பரிசுத்த அந்தஸ்தில் மரிக்கும் ஆத்துமத்தின் பாக்கிய நிலை : நேரடி மோட்சம்!

தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் தன் சகல பாவங்களுக்கும் முழுமையாக மன்னிப்புப் பெற்று, அவற்றிற்குரிய பரிகாரங்களையும் முழுமையாக நிறைவேற்றி விட்ட நிலையில், தன் சரீரத்தை விட்டுப் பிரிந்து நித்தியத்திற்குள் நுழைகிற ஆன்மா மெய்யாகவே பாக்கியம் பெற்றது !

மரணம் அதற்கு நித்தியப் பேரின்பத்தின் வாசலாக இருக்கிறது! இதோ, அந்தப் பரிசுத்தமான மனிதன் இறந்த இடத்திலேயே கிறீஸ்துநாதர் அவனுக்குக் காட்சியளித்து, 'நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக்காரியங்களில் பிரமாணிக்கமாயிருந்ததினால், அநேக காரியங்களின் மேல் உன்னை அதிகாரியாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி... என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே! வா. உலகமுண்டானது முதல் உனக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்" என்று அவனை வரவேற்பார்.

அந்த ஆத்துமத்தின் கண்கள் திறக்கப்படும்! அது தன் சர்வேசுரனை மீண்டும் அவர் இருக்கிறபடி கண்டு கொள்ளும்! அந்தக் காட்சியே அதன் நித்தியப் பேரின்பமாக இருக்கும். இதோ அந்த ஆன்மாவின் மகா பரிசுத்த திருமாதா மகிழ்ச்சியோடு அதை வரவேற்க சம்மனசுக்களின் படையணிகளோடு இறங்கி வருகிறார்கள்!

மோட்சத்தின் கதவுகள் திறக்கின்றன! இனி நித்திய காலமும், சர்வேசுரனோடும், தன் திவ்ய அன்னையுடனும், அனைத்து தேவதூதர்கள், புனிதர்களோடும் பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கும்படி இந்த பாக்கியம் பெற்ற ஆன்மா மோட்சத்திற்குள் நுழைகிறது!

''இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணு வார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வேசுரன்தாமே அவர்களுடைய தெய்வமாக அவர்களோடு இருப்பார். சர்வேசுரன் அவர்களுடைய கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின" (காட்சி (திருவெளி.) 21:3, 4).