உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக ஏன் செபிக்க வேண்டும்?

கடவுள் நமக்குத் தந்த தலையாய கட்டளை, நாம் ஒருவரையொருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் நேசிக்க வேண்டும் என்பது. முதன்மையான கட்டளை, நாம் கடவுளை முழு இருதயத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்ய வேண்டும் என்பதே. இரண்டாவது மற்றும் முதல் கட்டளையின் ஒரு பகுதி, நம்மை நேசிப்பது போல நமது அயலாரையும் நேசிக்க வேண்டும்.

இது எல்லாம் வல்ல தேவனின் வெறும் விருப்பம் அல்லது ஆலோசனை அல்ல. மாறாக இது நமக்கு கடவுள் இடும் மிகப் பெரிய கட்டளை, அவரது நியமனங்களின் அடிப்படை மற்றும் அனைத்து கட்டளைகளையும் உள்ளடக்கியது ஆகும். அயலாருக்கு தாம் செய்வதை தமக்கு செய்ததாகவே கொள்கிறார். மறுப்பதையும், தமக்கு செய்ய மறுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார் என்பதே உண்மை.

புனித மத்தேயு எழுதிய சுவிசேஷம் அதிகாரம் 25 இறை சொற்றொடர் 34 - 46 முடிய, தீர்ப்பு நாளில் கிறிஸ்து மக்களினத்தார் அனைவரையும் பார்த்துக் கூறும் வார்த்தைகள் பின்வருமாறு உள்ளன.

34: என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாக பெற்றுக்கொள்ளுங்கள்.

35: ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தணித்தீர்கள்; அன்னியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்

36 : நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்.

37: அதற்கு நேர்மையாளர்கள், "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?

38: எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?

39: எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்? என்று கேட்பார்கள்.

40: அதற்கு கிறிஸ்து "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதலளிப்பார்.

41: பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ''சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.

42: ஏனெனில் நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.

43: நான் அன்னியனாய் இருந்தேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை; நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.

44: அதற்கு அவர்கள் "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள்.

45. அப்பொழுது அவர், ''மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார்.

46: இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நித்திய வாழ்வு பெறவும் செல்வார்கள்.

எல்லாரும் தங்களையும் தங்களது வசதி வாய்ப்புகளையும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் தன்னலமிக்க இப்போதைய உலகில் மேற்சொல்லப்பட்ட நியமனங்கள் செயல்பாட்டில் இல்லை என சில கத்தோலிக்கர்கள் நினைக்கலாம். தங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அன்பின் கட்டளைகளை செயல்படுத்த முடியாது எனவும் எண்ணலாம்.

உண்மை அவ்வாறில்லை . கடவுளது அரும்பெரும் கட்டளை இப்போதும், எப்போதும் முழு வீச்சில் செயல்பாட்டில் இருக்கும். பின்பற்ற வேண்டியது நமது இன்றியமையாத கடமையாகும்.