மார்ச் 01

அர்ச். தாவீது. அதிமேற்றிராணியார் (கி.பி. 460). 

இவர் இங்கிலாந்தில் பிரபு வம்சத்தில் பிறந்து குருப்பட்டத்திற்கு படித்து, அதைப் பெற்றபின் தனிமையில் ஓர் உத்தமரால் குருத்துவத்திற்குத் தயார் செய்யப்பட்டார். இவருக்கு ஆசிரியராயிருந்தவர் கண் பார்வை இழந்தபோது தாவீது அவர்மேல் சிலுவை வரைந்து அவருக்கு கண் பார்வை கொடுத்தார்.

சில காலத்திற்குப்பின் ஊர் ஊராய்ச் சென்று பிரசங்கம் செய்து கிறிஸ்தவர்களுக்கு நன்னெறி கற்பித்தார். அக்காலத்தில் உருவாகி இருந்த பெலாஜிய பதித மதத்தை அழிக்கும்படி கூடின சங்கத்தில் அர்ச். தாவீது எவ்வளவு வாய்ச்சாதுர்யத்துடன் பேசி, நியாயங்களை எடுத்துக் காட்டினாரென்றால், அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிதரால் பதில் கூற முடியாமல் போயிற்று.

தாவீது மேற்றிராணியாராக நியமகம் பெற்று முன்னிலும் அதிக ஊக்கத்துடன் திருச்சபைக்காக உழைத்து வந்தார். இவர் அநேக சந்நியாச மடங்களை ஸ்தாபித்து, இவர் எழுதி கொடுத்த கடினமான ஒழுங்குகளை சந்நியாசிமார் சீராய் அநுசரித்துப் புண்ணியவான்களானார்கள்.

அநேக தேவாலயங்களையும் இவர் கட்டி வைத்து, சிறந்த புண்ணியங்களையும் புதுமைகளையும் செய்து, விசுவாசத்தை இழக்காமல் காப்பாற்றுங்கள் என்று சொல்லி, அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார். இவர் இறந்தபின் இவருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சூழப்பட்டு மோட்சத்திற்குப் போகிறதை அர்ச். கெண்டிஜெர்ன் பார்த்தார்.

யோசனை

அர்ச். தாவீதைக் கண்டுபாவித்து நமது விசுவாசத்தை இழக்காமல், அதை விருத்தி செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஸ்விட்பெர்ட், மே.
அர்ச். அல்பீனுஸ், மே.
அர்ச். மோனன், வே.