நரகம்

சர்வ வல்லப சர்வேசுரன் தமது கட்டளைகளை மீறி பாவம் செய்த துரோகிகளை தண்டிக்கும் படியாக ஏற்படுத்திய தண்டனை இடம் தான் நரகம். அக்கினி கடல்.  பேய்கள் வாழும் சுடுகாடு.

நரகத்தில் தண்டனைகளிளெல்லாம் மகா பயங்கர தண்டனையான நித்திய சாபமும், பாவத்தின் தன்மைக்கும் அனைத்துக்கும் தக்க ஐம்புலன்களுக்குரிய தண்டனைகளும் உண்டென்பது விசுவாச சத்தியம். நரகத்தில் பாவிகள் படும் ஐம்புலன்களின் தண்டனைகள் இவ்வுலகில் நாம் நினைக்கவும் கருதவும் கூடிய வகை வேதனைகளிளெல்லாம் அதி உக்கிர அதி பயங்கரம் என்பது நிச்சயம்.

மனிதனுக்கு இயல்பாயுள்ள சுய அறிவே நரகம் உண்டென்று சொல்லுகிறது.  சர்வேசுரன் தாம் படிபித்த வேதத்தில் தெளிவாய் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.  சத்திய திருச்சபையும் தன் தவறா வாக்கோடு நரகம் உண்டென்று படிப்பிக்கின்றது. நமது மனமே நமக்கு சாட்சியாயிருந்து பாவம் செய்தால் சர்வேசுரன் நரகத்தில் நம்மைத் தண்டிப்பாரென்று சொல்லுகின்றது.  ஆகையால் நரகம் உண்டென்பது சத்தியம்.

பாவி நரகத்தில் விழுந்தால் அவனுக்கு துணையாய் இருப்பவர் யார்?  பசாசுகள் முதல் துணை.  சர்வேசுரனை பகைக்கும் இந்த நீச அரூபிகள் சர்வேசுரன் பேரில் தங்களுடைய கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, சர்வேசுரன் சாயலாயிருக்கும் மனிதன் பேரில் தங்கள் பகையை காட்டும்.  அவலட்சண கோலத்தோடு தோன்றி மனிதரை உபாதிக்கும். உலகம் உண்டான நாள் முதல் உலகத்தின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகை பாவிகளும், துன்மார்க்கரும், அநீதரும், அக்கிரமிகளும், கொலைபாதகரும், திருடரும், குடியரும், காமவெரியரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடியிருப்பார்கள். இப்படிப்பட்ட தீயோர் மத்தியில் பாவியும் ஒருவனாயிருப்பான்.

இவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து கொடிய மிருகங்களைப் போல் ஒருவரொருவரை கடித்து, உதைத்து, கர்சித்து கதறி அலறிப் புலம்புவார்கள்.  நரக தண்டனை இவ்வளவோடு முடிந்ததென்று நிணைக்க வேண்டாம்.  நீங்கள் பாவம் செய்யும் போது ஆத்துமம் சரிரமும் கூடிப் பாவம் செய்வதால், இவ்விரண்டும் நரகத்தில் உபாதிக்கப்படும்.

ஆனதால் சரீரத்தின் ஒவ்வொரு புலனும் தனக்கு உரிய வகையில் தான் பாவத்தை கட்டிக்கொண்ட சந்தோஷத்தின் அளவுக்கு தக்கதாய் துன்பப்படும்.  ஆத்துமத்தில் ஒவ்வொரு தத்துவமும், புத்தி, மனம், ஞபாகம், இவைகள் தங்கள் தொழிலுக்கு இசைந்த வண்ணம் வேதனைப்படும்.

உலகத்தில் இருக்கும் காலத்தில் செல்வனாயிருந்து, நன்றாக உண்டு வளர்ந்து பாவத்தில் தன் காலத்தைப் போக்கினவன், நரகத்திலே பசியாலும் தாகத்தாலும் வருந்துவான்.  இப்போது மகிமையைத் தேடி அகங்காரம் பொங்கி, தான்தான் பெரியவன் என்று பெருமை பேசி, பிறரை இகழ்ந்து பேசி, நிந்தித்து நடப்பவன் நரகத்தில் தாழ்த்தப்பட்டு பசாசின் காலில் மிதியுண்டு, அவமானம் அடைவான்.  இங்கே தன் சரீரத்தைப் பேணி, மினுக்கி, வளர்த்து வருகிறவர்கள், நரகத்தில் வாயால் சொல்ல முடியாத அவஸ்தைப் பட்டு பன்றிகளைப் போல் துர்நாற்ற அசுத்தத்தில் உருண்டு புரண்டு அகோர வேதனை அனுபவிப்பார்கள்.

பாவிகள், பொதுத்தீர்வை நாளுக்குப்பின் ஆத்தும சரீரத்தோடு நரக அக்கினியின் சமுத்திரத்தில் வெந்து எரிவார்கள்.  அந்த அக்கினியோ, சர்வேசுரனுடைய சத்ருக்களை மாத்திரம் தண்டிக்கும்படி உருவாக்கப் பட்டதால், அதற்கும் இந்த பூமியில் இருக்கும் நெருப்பிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  தேவ கோபத்தினால் மூட்டப்பட்ட அந்த அக்கினி நரக பாதாளத்தின் அடிமுதல் உச்சிவரை தணலாய் எழும்பி சரீரத்தை எப்பக்கத்திலும் துன்பப்படுத்தும்.  நெருப்பில் போடப்பட்ட இரும்பு ஏகமும் நெருப்பாய் மாறுவது போல பாவியும் நரக நெருப்பிலே சர்வாங்கமும், உள்ளும் வெளியும் அக்கினி மயமாய் மாறி,  வேதனை அனுபவித்து உணர்ச்சி மாறாமல் வெந்து துடிப்பான்.

பாவியும் நரகத்தில் எந்தப் பக்கம் போனாலும், என்ன செய்தாலும் அக்கினி மத்தியில் தான் அமிழ்ந்திருப்பான்.

நரக தீயின் உக்கிரம் இவ்வளவு கொடிதானாலும், இதிலும் கொடிதான தண்டனை நரகத்தில் ஒன்று உண்டு.  அது ஏதென்றால் சர்வேசுரனை இழந்துபோய் அவரை விட்டு பிரிந்திருப்பது.  இது தான் துன்பங்களில் பெரிய துன்பம்.  சர்வ நன்மை நிறைந்த சமபூரண பாக்கியமாகிய சர்வேசுரனை இழந்த ஆத்துமம் அக்கினிக்குள் எத்தனை நாள் தான் இருக்கும்? அந்த பாதாள லோகத்தில் நாள் கணக்கு இல்லை.  நித்திய காலம் என்றென்றும் ஊழியுள்ள காலமும், சதாகாலமும் சர்வேசுரனை காணாமல் நரக நெருப்பில் வேக வேண்டும்.

பூமியில் இருக்கும் போது நீ உன் மனப்பூர்வமாய் சர்வேசுரனாகிர உன் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய உனக்கு பிரியமில்லையோ,  மறு உலகில் உனக்கு மனமிருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்வேசுரனுடைய கோணாத நீதிக்கு தொண்டு செய்வாய்.  சேசுநாதருடைய பரிசுத்த நாமத்தை கேட்கும் போது பரலோக பூலோக பாதாள உலகத்தில் உள்ள சகலரும் முழங்கால் ஊன்றி நமஸ்காரம் செய்வார்களாக (பிலி. 2 :10) என்பது தேவ வாக்கியம்.