வீரமாமுனிவர் (Fr. ஜோசப் பெஸ்கி) தமது ஞான உணர்த்துதல் என்ற நூலில், ''ஒருவனைப் பார்த்து, உன் தாய் தகப்பன் யார், ஊரென்ன என்று கேட்டால், எத்தனை மூடனாயிருந்தாலும் தெரியாது என்று சொல்வானா?
நீ உன் ஆத்துமத்தையும் உன்னைப் படைத்த சர்வேசுரனையும் அறியேன் என்று சொன்னால் உன்னைப் போல் மூடன் உண்டா? எல்லாவற்றையும் விட உன் ஆத்துமத்தை யும் அதன் மகிமையையும் நீ அறிந்திருக்க வேண்டுமே. மனித ஆத்துமம் கடவுளின் ஆலயமும், சிங்காசனமும், பிரதிபிம்பமுமாயிருக்கிறது.
தெய்வீகத்தைப் போலவே, ஆத்துமத்திற்கும் அந்த வல்லமையும் மகிமையும் இருப்பது மட்டுமல்ல, அந்த ஆத்துமம் தேவ சாயலாகவும் இருக்கிறது'' என்கிறார்.
ஆத்துமம் மனித சரீரத்தோடு இணைக்கப்படும்படி அரூபியாகவும் தேவ சாயலாகவும் உண்டாக்கப்பட்டு, புத்தியும், அறிவும், மனச் சுதந்திரமுமுள்ள ஓர் அழியாத வஸ்து என்று ஞானோபதேசக் கோர்வை கூறுகிறது. ஆத்துமம் என்பது சரீரத்தில் தங்கி வாழ்வதற்கான இயல்பான திறன் கொண்ட அரூபப் பொருளாக இருக்கிறது, ஏனெனில் சரீரத்தோடு இணைந்து மனித சுபாவத்தை உருவாக்குவதற்காகவே அது கடவுளால் உண்டாக்கப்பட்டுள்ளது.
அது சரீரத்தோடு இணைந்து மனித சுபாவத்தின் பொருண்மை சார்ந்த ஐக்கியத் தன்மையை உருவாக்குகிறது என்று தமது ஸம்மாதியோலஜிக்காவில் ('வேதசாஸ்திரத் தொகுப்பு என்ற அரிய வேதசாஸ்திர நூல், எண் 78) அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார்.
அநேகர், ''நான் இறந்தால் என் தலை கிழக்கோ மேற்கோ தெரியாது; மரணத்திற்குப் பின் எனக்கு எதுவும் நடப்பதில்லை, நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை'' என்கிறார்கள்.
இது உண்மையா? உண்மையில் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது? ஆன்மா என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறதா? இருக்கிறது என்றால், அதன் தன்மை என்ன, அதன் இறுதிக் கதி என்ன, நித்தியப் பேரின்பத்திற்கென்று அதைக் காத்துக் கொள்வதற்கான வழி வகைகள் என்னென்ன என்பவற்றை மாதா பரிகார மலரின் இந்த இதழில் அறிய முயல்வோம். சேசுவும், மாதாவும் இதில் நமக்குத் துணை செய்வார்களாக.