம், நமதாண்டவரும் தமது தாய்நாட்டில் நடந்து கொள்கிறார். இவ்வகையாய் எல்லா உபகார சகாயங்களும் அரசரிடமிருந்து வருகிறது. ஆனால் தாயார் அவைகளைப் பங்கிட்டுக் கொடுக்கிறாள். இயேசுக்கிறிஸ்துவின் கொடைகளையும் பலன்களையும் தேவதாய் நமக்கு அளிப்பவளாயிருப்பதால், தேவதாயார் பேரில் பக்தியுள்ளவர்கள் மோட்சபாக்கியத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களெனலாம். இந்த நல்ல தாயிடத்தில் எவ்வளவு வல்லமையும் இரக்கமும் இருக்கிறதென்றால், யார் யார் தன்னை நோக்கி சிநேகிக்கிறார்களோ அவர்களெல்லோரையும் இரட்சிப்பாள். ஜீவிய காலத்திலும், விசேஷமாய் மரண நேரத்திலும் நம்முடைய சத்துருக்களிடத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவாள்.

மேற்சொன்னவைகளையெல்லாம் அறிந்த நாம், மோட்சத்துக்கு இராக்கினியும், சர்வேசுரனுக்கு மாதாவும், கபிரியேல் என்னும் அவ்வளவு மரியாதை வணக்கம் காண்பித்த பரிசுத்த கன்னிகையும், எந்த நல்ல மைந்தனும் தன் தாய்க்குக் காட்டின் சங்கைக்கும், சிநேகத்துக்கும் மேலாய் திவ்விய இயேசு சங்கித்தும் சிநேகித்தும் வந்த தமது மாதாவாகிய மரியன்னைக்கு சங்கை செய்வதும், அவளை நோக்கி மன்றாடுவதும் கூடாதென்று மறுதலித்து, இன்னும் அத்தேவதாயை நிந்தனைச் செய்வோரை நாம் என்னென்று சொல்லுவோம்! அவர்கள் பேரில் இரக்கப்பட எவ்வளவு நியாயமுண்டு! தன் தாயின் மேல் சொன்ன தூஷணம் தனக்கே என்று ஒரு நல்ல குமாரன் எப்போதும் எண்ணிக் கொள்வான். திருக்கன்னிமரியாயைத் தூஷணிக்கிறவர்கள் ஓர்நாள் அவருடைய திருக்குமாரன் இயேசுவின் சிம்மாசனத்துக்கு முன் வந்து நிற்க வேண்டும். அந்நேரத்தில்தான் மனுமக்களுக்குள் மிக்க நேசத்துக்குப் பாத்திரமான திவ்விய இயேசு, தமது தாயின் பேருக்கும் தமது தாயின் பேரோடு இணைபிரியாத தமது சொந்தப் பேருக்கும் பழுது வருவித்தவர்களுக்கு கடின தீர்ப்புச் செய்வார்.

இயேசுவின் திருஇருதயப் பக்தர்களனைவரும் தங்களுக்குச் சொந்தத் தாயாகிய தேவதாயை உண்மையில் சங்கித்துச் சிநேகிப்பார்கள். "இதோ உன் தாய் " புனித அருளப்பரை நோக்கி கல்வாரி மலையில் அவர் சொன்னது போல் அவர்களுக்கும் சொல்லுவார். புனித அருளப்பரைப் போல் பக்திப்பற்றுதலோடு நாமும் அவளை அன்பு செய்வோமாகில், நாம் பாவத்தை விலக்கி புண்ணியத்தைச் செய்ய அவள் நமக்கு உதவி செய்து தனது நேசகுமாரன் இயேசுவின் திரு இருதயத்திற்குள் நம்மை இட்டுக் கொண்டு போவாள்.