சேசுவைப் பெற்றபோதும் பழுதுபடாததிவ்ய கன்னிமை!

சேசுகிறீஸ்துநாதர் மட்டுமே தமது தெய்வீக அற்புதப் பிறப்பால் தம் தாயின் கன்னிமைக்குப் பங்கமோ, மாசோ, குறைவோ ஏற்படுத்தாமல் பிறந்தார். 

ஒளியானது கண்ணாடியை ஊடுருவிச் செல்லும்போது கண்ணாடிக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாதது போலவே, சேசுவும் தம் தாயின் கன்னிமைக்குப் பழுதில்லாமல் அற்புதமாய்ப் பிறந்தார் என்று வீரமாமுனிவர் விளக்குகிறார்.

"நம் இரட்சகரின் உற்பவம் இயற்கைச் சம்பவங்களுக்கு அப்பாற்பட்டது. ஆதலால் அவரது பிறப்பும் அப்படியே நிகழ்ந்தது. 

கதவு ஜன்னல்கள் மூடியிருக்க, எப்படி உயிர்த்த சேசு அறைக்குள் நுழைந்தாரோ, அப்படியே தமது தாயின் கன்னிமையைப் பாதிக்காதவாறு அவர்களது திருவுதரத்தினின்று வெளியேறினார்” என்று திரிதெந்தீன் பொதுச்சங்கஞான உபதேசம் கற்பிக்கிறது.

"சேசு மனிதனாய்ப் பிறந்தாலும், மனித சுபாவத்தின் சட்டம் அனைத்திற்கும் அவர் உட்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அவர் பெண்ணிடமிருந்து பிறந்தது அவரது மனித சுபாவத்தை உறுதிப் படுத்தினாலும், அந்தப் பெண் மாசற்ற கன்னிகையாயிருந்தே அவரைப் பிறப்பித்த செயல், அவர் வெறும் மனிதனல்ல என்பதைக் காட்டுகிறது. 

அவரது தாய் தன் திருவுதரத்தில் அவரது பாரத்தை உணரவில்லை, அவரது பிறப்பு மாசற்றதாயும், பிரசவ வலி ஏதுமின்றியும்.... இருந்தது. 

ஏனெனில் தன் குற்றத்தால் நமது சுபாவத்தினுள் சாவைக் கொண்டு வந்த ஏவாள் வலியோடு பிள்ளை பெறுவது நீதியானது என்றால், உலகிற்கு நித்திய வாழ்வைக் கொண்டு வந்த புதிய ஏவாளாகிய பரிசுத்த கன்னிகை, மகிழ்ச்சியோடு தேவனை ஈன்றெடுப்பதும் முற்றிலும் நீதியானதே" என்று அர்ச். நிஸ்ஸாகிரகோரியார் சந்தோஷமாய் அறிக்கையிடுகிறார் (Homily on the Nativity388AD).