பிப்ரவரி 29

அர்ச். ஆஸ்வல்ட். மேற்றிராணியார் (கி.பி.992)

ஆஸ்வல்ட் இங்கிலாந்து தேசத்தில் பிறந்து கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்தபின் உலகத்தை துறந்து சந்நியாசியானார். இவரிடமிருந்த சிறந்த புத்தி, ஞானம், மேலான புண்ணிய ஒழுக்கத்தினால் மேற்றிராணியாராக அபிஷேகம் பெற்று, சில காலத்திற்குள் யார்க் என்னும் நகரத்திற்கு அதிமேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.

இவர் தமது விசாரணையை வெகு கவனத்துடன் பரிபாலித்து வந்தார். தமது மேற்றிராசன விசாரணை குருக்களுக்குள் பல ஒழுங்கீனங்கள் இருந்தபடியால் அவைகளைத் தமது விடாமுயற்சியால் சீர்படுத்தினார். சந்நியாசிகளுடன் சேர்ந்து ஜெப தபங்களை நடத்துவார். இவர் நாள்தோறும் 12 ஏழைகளின் கால்களைக் கழுவி முத்திசெய்து, அவர்களுக்கு போசனம் அளிப்பார்.

தமது விசாரணைக்குட்பட்ட இடங்களுக்கு அடிக்கடி பிரயாணஞ் செய்து கண்காணித்து வருவார். இந்த அர்ச்சியசிஷ்டவர் 33 வருஷகாலம் மேற்றிராணியாராய் திருச்சபைக்காக உழைத்தபின், நோய்வாய்ப்பட்டு கடைசி தேவதிரவிய அநுமானங்களை வெகு பக்தி விசுவாசத்துடன் பெற்று மரணமடைந்தார்.

யோசனை 

குடும்பங்களிலாவது, மடங்களிலாவது நடக்கும் தவறுகளை அவற்றின் தலைவர்கள் சீர்திருத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.