சேசுநாதர் சதி துரோகத்திற்கு உள்ளாகிறார்!

"பன்னிருவரில் ஒருவனான இஸ்காரியோத் என்னப் பட்ட யூதாசிடத்தில் சாத்தான் புகுந்தான். அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் போய், தான் அவரை எவ்விதம் அவர்களுக்குக் காட்டிக்கொடுப் பதென்று அவர்களோடு பேசினான். அதனால் அவர்கள் சந்தோஷம் அடைந்து அவனுக்குப் பணம் கொடுக்க ஒப்பந்தம் செய்தார்கள். அவனும் வாக்குக்கொடுத்து, ஜனக் கூட்டம் இல்லாத வேளையில் அவரைக் காட்டிக் கொடுக்கும்படி சமயம் தேடிக்கொண்டிருந்தான்'' (லூக்.22:3,6).

சேசுநாதர், எதிர்பார்க்கப்பட்ட இரட்சகர்; இவ்வுலகை மீட்பதற்கு மனித அவதாரம் எடுத்த தேவசுதன்; நம் எல்லோருக்கும் நல்வழிகாட்டி, அதியுன்னத போதனை களைப் போதித்த பேராசிரியளர். இந்த அன்பரை அவமதித்து, வெறுத்துப் பகைத்தனர் யூதத் தலைவர்கள். எதிர்பார்க்கப்பட்டவரை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அவதாரம் எடுத்த ஆண்டவரை அழித்து விட எண்ணினார்கள். அரும்போதனைகளைப் போதித்த ஆசிரியரைப் பரிகாச நிந்தைக்கு ஆளாக்கக் கருதினார்கள்.

வஞ்சக நெஞ்சுடைய அந்த யூதத் தலைவர்களுக்கும் ஒரு வசதி கிடைக்கின்றது. பணப் பித்துப் பிடித்தவனான யூதாஸ் இஸ்காரியோத் அந்தத் தலைவர்களிடம் செல்கிறான். பணத்திற்காகத் தன் குருவைக் காட்டிக் கொடுப்தாக அவர்களோடு ஒப்பந்தம் செய்கிறான். ஏற்கெனவே மனந்திரும்பிய மதலேனாளின்பேரில் யூதாஸ் காட்டிய வெறுப்பு, அவனுடைய மனநிலையை வெளிக்காட்டியது. விலையுயர்ந்த பரிமளத் தைலத்தால் மதலேன் மரியம்மாள் சேசு இரட்சகரின் பாதங்களைப் பூசியபொழுது, யூதாஸ் அவளைக் கடிந்தான். ""ஏன் இந்த விரயம்? இத்தைலத்தின் கிரயத்தை என் கையில் கொடுத்திருந்தால், ஏழைகளுக்கு அதைத் தர்மம் செய்திருக்கலாமே'' என்று இரைந்தான். அவன் ""ஒரு திருடனாக இருந்ததால்,'' இவ்வாறு மற்றவர்கள் முன்னிலையில் கூறினான் என்று சுவிசேஷகரான அருளப்பர் கூறுகிறார். இதிலிருந்து தர்மத்திற்கு என்று இரட்சகருக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை ஏற்கெனவே யூதாஸ் அபகரித் திருக்கிறான் எனத் தெரிகிறது.

பண ஆசையால் பன்னிருவரில் ஒருவன் பஞ்சமா பாதகன் ஆகிறான். தம்மிடம் இருந்தும், ஏழைகளிடம் இருந்தும் திருடுகிற பழக்கம், தம்மையே காட்டிக் கொடுக்கும் கொடிய நிலைக்கு யூதாஸை இழுத்துச் செல் வதை அறிந்த நம் தயவுள்ள இரட்சகரின் திரு இருதயம் துயரம் அடைகிறது. உலக செல்வ சுகங்களை உதறித் தள்ள வேண்டும் என்று அவர் போதித்த போதனையும், உலகப் பற்றுதல்களை உன்னத விதமாய் அகற்றித் தள்ளிய அவரது தெய்வீக சாதனையும் யூதாஸின் மனதை மாற்றவில்லை.

இவ்வாறு, குருத் துரோகியாகிய யூதாஸ் சதி செய்த பின்னரும், தன் போதகர் பக்கத்தில் அமர்ந்து அவரோடு பந்தியில் கலந்துகொள்கிறான். சகோதரனே, சற்று சிந்தித்துப் பார். யூதாசின் துரோக சிந்தனையையும், பாதகச் செயலையும் சேசுநாதர் தெளிவாக அறிந்திருந்தார். தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஓர் அப்போஸ்தலனே தமது கொடிய விரோதிகளிடம் சென்று, தம்மைக் காட்டிக் கொடுக்க ஒப்பந்தமும் செய்து, அத்தீய செயலுக்குக் கைக்கூலியும் பேசி முடிவு செய்திருக்கிறான் என்பது அவருக்குத் தெரியும். அதற்குத் தகுந்த நேரத்தையும் இடத்தையும் அவன் தேடி வருவதையும் அவர் அறிவார். இதெல்லாவற்றையும் அறிந்திருந்த அந்த சாந்த சுரூபியின் நெஞ்சம் எத்தனை சஞ்சலம் அடைந்திருக்க வேண்டும்! மேலும் அவரே அக்கொடியவனின் பாதங்களைத் தொட்டுக் கழுவி முத்தமிடும் வேளையில் அவன் கால்களைக் கழுவுவது போல், அவனுடைய ஆத்துமத் தையும் கழுவி சுத்தம் செய்ய விரும்பியிருப்பார் அல்லவா? பாவத்தினின்று சகலரையும் மீட்க, பாரினில் உதித்த தயாளமிக்க தேவன், அந்தப் பரிசுத்த இரட்சணியத்தை உலகிற்குத் தெரியப்படுத்துவதற்காகத் தேர்ந்துகொண்ட பன்னிரண்டு ஊழியர்களில் ஒருவன் பாவத்தை விட்டு விலக மறுக்கிறான் என்பதை அறிந்து பதறுகிறார். அத்தீயவனின் கால்களைக் கழுவி முத்தம் செய்த பின்னர், தமது கடைசி இராப் போஜனத்தை சீடர்கள் எல்லோரோடும் சேர்ந்து உண்ண அவர் மேசையண்டையில் அமர்கிறார்.

தம் பாடுகளையும் மரணத்தையும் பற்றி இது வரை மறைமுகமாகப் பேசிய சேசுநாதர், இப்பொழுது தெளிவாகப் பகிரங்கப்படுத்துகிறார். பாஸ்காவிற்காகத் தயாரிக்கப்பட்ட உணவை ஒரே ஒரு பாத்திரத்தில் வைத்து எல்லோரும் எடுத்துண்பது யூதர்களின் வழக்கமாய் இருந்தது. இஸ்ராயேல் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்பதை அது எடுத்துக் காட்டியது. இவ்வித மாய்ப் பன்னிருவரும் தம்மோடு ஒரே பாத்திரத்தில் கையிட்டு உணவை எடுக்கும்போது, சேசுநாதர் திருவாய் மலர்ந்து தம்மோடு சேர்ந்து உண்பவர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். குற்றமற்ற அப்போஸ்தலர்கள் எல்லோரும் ""அது நானோ?'' என்று ஆண்டவரை வினவுகிறார்கள். யூதாஸும் அவ்விதமே, ""அது நானோ?'' என்று கேட்கிறான். சேசுநாதர் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாய், ""நீயே சொல்கிறாய்'' என்று கூறுகிறார்.

அன்பிற்கு அசையாத அவனுடைய நெஞ்சம், தன் துரோகச் செயல் அம்பலமாகி விட்டதென்ற பயத் தாலாவது மனந்திரும்பும் என்று அருட்கொடையாளர் நம்புகிறார். இல்லை! யூதாஸை அன்பு அசைக்கவில்லை, பயமும் நடுக்கவில்லை. அப்போஸ்தலரான அருளப்பர், நம் ஆண்டவரின் மறுபக்கத்தில் வீற்றிருந்தார். அர்ச். இராயப்பரின் தூண்டுதலின் பேரில், ""ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்க நினைப்பவன் யார்?'' என்று கேட்கிறார். ""அப்பத்தைப் பானத்தில் தொட்டு நான் யாரிடம் கொடுப் பேனோ அவன்தான்'' என்று திவ்விய சேசு பதிலளிக்கிறார். அவர் கொடுத்த அப்பத்தை வாங்கி உண்டபின்பும் யூதாஸின் மனது மாறவில்லை. சாத்தான் அவனுடைய இருதயம் முழுவதையும் பற்றிக் கொண்டான். ""நீ செய்ய இருப்பதை விரைவில் செய்து முடிப்பாயாக'' என்று இரட்சகர் கூறியதும் யூதாஸ் எழுந்து செல்கிறான். இவ்விதமாய்ப் போசன சாலையில் யூதாஸும் சேசுநாதரும் பிரிகிறார்கள். பூங்காவனத்தின் ஒலிவ மரத்தடியில் அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள். மற்றொரு முறை நம் ஆண்டவர் யூதாஸை மனந்திருப்ப முயற்சிப்பார்.

இவ்வாறு மனுக்குல மீட்பின் சரித்திரத்தில் பண ஆசையும், தெய்வீக ஆண்டவரைக் காட்டிக் கொடுக்கும் பாதகச் செயலும் கலந்து நிற்கின்றன.

பொறுக்கி எடுத்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவனும், பொறுமையின் களஞ்சியமான கருணை வள்ளலின் பக்கத்தில் மூன்று வருடங்கள் வாழ்ந்தவனும், உலக இரட்சகரின் பரிசுத்த போதனைகளைக் கேட்க பாக்கியம் பெற்றவனுமான யூதாஸை இதோ பணப் பித்து பிடித்து வாட்டுகிறது. இப்பித்து வளர வளர அன்பும் அருளும் குறைகிறது. மானமும் ஞானமும் மறைகிறது. ஆச்சரியமான புதுமைகள் செய்த ஆண்டவரை, அற்ப விலையான முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கும்படி செய்கிறது.

சகோதரனே! உன்னுடைய நெஞ்சிலும் எத்தனையோ தீய ஆசைகள் தோன்றி வளருகின்றன. அந்த அக்கிரம ஆசைகளை அகற்றித் தள்ள முயற்சி எடுக்கிறாயா? ஆசாபாசம் என்பது அனலைப் போல் உன் அறிவையும், மனத்திடத்தையும் அரித்து, எரித்துச் சாம்பலாக்கி விடும் என்பதை மறந்துவிடாதே. தீய ஆசைகளையும், நாட்டங் களையும் உடனே உதறித் தள்ளாது போவாய் என்றால், அவை உன் இருதயத்தில் வேரூன்றித் தடித்துப் பெருத்து, உன் ஆத்ம சரீர சத்துவங்களை அடிமைப்படுத்தி, உன்னை அழித்து விடும் என்பதை அறிந்துகொள்வாயாக.