சேசுநாதர் மனத் துயரத்தால் மரண அவஸ்தை அடைகிறார்!

"அவருடைய வியர்வையானது இரத்தமாக வடிந்து, தரையில் விழுந்தது'' (லூக்.22:44).

சேசுநாதர் அடைந்த துயரமான மரண அவஸ்தையின் கடைசியில்தான் அவரது வியர்வை இரத்தமாக வழிந்தோடி யிருக்க வேண்டும். அனுபவமிக்க மருத்துவ அறிஞர்கள் கூறுவதுபோல், இது அபூர்வமாக நடக்கக்கூடியதுதான். கட்டுக்கடங்காத துயரத்தாலோ, கலங்கிய நெஞ்சத்தால் ஏற்படும் இரத்த நாளங்களின் அதிர்வாலோ இவ்வித இரத்த வியர்வை ஏற்படுவது உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள். இரத்தம் பொங்கி, வியர்வையாக வந்ததாலேயே மரண மட்டும் துக்கமாயிருந்த நம் இரட்சகர் அந்நேரமே உயிர் துறக்காமல் இருந்தார் எனவும் சொல்லலாம்.

ஒலிவ மரத்தடியில்தான் உலக இரட்சகரின் உதிரம் நம்மை இரட்சிக்க முதன்முதலில் வழிந்தோடியது. ஒலிவத் தளிரானது சமாதானத்தைக் குறிப்பிடுவது. ஆதலால் சமாதான அரசராகிய திவ்ய சேசு தம் இரத்தத்தின் முதல் பங்கை சமாதானத்திற்கு எனத் தத்தம் செய்தார் (இசை.9:6).

நமது அன்புள்ள ஆண்டவர் தம்முடைய நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையைத் துடைத்தபோது, அவ்வியர்வை இரத்தமாய் இருப்பதைக் கண்டு என்ன செய்தார்? அந்நேரமே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அந்தத் திரு இரத்தத் துளிகளைத் தம் பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார். நம் இரட்சணியத்திற்காக அவர் மனமுவந்து சிந்திய இரத்தத்தின் முதல் பங்கு அது அல்லவா? மனிதனின் கைப்பாரம் அந்த மனுமகனின் பேரில் விழுந்து, அவருடைய இரத்தத்தைச் சிந்துமுன்னரே, தேவ பிதாவின் திருக்கரத்தின் பாரம் திவ்ய சுதனின் திருச் சரீரத்தில் விழுந்ததால் வழிந்த இரத்தம் இப்பாவ உலகில் விழுந்து அதை அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தியது.

என் சகோதரனே, உலக இரட்சகரின் இரத்த வியர்வை யின் உண்மைக் காரணம் என்ன என்று சற்று யூகித்துப் பார். கண்ணியம் நிறைந்த கோமகன் ஒருவன் கனவிலும் நினையாத பெரும் பழி செய்ததாகக் கருதப்படுவானானால், எதிர்பாராத நேரத்தில் இழிவுள்ள அவமானத்திற்கு அவன் இலக்காவான் என்றால், அந்த உத்தம ஆண்மகனுக்கு ஏற்படுவது என்ன? அவனுடைய முகம் சிவக்கின்றது. நெற்றியில் வியர்வைத் துளிகள் முத்துக்கள் போல் நிறைகின்றன. அவனுடைய இரத்தம் கொதித்துப் பொங்கு கிறது. இதுவே நமது இனிய இரட்சகருக்கும் நேர்ந்தது. சேசுநாதர் பூங்காவனம் என்ற ஜெத்சமெனித் தோட்டத் திற்குள் பிரவேசிக்கிறார். நம் பாவங்களின் பிணையாக அவர் தம்மைத் தேவ பிதாவின் நீதிக்குக் கையளிக்கிறார். உடனே மனுக்குலத்தார் செய்த மாபாவங்கள் அனைத்தும் அந்த மாசற்ற செம்மறிப்புருவையின் மேல் சுமத்தப் படுகின்றன. அத்தனை பாவங்களும் அவரைப் பிதாவின் முன் குற்றவாளியாக்குகின்றன. அக்குற்றத்தை அவரால் மறுதலிக்க முடியவில்லை. ஆதலால் பரிபூரண பரிசுத்த ராகிய அவர் தம்மேல் ஏற்றுக்கொண்ட நம் கொடிய பாவங்களைக் ண்டு வெட்கமும் அவமானமும் அடை கிறார். இந்த எல்லையற்ற அவமானம் அவருடைய திரு இரத்தத்தைப் பொங்கி எழும்படிச் செய்கிறது. பொங்கிய திரு இரத்தம் சரீரத்தின் கட்டுக்களைக் கடந்து வியர்வையாய் வெளி வருகிறது.

அடைந்த கஷ்டங்களும், எடுத்த கடும் முயற்சிகளும் வீணாய்ப் போவதைக் காண்போமானால், நாம் ஏங்கு கிறோம், மனம் உடைந்துபோகிறோம். அந்த ஏக்கத்தையும், துயரத்தையும் எதிர்த்துப் போராடி, நமது கடமையைக் கடைசி வரைக்கும் நிறைவேற்ற முயற்சிக்கும்பொழுது, நமது இருதயம் விம்முகிறது; இரத்தம் வேகம் அடைகிறது. இதுவே நம் ஆண்டவருக்கும் நேர்ந்தது. தம்முடைய கொடிய பாடுகளும் மரணமும் பல கோடி மனிதர்களுக்கு வீணாய்ப் போவதை ஞான திருஷ்டியால் பார்க்கிறார். அவருடைய மனம் ஏங்குகிறது. நெஞ்சம் துயரக் கடலில் ஆழ்கிறது. எனினும், தமது பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்ற அவர் பிரயத்தனம் செய்கிறார். மட்டற்ற அவரது துயரம், அவரை மரணத்திற்கு உள்ளாக்குவதாக இருக்கிறது. அந்நேரம், தீவிர வேகம் அடைந்த அவருடைய திரு இரத்தம், நாளங்களைக் கடந்து வியர்வையாய் வெளிவந்து தரையை நனைக்கிறது.

இந்த மரண அவஸ்தையின்போது, நமது அன்பர் கண்ணீர் வடிக்கின்றார். அந்தக் கண்ணீர் இரத்தமாய் மாறுகின்றது. இவ்விதம் எனக்காகவும், உனக்காகவும் அவர் வடிக்கும் திரு இரத்தக் கண்ணீர் அவருடைய இரத்த வியர்வையோடு கலந்து கீழே விழுகின்றது. என் ஆத்துமமே, கேள்: இதோ உன் கர்த்தர் சிந்தும் இரத்தத்தில் உன் பாவங் களும் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் விம்மிப் பொறுமி ஏங்கி விடும் ஒவ்வொரு பெருமுச்சிலும் உன் பாவங்கள் கலந்து வருகின்றன. அவரது மனக்கண் முன் தோன்றி, அவருக்கு வெட்கமும் அவமானமும் உண்டாக்கிய பாவங்களில் உன்னுடைய ஈனப் பாவங்களும் நிற்கின்றன. ஆ! அவருடைய திவ்விய திருப்பாதங்களில் விழுந்து, அவர் தம் தேவபிதாவின் முன்னே துரோகியாகிய உனக்காகவும் மனுப்பேசுவதைக் காதுகொடுத்துக் கேள். இறந்த லாசரின் கல்லறை முன்னே அவர் அழுதபோது, ""இதோ இவர் அவனை எவ்வளவு நேசித்திருக்கின்றார்!'' (அரு.9:36) என்று யூதர்கள் கூறினார்கள். கண்ணீரே வார்த்தைகளை விட கனிவுள்ள நேசத்தை வெளிக்காட்டுவது. உன் அன்புள்ள ஆண்டவர் உனக்காக வடிக்கும் இரத்தக் கண்ணீரும் இரத்தக் கண்ணீரும், சிந்தும் இரத்த வியர்வையும், அவர் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்று அறிவிக் கின்றன. 

ஆதியில் தேவன், ""ஆகக்கடவது'' என்று ஒரு வார்த்தை அருளிச் செய்தார். உடனே சகலமும் உண்டாயின. உலக மனிதர்களைப் பாவ அடிமைத்தனத்தினின்று மீட்பதற்கு தெய்வீக ஜோதி வடிவான தேவசுதன் ஆதிபிதாவின் திருச்சித்தம்போல் "ஆகக்கடவது'' என்றார்; ஆண்டவருடைய சம்மனசானவர் பரிபூரண பரிசுத்தவதியாகிய கன்னிமாமரியிடம் அனுப்பப்படுகிறார்; அந்த திவ்ய இராக்கினியும் தேவ திருச்சித்தத்தை அறிந்த மாத்திரத்தில், "ஆகக்கடவது'' என்ற அடிமையின் சம்மதத்தைக் கொடுக்கிறார்கள். அந்நேரமே சுத்த அரூபியானரும், சுயமாய்ப் பிரகாசிப்பவருமான தேவசுதன் மனிதாவதாரமாகி, நம்முடனே கூட வாசம் செய்கின்றார்.

அதே தேவ-மனிதனானவர் இதோ இந்நேரத்தில் தாம் பானம் பண்ண வேண்டுமெனக் கொடுக்கப்படும் துன்பங்களின் கசப்பான பாத்திரம் தம்மை விட்டு அகலும்படி மன்றாடுகிறார். தன்னந்தனியாய், எவ்வித ஆறுதலும் அற்றவராய், அவர் இரந்து கேட்கிற மன்றாட்டிற்கு, ஏக பிதாவின் மறுமொழி என்ன? அந்தக் கசப்பான பாத்திரத்தை அவர் பானம் பண்ண வேண்டும் என்பதே. தேவ பிதாவின் திருச்சித்தத்தை அறிந்ததும், "ஆகக்கடவது'' என்று அமைந்த மனத்தினராய்ச் சம்மதிக்கிறார்.

என் சகோதரனே! கண்ணீர் கணவாய் என்னும் இப்பூலோகத்தில், நீயும் கசப்பான பாத்திரத்தில் பானம் பண்ண வேண்டி வரலாம். தேவ திருவுளம் உனக்கு அனுப்பும் சிலுவை துன்பங்கள் உன்னுடைய திட மனதைக் கலங்கும்படி செய்யலாம். அப்போது நீயும், நமது அன்புள்ள சேசுவோடு ஒன்றித்து, "ஆகக்கடவது'' என்று சிரம் பணிவாயாக.

சிருஷ்டிகரிடம் இருந்து வெளிவரும் "ஆகக்கடவது'' என்ற தெய்வீகக் கட்டளைக்கு, சிருஷ்டிகள் தலை வணங்கி, "ஆகக்கடவது'' என்று சொல்லிக் கீழ்ப்படிவதிலேயே சகல ஞானமும் அடங்கியிருக்கின்றது.