சேசுநாதர் மனுக்குலத்தின் அரசரும் குருவுமானவர்!

"நீங்கள் என்னைக் குருவென்றும் ஆண்டவர் அழைக் கிறீர்கள்; நீங்கள் சொல்லுவது சரியே; ஏனெனில் நான் அவர்தான்'' (அரு.13:13) என்று தெளிவாகப் பேசுகிறார். உலகத்தை இரட்சிக்க வந்த உன்னத ஆசிரியர், இவ்வாறு கூறியது அவர் மரணமடைவதற்கு முந்தின நாளிலே. "சேசு நாதர் தம்முடைய காலம் வந்ததென்று அறிந்து, இவ்வுலகத் திலே இருந்த தம்முடையவர்களைச் சிநேகித்தவர் கடைசி பரியந்தம் சிநேகித்தார்'' (அரு.13:1). அந்த மட்டற்ற அன்பு, பெருக்கெடுத்து, பிரளயமாய் நமக்குக் காட்சியளிப்பது, சேசுவின் கடைசி நாட்களிலேதான். அப்பொழுதுதான் அவருடைய இராஜரீகம் எத்தகையது, அவருடைய குருத்துவசம் எவ்வகையானது என்று நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

சாதாரண மனிதன் ஒருவன் தன் தோள் வலிமையாலும், புத்தி தீட்சணியத்தாலும் மற்றவர்களை அடக்கியாள முயற்சித்து ஓர் அரசன் ஆகிவிடுகிறான். பின்னர் அவனையும் அவன் வாரிசுகளையும் அரசர்கள் என மக்கள் அங்கீகரிக்கின்றனர். ஆனால் மக்களின் மனம் வேறுபட் டாலோ, அம்மன்னர்களின் வீரமிக்க ஆண்மையும், சாதுரிய அறிவாற்றலும், அந்த இராஜரீகத்தைக் காப்பாற்றப் போதாதவைகளாக இருக்கின்றன. ஏனெனில் மக்களுக் காகவே மன்னர்களே அன்றி, மன்னர்களுக்காக மக்கள் என்பதில்லை. மனுக்குலத்தின் ஏக அரசரான சேசுநாதரின் இராஜரீகமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டது. திவ்ய சேசுவின் இராஜரீகம் நித்தியமானது; நிரந்தரமானது. மக்கள் பிரியப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம், இல்லை யேல் நிராகரித்து விடலாம் என்று இந்த இராஜரீகத்தைப் பற்றிக் கூற இயலாது. "என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவ னுக்குத் தீர்வையிடுகிற நடுவவர் உண்டு'' என அவரே எச்சரிக்கை செய்கின்றார். ஏனெனில் அவருடைய தெய்வீக சுபாவத்திலேயே அந்த இராஜரீகமும் அரசுரிமையும் அடங்கி இருக்கின்றன.


அவர் ஒருவரே சகலத்தையும் ஆளப் பிறந்தவர்.

இந்த இராஜரீகம் எப்படிப்பட்டது? சேசுநாதர் பிலாத்து என்னும் தேசாதிபதியின் முன்னே நிற்கின்றார். அவன் அவரை நோக்கி, "நீ யூதருடைய ராஜாவோ?'' என்று கேட்கின்றான். அந்நேரம், அந்த அதிகாரியின் மனத்தில் எழும்பிய போராட்டத்தை அறிந்த இரட்சகர், "நீராகவே இதைச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் உமக்குச் சொன்னார்களோ?'' என்று கேள்விக்குப் பதில் கேள்வி கேட்கிறார். உடனே பிலாத்தென்பவன், தன் அகப் போராட்டத்தை அவருக்கு மறைத்து மழுப்புகின்றான். தேவ திருச்சுதனும், "என் இராச்சியம் இவ்வுலகத்திற்கு அடுத்ததல்ல'' என்று அவனுக்குத் தெளிவுபடுத்துகின்றார்.. இதோ! பரலோக பூலோகம் அனைத்திற்கும் இராஜாவாக இருக்கும் இந்த ¼சுசுக்கிறீஸ்துவின் இராஜரீகம். அவருடைய இராச்சியம் இவ்வுலகிலும் இருக்கின்றன. ஆனால் அது இவ்வுலகத்திற்கு அடுத்ததல்ல. அவருடைய இராச்சியத்திற்கு எல்லை என்பதில்லை. பகுத்தறிவு படைத்த மனிதர்களோ, சம்மனசுக்களோ எங்கெங்கு வாழ்கின் றனரோ, அங்கெல்லாம் அந்த இராச்சியம் பரவி நிற்கின்றது. இந்த மகா புனித ஞான இராச்சியத்தைப் பற்றியே வேதாகம நூல்கள் எல்லாம் கூறுகின்றன. படைக்கப்பட்ட சகல சிருஷ்டிகளையும் ஆளப் பிறந்தவர் இவர் ஒருவரே என்று அந்த வேத வசனங்கள் ஒருவாய்ப்படத் தீர்மானிக் கின்றன.

சகோதரனே! சகல இருதயங்களின் அரசராகிய சேசுநாதர் உன் இருதயத்தையும் ஆட்கொள்ள வேண்டும். இதற்காக அல்லவா அவர் மனிதனாக அவதரித்தார்? "நான் இராஜா என்று நீரே சொல்லுகிறீர். நான் சத்தியத்திற்குச் சாட்சி சொல்லும்படியாகப் பிறந்தேன். அதற்காகவே உலகத்திற்கு வந்தேன். சத்தியத்தைச் சார்ந்தவன் எவனும் என் சத்தத்திற்குக் காதுகொடுக்கிறான்'' (அரு.18:37) என்று அன்று அவர் திருவுளம்பற்றினதுபோல், இன்றும் உன்னிடம் மொழிவதில்லையா? அவரை உன் அரசராகவும் ஆண்டவ ராகவும் ஏற்றுக்கொள்ளாவிடில், "தீர்வையிடுகிற நடுவர்'' உன்னைத் தண்டியாமல் விடுவாரா? மேலும், இந்த அன்பரசருக்கு அடிமைப்பட்டிருப்பதே ஓர் ஆனந்த சுதந்திர வாழ்வு அல்லவா? இவருக்கு அடிமைப்படாவிடில், உன்னைப் போன்ற வேறொரு மனிதனுக்கு, அல்லது உன்னிலும் கேவலமானதொரு சக்திக்குத்தான் நீ அடிமைப் பட்டிருத்தல் வேண்டும். "என்னோடு இல்லாதவன் எனக்கு விரோதியாயிருக்கின்றான்'' எனக் கூறக்கூடியவர் இவர் ஒருவரே. ஆதலால், அன்புள்ள சகோதரனே, உன் ஆத்தும அரசராகிய இந்த நல்ல ஆண்டவருடைய இனிய நுகத்தடிக்கு வந்து சேர்வாயாக.

நமது சத்திய அரசராகிய சேசுநாதர் நித்திய குருவாகவும் இருக்கின்றார் என்று வேத ஆகமங்கள் போதிக்கின்றன. குரு என்று நாம் குறிப்பிடும்பொழுது உலக மனிதர்களுக்கு ஓர் உத்தம வழியை வகுத்துக் காட்டும் உன்னத ஆசிரியர் என்று மாத்திரம் உரைப்பதில்லை. குருவாயிருப்பவர் அர்ச்சிக் கிறவராகவும் இருக்கின்றார். பூலோகத்தைப் பரலோகத் தோடு இணைக்கும் ஒரு வசீகர வல்லமை; பூவுலக மாந்தரைத் தேவுலக சர்வேசுரனோடு சேர்த்து வைக்கும் ஒரு மத்தியஸ்தர்; நமக்காகத் தேவனிடம் பரிந்து பேசுபவர்; நமது பலி ஆராதனைகளை நம் பெயரால் ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்பவர்; தேவ சன்னிதானத்தில் நமது பிரதிநிதியாயிருப்பவர்; தேவனுடைய மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் நமக்குப் பெற்றுத் தருபவர்.

மானிட அவதாரம் எடுத்த தேவசுதன், மகிமைப் பிரதாப பிதாவினிடம் நமக்காக மனுப்பேசி, அவரோடு நம்மைச் சமாதானம் செய்து வைக்கும் திருத்தொண்டைத் தாமாகவே ஏற்றுக்கொண்டார். "சர்வேசுரன் ஒருவரே, அவ்வித சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நிற்கும் மத்தியஸ்தர் ஒருவரே. அவரே எல்லோருடையவும் மீட்புக் கிரயமாகத் தம்மையே தியாகம் செய்த சேசுக்கிறீஸ்து வாகிய மனிதர்'' (1திமோத்.2:5). இந்த சமாதானம் நம் பாவங்களுக்குத் தகுந்த பரிகாரம் செய்த பின்னரே ஏற்படல் வேண்டும். ஆதாலால்தான் உலகத்தின் குருவாகிய இந்த நல்லன்பரே நமக்காக அந்தப் பரிகாரத்தையும் செய்ய முன்வருகின்றார். "இதோ! உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை'' (அரு.1:29). "சர்வேசுரன் மெய்யாகவே கிறீஸ்துவிலிருந்து உலகத்தைத் தம்மோடு சமாதானப்படுத்தினார்'' (2கொரி. 5:19). "நீங்கள் கிறீஸ்துவின் விலைமதிக்கப்படாத இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள்'' (1இரா.1:18).

இவ்விதம் பிதாவின் சன்னிதானத்தில் பலியை நிறை வேற்றும் அர்ச்சிக்கிறவராகவும் பலிப்பொருளாகவுமே இருந்து, அந்த "ஒரே பலியால் நித்தியத்திற்கும் அர்ச்சிக்கப் பட்டவர்களை அவர் புனிதப்படுத்தினார்'' (எபிரே.10:12). "கிறீஸ்துநாதர், வரவிருக்கும் நன்மைகளுக்குப் பெரிய குருவாக நின்று, பரிசுத்த சன்னிதானத்தில் தன் இரத்தத்தின் பலனால் ஒரே முறையாகப் பிரவேசித்து, நித்திய இரட்சணியத்தைப் பெற்றுத் தந்தார்'' (எபி.9:11).

எனது அன்புள்ள சகோதரனே, கேள். சிலுவையில் சேசுநாதர் கொடுத்த பலியின் அளவற்ற மதிப்பின் காரணத் தால், அதைத் திரும்பத் திரும்ப ஒப்புக்கொடுக்க வேண்டுவதில்லை. ஆனால் அவர் ""நித்தியத்திற்கும் குருவாயிருப்பதால்'' சதாகாலம் நிலைத்திருக்கும் ஒரு குருத்துவம் அவரிடத்தில் இருக்கின்றது. ஏனெனில் நமக்காகப் ""பரிந்து பேசுவதற்காக அவர் என்றும் ஜீவிக்கின்றார்'' (எபிரே.7:24). ஆதலால்தான் சேசுநாதர் எக்காலத்திலும் நமது குருவாகவும் ஆண்டவராகவும் இருந்து, நம்மை அர்ச்சித்து ஆண்டு நடத்தி வருகிறார். ""சூரியன் உதயந் தொட்டு அஸ்தமன பரியந்தம் நமது நாமம் சனங்கள் நடுவில் மகத்தானதா யிருக்கின்றது; எவ்விடத்தும் பலியிடப்பட்டு, நமது நாமத்துக்குப் பரிசுத்தமான பலி நடந்து வருகின்றது'' (மலாக்.1:11) என்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசியால் கூறப் பட்ட வசனம் இன்று நிறைவேறி வருகிறது. நிறைவேறி வரத் தானே வேண்டும்? ""ஒவ்வொரு பெரிய குருவும் பலிப் பொருட்களை ஒப்புக்கொடுக்கவே ஏற்பட்டிருக்கிறார். ஆதலால் சேசுவும் ஒரு பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பது அவசியம்'' (எபி. 8:3) என்று அர்ச். சின்னப்பர் கூறும் பொழுது, நாம் அந்த வசனத்திற்கு வேறு அர்த்தம் கொடுக்கலாகுமா? எனவே, என் சகோதரனே, நமது தலைமைக் குருவாகிய சேசுநாதர் திவ்விய பலிபூசையின் வாயிலாக நமது பீடங்களில் இறங்கி, உனக்காக ஞான விதமாகத் திரும்பத் திரும்பக் கல்வாரி மலைப் பலியைப் புதுப்பிக்கின்றார். அப்பலியின் பேறுபலனை நீ அடைந்து கொள்கிறாயா? ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திரு நாட்களிலும் நீயும் அந்த உன்னதப் பலியில் பங்கடை கிறாயா? இல்லையேல் உன் குருவும் ஆண்டவருமான அந்த அன்பரைப் புறக்கணித்துத் தள்ளுகிறாய் என்றுதான் அர்த்தமாகிறது.

சேசு இரட்சகரின் மீட்புப் பலனை நீயும் உன் குடும்பத்தினரும் அடைந்து எந்நாளும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் ஜீவித்து மரிக்கும் பாக்கியத்தை விட மேலானது ஒன்றில்லை என அறிந்துகொள்வாயாக.