உத்தரிக்கிறஸ்தலத்தின் வழியாக: காத்திருத்தலின் ஏக்க நிலை!

ஆனால், மரிக்கும்போது பாவசங்கீர்த்தனம், அவஸ்தைப்பூசுதல் போன்ற தேவத்திரவிய அனுமானங்களால் சாவான பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருந்தாலும், இன்னமும் தன் பாவங்களுக்காக முழுமையாகப் பரிகாரம் செய்யாத ஆன்மா தனது தெய்வீக நடுவரால் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறது.

தன் பாவங்களுக்கு உத்தரித்து, முழுமையாகப் பரிகாரம் செய்யும் வரை அது கடவுளைக் காண இயலாது. பரிசுத்த மில்லாத எதுவும் கடவுளின் இராச்சியத்தில் பிரவேசிக்க முடியாது என்பதுதான் இதன் காரணம். மகா கொடூரமான உத்தரிக்கிற நெருப்பின் வேதனையையும் தாண்டி, கடவுளைக் காண வேண்டும் என்ற அந்த ஆன்மாவின் துடிப்பும், வேதனையுமே அதன் மிகப் பெரிய வாதையாக இருக்கும்.

சாவான பாவத்தோடு மரிக்கும் ஆத்துமத்தின் பரிதாப நிலை : நரகம்! ஆனால் தன் சாவான பாவங்களுக்கு தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் மன்னிப்புப் பெறாத நிலையில் மரிப்பவனின் நிலை எவ்வளவு பயங்கரத்துக்குரியது, எவ்வளவு அவலமானது! அவனது உடலிலிருந்து ஆன்மா பிரிந்த கணத்தில், அதே இடத்தில், அவனது நித்திய நடுவர் அவனுக்குத் தோன்றுகிறார். இந்த ஆத்துமத்தின் கண்களும் திறக்கப்படுகின்றன.

இந்தக் கணத்தில், தன்னை ஈன்றெடுத்தவரும், தனது இறுதிக்கதியுமான சர்வேசுரனை அந்த ஈன ஆன்மா மீண்டும் கண்டுகொள்கிறது! ஆனால் இதோ, அதன் முன்பாக இருக்கிற இந்த தெய்வீக நடுவரின் காட்சியோ அதனால் தாங்க இயலாததாக இருக்கிறது!

எந்த பயங்கரமுள்ள தேவ பிரசன்னம் இஸ்ராயேலின் பாளையத்திலிருந்த இலட்சக்கணக் கான மக்களை நடுநடுங்கச் செய்ததோ (யாத். 19:16), யாருடைய தெய்வீகப் பிரசன்னத்தால் மக்கள் அனைவரும் குரல்களையும் சுடரொளிகளையும், எக்காளத்தின் ஒலியையும், புகைந்து கொண்டிருந்த (சீனாய் மலையையும் தரிசித்து, அச்சமுற்றுத் திடுக்கிட்டு, மோயீசனை நோக்கி: ''நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடு பேச வேண்டாம், பேசினால் உயிர் போய்விடும்'' (யாத். 20:18, 19) என்றார்களோ, அந்த வல்லமை மிக்க, பாவத்தை வெறுத்துப் பகைக்கிற எரிச்சலுள்ள தேவனுக்கு முன்பாக, இதோ இந்த ஆன்மா தன்னந்தனியாக நிற்கிறது!

ஓ, ஒவ்வொரு மனிதனும் இதை நினைவில் கொள்ளட்டும்! இந்நிலையிலிருந்து தப்ப எவனாலும் முடியாது! நீ மரிக்கும்போது உன் ஆன்மாவில் சாவான பாவக்கறை இருக்குமானால், இந்த நீதியுள்ள சர்வேசுரனுக்கு முன்பாக நீயும் தன்னந்தனியாக நிற்க வேண்டியிருப்பது உனக்கு எப்பேர்ப்பட்ட பயங்கரமாக இருக்கும்!

இதோ, அவர் தீர்ப்பிடுகிறார்! "சபிக்கப்பட்டவனே! என்னை விட்டகன்று, பசாசுக்கும் அதன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போ... பிரயோஜனமற்ற இந்த ஊழியனைப் புறம்பான இருளிலே தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டா யிருக்கும்" (மத் 25:41, 30).

பாவி இந்த பயங்கரமுள்ள தீர்ப்பைக் கேட்டு நடுங்குகிறான்! பதைபதைத்துத் துடிக்கிறான். எப்படியாவது இந்த தீர்ப்பு மாற்றப்படலாகாதா என்று தவித்துச் சோர்ந்து போகிறான் இதோ, இந்தத் தீர்ப்புக்காகவே காத்திருந்த பசாசுக்கள் நெருப்பாலான சங்கிலிகளால் அவனைப் பிணைத்து இழுத்துக்கொண்டு நரகத்தினுள் போய் விழுகின்றன. எல்லாம் முடிந்து போயிற்று!

நரகத்தில் எல்லா விதமான துன்பங்களும் நிறைந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை எல்லாவற்றிலும் மிகக் கொடூரமானது, இனி நித்தியத் திற்கும் கடவுளை இழந்து போனேனே என்ற ஆத்துமத்தின் வேதனைதான். சமீப காலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் நாம் காணும் ஒரு செய்தியை நினைத்துக் கொள்ளுங்கள்.

சிறு குழந்தைகள் தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட போர்வெல் குழிகளுக்குள் விழுந்து சிக்கிக்கொண்டு இறந்து போகிறார்கள். 100 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு இன்னும் உயிரோடிருக்கிற அந்தக் குழந்தையின் மனநிலையை சிந்தித்துப் பாருங்கள்! அவன் தன்னைப் பெற்றவளை நினைக்கிறான்!

அன்பும், கதகதப்பும் நிறைந்த அவளுடைய மடியை நினைக்கிறான். அவளிடம் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடத் துடிக்கிறான். ஆனால் அது அவனால் முடியாது. மிகக் கொடூரமான வேதனைதான் இது! ஆனால் கடவுளை இழந்து, அவருக்காக நித்தியத்திற்கும் ஏங்கிக்கொண்டேயிருக்கப் போகிற ஆத்துமத்தின் வேதனைக்கும், துன்ப துயரத்திற்கும் முன்பாக, இந்தக் குழந்தையின் வேதனை ஒன்றுமேயில்லை எனலாம்!

அர்ச். சாமிநாதர் சபையின் அதிபராயிருந்த முத். ஜோர்டான் ஒரு முறை ஒரு மனிதனைப் பிடித்திருந்த சாத்தானிடம் : "கடவுளின் காட்சியைப் பெற அனுமதிக்கப்படுவதற்கு நீ எதைத் தர ஆயத்தமாயிருப்பாய்?" என்று கேட்டபோது, சாத்தான் இப்படிப் பதில் சொன்னான்: "கூர்முனைகளும், ஆண்களும், ஊசிகளும் வெளிப்புறத்தில் கொண்ட ஒரு தூண் பூமியிலிருந்து மோட்சத் திற்கு ஊன்றப்பட்டிருக்குமானால், ஒரு சில விநாடிகளாவது அந்த தெய்வீகத் திருமுகத்தின் காட்சியை உற்றுநோக்க அனுமதிக்கப்படுவதற்காக, இன்றிலிருந்து தீர்வையின் நாள் வரை அத்தூணின் மீது மேலும் கீழுமாக இழுத்துச் செல்லப்பட்ட நான் மகிழ்ச்சியோடு சம்மதிப்பேன்!!"

ஆ. சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் இந்தப் பேரிழப்பு எவ்வளவு நிர்ப்பாக்கியமானது! அது அனுபவிக்கிற இந்தக் கொடூர வேதனையை எந்நிலையிலும் மனிதரால் விளங்கிக்கொள்ள முடியாது. மனித அறிவுக்கு இது எட்டாது. இதையே அர்ச். பொன வெந்தூர், ''நரகத்திலுள்ள சபிக்கப்பட்டவர்கள் வேறெதையுமன்றி எப்போதும் கடவுளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது அவர்களை சொல்லிலடங்காத விதமாக வாதிக்கும். கடவுளைப் பற்றிய சிந்தனை தரும் வாதையை விடப் பெரிய வாதை எதுவும் சபிக்கப்பட்ட ஆத்துமத்திற்கு இல்லை என்கிறார்.

ஆம்! தன் இறுதிக் கதியும், சகல நன்மைச் சுரூபியும், தான் உலகில் இருந்த வரை அளவற்ற விதமாகத் தன்னை நேசித்தவரும், தம்மையே முழுமையாக தனக்குக் கையளித்தவருமான சர்வேசுரனை எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் ஆன்மா துடிக்கிறது, தவிக்கிறது, ஏங்கிச் சோர்ந்து போகிறது.

ஆனால் பாவம் கடவுளுக்கும் சபிக்கப்பட்ட ஆன்மாவுக்குமிடையே ஒரு பெரும் சுவராக நின்று பிரிக்கிறது. கடவுள் அடிக்கடி இந்தச் சுவரைத் தாண்டி வருகிறார், நரக அக்கினிக்கு மத்தியிலும் அந்த ஆத்துமத்தைத் தண்டித்துத் துன்புறுத்து வதற்காக! ஆனால் ஆத்துமத்தால் இந்தச் சுவரை இனி ஒருபோதும் தாண்டி வெளியே வரமுடியாது!

இந்த வார்த்தைகள் அதீதமானவை என்று தோன்றலாம். ஆனால் அர்ச். தொன் போஸ்கோ கண்ட கனவு இது உண்மை என்று எண்பிக்கிறது. அவர் தமது காவல் சம்மனசானவரால் ஒரு முறை நரகத்தைக் காணும்படி கனவில் அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது நரகத்தின் வாசலில் அவர் நின்று கொண்டிருக்கிறார். இனி அவரே நேரடியாகப் பேசுவதைக் கேட்போம்: - "நான் கடும் திகிலோடு ஏறிட்டுப் பார்த்தபோது, தொலைவில் ஒருவன் அந்தச் சரிவான சாலையில் கட்டுப்படுத்தப்பட முடியாத வேகத்தில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவன் அருகில் வந்தபோது, அவன் என் (விடுதிச்) சிறுவர்களில் ஒருவன்தான் என்று நான் கண்டு கொண்டேன். கலைந்திருந்த அவனது தலைமுடியின் ஒரு பகுதி அவன் தலை மீது குத்திட்டு நிற்க, மறு பகுதி காற்றில் பின்பக்கமாகத் தள்ளப்பட்டது. தண்ணீரில் விழுந்து மிதக்கும் முயற்சியில் கைகளை அடித்துக் கொள்பவனைப் போல, அவனது கரங்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவன் நிற்க விரும்பினான், ஆனால் முடியவில்லை. நீட்டிக் கொண்டிருந்த கற்களில் கால் இடறியதால், அவன் தொடர்ந்து இன்னும் வேகமாக விழுந்து எழுந்து கொண்டிருந்தான். "நாம் அவனுக்கு உதவி செய்வோம், அவனைத் தடுத்து நிறுத்துவோம்" என்று நான் கத்தினேன். ஒரு வீண் முயற்சி யாக அவனைத் தடுக்க என் கரங்களை நீட்டவும் செய்தேன். "அவனை விட்டு விடும்” என்று என் வழிகாட்டி பதில் சொன்னார். ''ஏன்?''

“கடவுளின் பழிதீர்த்தல் எவ்வளவு பயங்கரமுள்ளது என்று உமக்குத் தெரியாதா? அவரது நீதியுள்ள கடுஞ்சினத்திலிருந்து தப்பியோடிக் கொண்டிருப்பவனை உம்மால் தடுத்து நிறுத்தி விடமுடியும் என்று நினைக்கிறீரா?"

இதனிடையே அந்தச் சிறுவன், கடவுளின் கடுங்கோபம் தன்னை இன்னும் துரத்திக் கொண்டு வருகிறதா என்று பார்க்கும் முயற்சியில் நெருப்புமயமான தன் பார்வையைப் பின்னோக்கித் திருப்பியிருந்தான். அடுத்த கணம் அவன் கால் இடறி கீழே விழுந்து உருண்டு, அந்த மலையிடுக்கின் அடிவாரத்திற்கு வந்து, தனது ஓட்டத்தில் தான் தஞ்சமடைய வேறு நல்ல இடம் கிடைக்காது என்பது போல், அந்த வெண்கலக்கதவில் வேகமாக மோதினான்.

"அவன் ஏன் கடும் அச்சத்தோடு பின்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்?” என்று நான் கேட்டேன்.

''ஏனெனில் கடவுளின் கடுங்கோபம் நரகத்தின் வாசல்களையும் ஊடுருவி அவனைச் சென்றடைந்து, நரக நெருப்பின் மத்தியிலும் கூட அவனைச் சித்திரவதை செய்யும்!''

சிறுவன் கதவில் மோதியதும், அது ஒரு பெரும் கர்ஜனையோடு வேகமாகத் திறக்க, அடுத் தடுத்து, உள்ளேயிருந்த ஓராயிரம் கதவுகள் காதைச் செவிடாக்கும் இடியோசையுடன் திறந்தன. கண்ணுக்குத் தெரியாத, மிகுந்த வன்மையுள்ள, எதிர்க்கப்பட முடியாத கடும் சூறாவளியால் வீசி யெறியப்பட்ட ஒரு பிரமாண்டமான பொருளால் தாக்கப்பட்டது போல அவைதிறந்தன.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக, ஒன்றுக்கொன்று கணிசமான தூரத்தில் இருந்த இந்த வெண்கலக் கதவுகள் ஒரு கணம் மட்டுமே திறந்திருக்க, அந்த இடைவெளியில், வெகு தூரத்தில், தீச்சூளையைப் போன்ற ஒன்றைக் கண்டேன். சிறுவன் அதனுள் விழவும், அதிலிருந்து நெருப்பு பதையும் நான் கண்டேன்.

எவ்வளவு வேகமாக அவை திறந்தனவோ, அவ்வளவு வேகமாக அவை மீண்டும் மூடிக் கொண்ட ன.'' (ஆதாரம் : "Forty Dreams of St.John Bosco," compiled and edited by Fr. J.Bacchiarello, S.D.B.).

மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரித்து, தன் நெற்றியிலாவது, தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக் கொள்கிறவன் எவனோ, அவன் தேவ கோபாக்கினையின் பாத்திரத்தில் ஒரு கலப்புமின்றி வார்க்கப்பட்ட அவரது கோபாக்கினையாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், செம்மறிப் புருவையானவருக்கு முன்பாகவும் அக்கினியிலும், கந்தகத்திலும் உபாதிக்கப்படுவான் என்று இஸ்பிரீத்து சாந்துவானவர் எச்சரிக்கிறார் (காட்சி . 14:9, 10).

''நாம் நமது காரியத்தை அதிஷக்கிரமான கோபத்தோடு நிறைவேற்றுவோம். நம் கண் கிருபையின்றிப் பார்க்க, நாம் அவர்கள் மீது இரக்கமற்றிருப்போம்" என்று கடவுள் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வாயிலாக எச்சரிக்கிறார் (8:18). ''உங்களில் எவன் விழுங்கும் அக்கினியோடு வசிக்கக் கூடும்? உங்களில் எவன் நித்திய தீச்சுவாலையில் வாசம் செய்வான்?'' என்று இசையாஸ் தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் கேட்கிறார் (33:14). "'சகலராலும் கைவிடப்பட்டு, நீ அறியாத நாட்டில் உன் எதிரிகளுக்கு உன்னை அடிமையாக்குவோம்; ஏனெனில், நமது கோபாக் கினையை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்" என்று ஆண்டவர் சபிக்கப்பட்ட ஆன்மாவை நோக்கிக் கூறுகிறார் (எரேமி. 17:4). "கறேரென்று மரண இருள் சூழ்ந்ததும், துரதிருஷ்டமானதும் மிகவும் இருண்டதும், சாவின் நிழல் சூழ்ந்ததும், அலங்கோலம் நிறைந்த ததும், நித்திய பயங்கரம் குடிகொண்டுள்ளதுமான தேசம்... அந்த தேசத்திற்கு நான் போனால் இனி திரும்பி வர மாட்டேன்" என்று யோபு கூறுகிறார் (10:21-22).

தண்ணீரில் வாழும் மீன் அந்தத் தண்ணீரையே தன் உயிரின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அதிலிருந்துதான் தனக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற்றுக் கொள்கிறது. நீர்த்தாவரங் களிலிருந்தும், நீரில் வாழும் பிற உயிர்களிலிருந்தும் தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்கிறது. அதன் மேலும், கீழும், வலமும், இடமும், முன்னும், பின்னும், தண்ணீர்தான் அதைச் சூழ்ந்திருக்கிறது. ஆயினும், இப்படி தண்ணீரில் இருக்கும் வரை அந்த மீன் அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.

ஆனால் அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு கரையிலுள்ள மணலில் விழுந்து துடிக்கும்போதுதான் நீரின் இன்றியமையாத தேவையை உணர்கிறது. எப்படியாவது மறுபடியும் நீருக்குள் போய்விட விரும்புகிறது. அது முடியாத போது அது தன் உயிரையே இழந்து போகிறது.

ஆத்துமத்தின் காரியத்திலும் இதுதான் நிகழ்கிறது. "சகலமும் ஆண்டவராலும், அவரைக் கொண்டும் அவரிலும் உண்டாயிருக்கிறது" (உரோ. 11:36) என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். நாம் இருப்பதும், இயங்குவதும், ஜீவிப்பதும் அவரிலேதான். சூரிய ஒளியின் பிரசன்னத்திலிருந்து பூமி ஒருபோதும் விலகமுடியாதது போல், ஆத்துமம் கடவுளின் பிரசன்னத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது. அது அவரையே தன் தொடக்கமாகவும், இறுதிக்கதியாகவும் கொண்டுள்ளது, அவராலேயே சுவாசிக்கிறது, அவராலேயே ஜீவிக்கிறது. எனினும் பரிதாபத்திற்குரிய முறையில், மனிதன் இந்த மாபெரும் உண்மையைப் பெரும்பாலும் நினைப்பதில்லை.

மீனானது நீரிலிருந்து விலக்கப்படுவது போல, சாவான பாவத்தோடு மரித்து, நரகத்திற்குத் தீர்வையிடப்படுகிற ஓர் ஆத்துமம் ஒரு விதத்தில் தேவ பிரசன்னத்திலிருந்து விலக்கப்படுகிறது என்று சொல்லலாம். சுடுமண்ணில் கிடக்கும் மீன், அந்தச் சூட்டின் வேதனையை விட, பிராண வாயு விலக்கப்பட்ட வேதனையை அதிகமாக உணர்வது போல், கொடிய நெருப்புக்கு மத்தி யிலும் ஆத்துமம் தான் இழந்து போன கடவுளின் பிரசன்னத்திற்காகவே அதிகமாக ஏங்கித் தவிக்கிறது. எப்படியாவது தன் ஏக கதியாக இருந்த அவரை அடையத் துடிக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், இனி அது அவரது நித்திய எதிரியாகவே நிலைத்திருக்கப் போகிறது!

"உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே ஒரு பெரும் பாதாளம் ஸ்திரமாய் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இங்கேயிருந்து அங்கே வரவும், அங்கேயிருந்து இங்கே வரவும் மனதிருந்தாலும், கூடாததாயிருக்கிறது'' (லூக்.16:26) என்று ஆபிரகாம் சொல்வது பாவமாகிய பாதாளத்தைப் பற்றியே.

தமது 'தியானங்களின் தொகுப்பில், அர்ச். கேண்ட்டர்பரி ஆன் செல்லம் தீர்ப்புக்காக தெய்வீக நடுவ ரின் முன்பாக நிற்கிற ஒரு பாவியின் வாய்மொழியாகக் கூறுவதைக் கேளுங்கள்: "சபிக்கப்பட்டவன் நான் சபிக்கப் பட்டவன்! யாருக்கு எதிராக நான் பாவம் செய்திருக்க கிறேன்? ஓ நான் கடவுளையே அவசங்கை செய்து விட்டேன், சர்வ வல்லபரின் கடுங்கோபத்தைத் தூண்டினேன். நீசப் பாவியாகிய நான் என்ன செய்து விட்டேன்! யாருக்கு எதிராக நான் இதைச் செய்தேன்! எவ்வளவு கொடுமையான முறையில் இதைச் செய்திருக்கிறேன். ஐயோ, ஐயோ! சர்வ வல்லபரின் கடுஞ்சினமே, என்மீது விழாதே! உன்னை நான் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? உன் பாரத்தைத் தாங்கக்கூடிய எதுவும் என்னில் இல்லையே! இங்கே, பாவங்கள் குற்றஞ் சாட்டுகின்றன. அங்கே, நீதியோ அகோரமாயிருக்கிறது! கீழே நரகம் என்னை விழுங்கத் தன் வாயை அகலத் திறந்திருக்கிறது; மேலேயோ கோபமுள்ள நித்திய நடுவர் இருக்கிறார்; எனக்குள், சுட்டெரிக்கிற மனசாட்சி; என்னைச் சுற்றிலுமோ, நெருப்பாய்த் தகிக்கிற பிரபஞ்சம்! இப்படி சிக்கிக்கொண்டிருக்கிற பாவி எங்கே பறந்தோடிப் போவான்? இறுகக் கட்டப்பட்ட டிருக்கிற நான் எங்கே பதுங்கி ஒளிந்து கொள்வேன்? எப்படி என் முகத்தை மறைத்துக் கொள் வேன்? ஒளிந்து கொள்ள வாய்ப்பேயில்லை, வெளிக்குத் தோன்றுவதோ தாங்க முடியாததா யிருக்கிறது; நான் ஏங்கித் தேடுவது எங்கேயும் காணப்படவில்லை. நான் அருவருக்கிற காரியமோ, எல்லா இடங்களிலும் இருக்கிறது! இனி என்ன ஆகும்? பயங்கரத்துக்குரிய இந்த உன்னத தேவனின் கரங்களிலிருந்து என்னை விடுவிப்பவன் யார்?" ("Meditations" of St. Anselm of Canterbury)

நரகத்தின் இந்தக் குறிப்பிட்ட வேதனை பற்றி நம் ஆண்டவரே அர்ச். சியென்னா கத்தரீனம்மாளுக்குக் கூறிய வார்த்தைகளைக் கேளுங்கள்:

''நரக வேதனைகளில் முதன்மையானது, என் காட்சி தங்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பதாகும். இது எந்த அளவுக்கு அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தண்டனை யாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு நான் இரண்டு வாய்ப்புகள் தருவதாகக் கற்பனை செய்து கொள். ஒன்றில் அவர்கள் நரகத்தின் எல்லா வகையான கொடிய வேதனைகளுக்கும் மத்தியில் என்னை எப்போதும் தரிசிக்கலாம், அல்லது அவர்கள் வேறு எந்த விதமான நரக வேதனைகளும் இல்லாமலிருக்கலாம். ஆனால் என் தேவ காட்சி அவர்களுக்குக் கிடைக்காது. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும்படி நான் அவர்களுக்கு வாய்ப்புத் தருவேன் என்றால், மிக உறுதியாக அவர்கள் இந்த முதலாவது வாய்ப்பைத்தான் தேர்ந்து கொள்வார்கள்.''

இறுதி வரை இந்தக் கொடூர வாதையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆத்துமம் மெய்யாகவே பாக்கியம் பெற்றது! கிறீஸ்தவனே! பரலோக இராச்சியத்தில் உன் தேவனாகிய ஆண்டவரோடும், உன் திருமாதாவோடும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களோடும் நித்திய காலமும் பேரின்ப பாக்கியம் அனுபவிப்பதற்காகவே இவ்வுலகில் விடப்பட்டிருக்கிறாய். இதுவே கடவுளின் சித்தம். ஆனால் நீ உன் விருப்பப்படி வாழ்ந்து, நரகத்தில் உன்னையே வீழ்த்திக்கொள்வாய் என்றால், அதற்குரிய குற்றவாளி நீ மட்டுமே.