உத்தரிக்கிற ஸ்தலம் - காரணம்

தேவ பயமுள்ள மக்கள் சாவான பாவத்தை விலக்க - கடுமையாக முயல்கிறார்கள். என்றாலும் அற்பப் பாவங் களை எதிர்த்து நிற்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவையும் கடவுளால் தண்டிக்கப்படுகின்றன. "மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வீணான வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளிலே கணக்குச் சொல்வார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று சேசு கூறுகிறார் (மத்.12:36).

அப்படியிருக்க, ஓர் அயலான் அல்லது ஒரு நண்பனுடைய குற்றத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, நாம் ஏன் அவனுக் காக ஒரு ஜெபம் செய்யக் கூடாது? உண்மையான கிறீஸ் தவ பிறர் சிநேகம் , யாருடைய நற்பெயரையும் கெடுப் பதையோ, அதற்கு எதிராக அவதூறு பேசுவதையோ தடை செய்கிறது. "அது உண்மை என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி, உன்னையே நியாயப்படுத்திக் கொள்வது, சாத்தானின் புத்திசாலித்தனமான ஒரு தந்திரமாக இருக் கிறது.

இப்படிப்பட்ட அற்பப் பாவங்கள் ஒரு நல்ல உத்தம மனஸ்தாப மந்திரத்தால், அல்லது ஒரு தவச் செயலால், அல்லது பாவசங்கீர்த்தனத்தில் மன்னிக்கப்படுகின்றன என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இந்தப் பாவங்களுக்கு முழுமையாகப் பரிகாரம் செய்வதற்கு முன், அல்லது அப்படிச் செய்ய எண்ணுவதற்கு முன்பே நாம் மரணத்தால் மேற்கொள்ளப்பட்டுவிட எப்போதும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, தேவ நடுவரின் முன் நிற்கும்போது, இன்னும் பரிகரிக்கப்படாத நமது பாவங்கள் நம்மைக் கலக்க மடையச் செய்யும்.

நமது தீய, தேவையில்லாத பேச்சு களையும், வம்புகளையும் பற்றி அப்போது துயரத்தோடும், கடும் அச்சத்தோடும் நினைத்துப் பார்க்க மட்டும்தான் நம்மால் முடியும். அச்சமயத்தில், கடவுள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிக்கும் நெருப்புக்கு நம்மைத் தீர்வையிடுவது முற்றிலும் நீதியானது என்று ஒப்புக்கொள்ள மட்டுமே நம்மால் முடியும். அப்படியானால், நம் பாவங்கள் சாவான பாவத்திற்கு ஆபத்தான முறையில் மிக நெருங்கியவையாகத் தோன்றும்போது, நாம் எவ்வளவு பயங்கரமாக அஞ்சி நடுங்குவோம்!

உத்தரிப்பின் ஸ்தலம் ஒன்று உள்ளது என்றும், மரணத்திற்குப் பிறகு, மரித்தவர்கள் அங்கே தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள், ஆனால் பூலோகத்திலுள்ளவர்களின் ஜெபங்கள் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் திருச்சபை அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே விசுவசித்து வந்துள்ளது. பழைய ஏற்பாடும், கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டு கால யூதப் பாரம்பரியமும், "பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படி மரித்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது பரிசுத்தமும் பிரயோசனமுமுள்ள எண்ணமா யிருக்கிறது" (2 மக்க. 12:46) என்று உறுதியாகக் கற்பித்தன.

உத்தரிக்கிற ஸ்தலம் என்ற வார்த்தை ஏறத்தாழ 13-ஆம் நூற்றாண்டு வரையிலும் பிரசித்தமான ஒன்றாக இருக்கவில்லை, என்றாலும், இன்று நம் பூசையில் நடப்பது போல், ஆதிக் கிறீஸ்தவர்கள் தங்கள் இறந்தவர்களுக்காக ஜெபித்தார்கள். அநேக ஆதிக் கிறீஸ்தவ எழுத்தாளர்கள், மரித்தவர்களுக்கான ஜெபிப்பது பற்றிக் குறிப்பிடு கிறார்கள். எடுத்துக்காட்டாக அர்ச்சியசிஷ்ட சிப்ரியன் (கி.பி.245), அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே எல்லாத் தேவாலயங்களிலும் இறந்தவர்களுக்காக ஜெபிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது என்று கூறுகிறார்.

தெர்த் துல்லியனும் திருச்சபையின் இந்தப் புராதன மான வழக்கத்திற்குச் சாட்சியம் கூறுகிறார்: "விசுவாசமுள்ள மனைவி, இறந்த தன் கணவனுக்காக, குறிப்பாக அவனுடைய மரண நினைவு நாளில் ஜெபிப்பாள்" என்று கூறுகிறார் (De Montag 10).

தமது Confessions என்னும் நூலில், அர்ச். அகுஸ்தீன் தம் தாய் சாகும் போது தம்மிடம் வேண்டிக் கொண்ட காரியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: "நீர் இந்த உடலை எங்கே வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளும்; அதைப் பற்றி நீர் எந்தக் கவலையும் அடையத் தேவையில்லை. நான் உம்மிடம் கேட்ப தெல்லாம் ஒன்றே ஒன்றுதான், நீர் எங்கே இருந்தாலும், கடவுளின் பலிபீடத்தண்டையில் என்னை நினைவுகூரும் " (IX. chap. XI).

உண்மை , உத்தரிப்பின், அல்லது சுத்திகரிப்பின் நிலையில் இருப்பவர்களால் தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முடியாது, ஆனால் அவர்கள் அதிக சீக்கிரமாக மோட்சம் சென்றடைய , விசேஷமாக ஜெபமாலை, சிலுவைப்பாதை ஜெபிப்பதன் மூலமும், அவர்களுக்காகப் பூசைகள் நிறைவேறச் செய்து ஒப்புக்கொடுப்பதன் மூலமும் நாம் உதவி செய்யலாம். நம் துன்பங்களையும், வேலை யையும், நற்செயல்களையும் ஒப்புக்கொடுப்பதன் மூல மாகவும் அவர்களுக்கு நாம் உதவி செய்யலாம். ஆம், சேசுநாதரின் ஞான சரீரத்தினுள் உள்ள அன்பின் வல்லமை, மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. மற்றவர்களின் உதவியை நாம் நம்பியிருக்கும் வேளையிலும் கூட, நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.