இதை என் நினைவாகச் செய்யுங்கள்!

திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும். திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.

தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள், இயேசுவும், சீடர்களும் பாஸ்கா உணவில் பங்கேற்றனர். யூத பாஸ்கா பெருவிழாவின் ஆரம்பம். இது ஒவ்வொரு யூதனுடைய வாழ்விலும் இன்றியமையாத முக்கியமான நிகழ்வு. ஏன்?

1. எகிப்தின் அடிமை வாழ்வில் இருந்து கிடைக்கப்பெற்ற அற்புதமான விடுதலை வாழ்வு.

2. இறைவனின் வலிய கரத்தினால் செங்கடலை கடந்து வந்த அற்புதச் செயல்.

3. வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்து வரப்படுகையில் அனுபவித்த இறைபராமரிப்பு இவற்றை தலைமுறை தோறும் நினைவு கூற வேண்டுமென இறைவன் பணித்தார்.

'நினைவு கூறல்"என்பதற்கு எபிரேய மொழியில் 'சிக்கரொன்" (Zikkaron) என்று பொருள்படும். இச்சொல்லின் பொருள் யாதெனில் 'இறந்தகால நிகழ்வினை, நிகழ்காலத்தில் நிஜமாக்குதல். "இதை இவ்வாறு தெளிவுபடுத்தலாம்.

பாஸ்கா உணவில் பங்கேற்பவர்கள் புளிப்பற்ற அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்டனர். கசப்பான கீரை இஸ்ராயேல் மக்கள எகிப்தில் அனுபவித்த துன்பகரமான பாடுகளை நினைவூட்டியது. மேலும் புளிப்பற்ற அப்பம் எகிப்தில் அவர்கள் அனுபவித்த உணவுப்பற்றாக்குறையை குறித்துக் காட்டுகிறது.

எனவே ஒவ்வொரு யூதரும் இந்த பாஸ்கா விழாவின் போது இன்று கூட, அன்று தம் மூதாதையர் அனுபவித்த வேதனைகளை இவ்வுணவின் மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த உணவின் போது வீட்டுத் தலைவர் தன் பிள்ளைகளில் கடைக்குட்டியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

எகிப்திலிருந்து தாம் பெற்ற விடுதலையை தலைமுறை தோறும் சொல்ல கடவுள் தாமே பணித்துள்ளார். இதை வெறுமனே ஓர் வரலாற்று நிகழ்வாக அல்ல, மாறாக இன்றும் இதனை கொண்டாடும், அனைவரோடும் இறைவன் தனது உடன்படிக்கையை புதுப்பிக்கின்றார்.

'ஒவ்வொரு தலைமுறையினரும், தனிமனிதரும் தான் எகிப்திலிருந்து மீட்கப்பட்டதை உணர வேண்டும்" என இறைவன் பணித்ததை திருவிவிலியத்தில் (வி.ப நூல் 13:8, இ.ச.நூல் 6:23) காண்கின்றோம்.

இதன் பின்னணியிலேயே கிறிஸ்து ஓர் யூதர் என்ற முறையில் தன் சீடர்களோடு அருந்திய இறுதி இராவுணவின் போது புதியதோர் உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதனை தன் நினைவாகச் செய்யக் கட்டளையிட்டார், (மத் 26:26-28, மாற் 14:22-24, லூக்கா 22:19-20, 1 கொரி 11:23-26, யோவா 6:48-58)

'நினைவு" என்ற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் 'அனம்னேசிஸ்" (Anamnesis). இந்த சொல்லின் அர்த்தத்தை யூத பாஸ்காவின் பின்னணியில் பார்ப்பதே நலம். 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவருடைய சிலுவை மரணத்தை குறித்துக் காட்டுகின்றன.

'இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல், உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம" இதன் பொருள் அன்று கல்வாரியில் நடந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் இன்று திருப்பலியில் நடக்கின்றதென்பதல்ல.

இதனை புதிய ஏற்பாட்டு வார்த்தைகள் தெளிவாகவே கூறுகின்றன. 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கின்றோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்.

இப்போது அவர் வாழ்கின்றார். அவர் கடவுளுக்காகவே வாழ்கின்றார். (உரோ 6ஃ9-10) 'தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தோடு ஆண்டுதோறும் தூயுகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும், மீண்டும் செய்யவில்லை...". கிறிஸ்து பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத் தாமே பலியாகக் கொடுத்தார். (எபிரேயர் 9:25-28) ஆகவே கிறிஸ்து சிலுவையிலே ஒப்புக்கொடுத்த பலி எக்காலத்திற்கும் பொருந்தும்.

எனவே திருப்பலியிலே நாம் நம்மையே கிறிஸ்துவின் பலியோடு இணைக்கின்றோம். எவ்வாறு?

நமது தியாக வாழ்வு, மற்றவர்களுக்காக கிறிஸ்துவைப் போன்று நாம் நம்மையே வெறுமையாக்கும் போது, மற்றவர்களுக்காக நம்மையே உடைத்து, பகிர்ந்து கொடுக்கும் போது, கிறிஸ்துவின் பலி, நம்மில் செயலாற்றுகின்றது. நாமும் கிறிஸ்துவின் நினைவாய் வாழ்கின்றோம்.