பூசையின்போது ஜெபங்கள்

நாம் விரும்புகிற, நமக்கு மிக அதிகமாக உதவி செய்யக்கூடிய எந்த ஜெபங்களையும் நாம் பயன்படுத்தலாம். ஆயினும் ஒரு பூசைப் புத்தகத்தையோ, அல்லது ஒரு ஜெபப் புத்தகத்தையோ பயன்படுத்தி, முடிந்த வரை மிகக் கவனமாக குருவானவர் செய்யும் நித்திய கைங்கரியத்தைப் பின்பற்றுவதுதான் பூசை காண மிகச் சிறந்த வழி என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது.

கொன்ஃபித்தேயோர் (பாவசங்கீர்த்தன மந்திரம்); குருவானவர் பூசையின் தொடக்கத்தில் நன்கு குனிந்து நின்று, கொன்ஃபித்தேயோர் சொல்லும் போது, நாமும் சேசுநாத ருடைய அவஸ்தையோடு நம்மையும் இணைத்துக்கொண்டு, நாம் சர்வேசுரனுக்கு எதிராகப் பாவங்கள் செய்துள்ளதைத் தாழ்ச்சியோடும், உத்தம மனஸ்தாபத்தோடும் ஒத்துக் கொண்டு, கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளினுடையவும், திரு மரணத்தினுடையவும் பேறுபலன்களின் வழியாக அவற்றிற்கு மன்னிப்பை இரந்து மன்றாட வேண்டும்.

அதன்பின் குருவானவர் செய்யும் பல்வேறு ஜெபங்களை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

ஸாங்க்துஸ் (பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்) பாடும் போது, சம்மனசுக்கள் பூசையில் கலந்து கொள்ள கூட்டங் கூட்டமாக இறங்கி வருகிறார்கள் என்பதையும், நாம் அவர்கள் மத்தியில் இருக்கிறோம் என்பதையும், கடவுளை ஆராதிப்பதிலும், அவரைத் துதிப்பதிலும் நாம் அவர்கள் ளுடைய குரல்களோடு நம் குரல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் ஜெபங்களைக் கடவுளிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

தேவ வசீகரத்தின்போது, நாம் மிக ஆழ்ந்த ஆராதனை யாலும், நேசத்தாலும் நிரப்பப்பட வேண்டும். ஏனெனில் சேசுபாலன் பெத்லகேமில் தாம் திவ்விய கன்னிகையிட மிருந்து பிறந்தது போலவே, பூசையிலும் குருவானவரின் கரங்களில் வந்து பிறக்கிறார். குருவானவர் திவ்விய அப்பத்தை எழுந்தேற்றம் செய்யும்போது, மோட்சத்தில் சம்மனசுக்கள் அவரை உற்றுநோக்குவது போல் மகிழ்ச்சிப் பரவசத்தோடு நாமும் நம் சர்வேசுரனை உற்று நோக்கி, 'என் ஆண்டவரே, என் தேவனே!'' என்ற வார்த்தைகளை விசுவாசத் தோடு உச்சரிக்க வேண்டும்.

திரு இரத்த வசீகரத்தின்போது, கல்வாரியில் சேசுநாதர் சிந்திய திரு இரத்தம் முழுவதும் திரு இரத்தக் கிண்ணத்தில் இருக்கிறது என்றும், நாம் கடவுளின் மகிமைக்காகவும், நம் சொந்தக் கருத்துக்களுக்காகவும் குருவானவரோடு சேர்ந்து அதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மையும், நம் பாவங்களையும், நம் கருத்துக்களையும், நமக்குப் பிரியமானவர்களையும், உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களையும் இந்தக் கணத்தில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற அனைத்து திரு இரத்தக் கிண்ணங்களிலும் வைத்து விடுவது நல்லது.

தேவவசீகரநேரம் தொடங்கி, திவ்ய நன்மை உட்கொள்ளும் நேரம் வரையிலும் நாம் பரிசுத்த தேவபயத்தாலும், நேசத் தாலும் நிரம்பியிருக்க வேண்டும். சர்வேசுரனை ஆராதித்துக் கொண்டிருக்கிற எண்ணற்ற தேவதூதர்களின் மத்தியில் நாம் இருக்கிறோம்.

உண்மையில் இந்த மிகப் புனிதமான நேரத்தில் மரியாதை வணக்கமின்றி இருப்பதும், சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பதும், பேசிக் கொண்டிருப்பதும் சபிக்கப்படத் தக்க அறியாமையின் அடையாளமாக இருக்கிறது. நமக்காக பீடத்தின் மீது மரிக்கும் சர்வேசுரனைக் கைவிட்டுவிட்டு, இச்சமயத்தில் கோவிலில் இருந்து வெளியேறுவது அதை விட மிகவும் மோசமானது. தவிர்க்கவே முடியாத, மிக மிக அவசரமான ஏதாவது ஒரு காரியத்திற்காக அன்றி, வேறு எதற்காகவும் ஒருவன் குறைந்த பட்சம் குருவானவர் திவ்ய நன்மை உட்கொள்ளும் நேரம் வரையிலாவது வெளியே போகக்கூடாது.

அன்பான வாசகரே, நீங்கள் பூசை காணும் நாள் உங்களுக்கு ஓராயிரம் நாட்களையும் விட அதிகத் தகுதியுள்ளது என்பதையும், ஒரு நாளின், அல்லது ஒரு வாரத்தின், அல்லது ஒரு முழு வருடத்தின் எல்லா உழைப்புகளும் ஒரு பூசையின் மதிப்போடு ஒப்பிடும்போது முற்றிலும் வெறுமையாக இருக்கின்றன என்பதையும் நினைவில் பதித்துக் கொள்ளுங்கள்.