அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 26

அர்ச்.சூசையப்பர் மோட்சத்தில் மேலான மகிமையும் அதிகாரமும் அடைந்துள்ளதை தியானிப்போம் 

தியானம் 

பிதாவாகிய சர்வேசுரன்  அர்ச்.சூசையப்பரைத் தமக்கு நிகராகவும் தமது திருமகனுக்கு வளர்ப்பு தந்தையாகவும் நியமித்து, அவருக்கு சகல சுதந்திரத்தையும் அளித்தார். அர்ச்.சூசையப்பர் சேசுவை நன்கு வளர்த்து அவரது தாயாரையும் பாதுகாத்து பல துன்பங்களை அனுபவித்தார். அர்ச்.சூசையப்பர் அப்போது பட்ட துன்பங்களுக்காக இப்போது சர்வேசுரன் மோட்சத்தில் சகல ஞான வரங்களையும் அளித்து அர்ச்.சூசையப்பரிடம் இறைஞ்சுவோருக்கு அவர் வரங்களை அருளும் அதிகாரத்தையும் அர்ச். சூசையப்பருக்கு சர்வேசுரன் அளித்தார் 

சேசுவோ அர்ச்.சூசையப்பரை தனது வளர்ப்பு தந்தையாக தெரிந்து கொண்டு அவருக்கு கீழ்ப்படிந்து அவரோடு முப்பது ஆண்டுகள் வாழ்ந்து அர்ச்.சூசையப்பர் அனுபவித்த துன்பங்களை யெல்லாம் நன்கு அறிந்திருந்தார் அதனால் நன்றியோடு தனது அருகில் இருக்கச்செய்து தாம் பாடுபட்டு மரித்து அடைந்த பேறுபல ன்களையெல்லாம் இவரிடம் கொடுத்து இறையாசீரை வேண்டு வோருக்கு வரம் அளிக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் 

பரிசுத்த ஆவியானவர் தனக்கு பிரியமான மாமரியன்னையை  அர்ச்.சூசையப்பருக்கு துணைவியாக ஒப்புக்கொடுத்ததின்பேரில்,  அர்ச்.சூசையப்பர் பாசத்தோடும், மரியாதையோடும் மாமரி அன்னையை வைத்து பாதுகாத்ததால் பரிசுத்த ஆவியானவர் இவருக்கு மகிமையையும் சுதந்திரத்தையும் அளித்துள்ளார். அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் வான தூதர்கள் பூவுலகில் அர்ச். சூசையப்பருக்கு ஈடு இணையானவர்கள் யாரும் இல்லை என்று பக்தியோடு வணங்குகிறார்கள் 

சர்வேசுரன் அர்ச்.சூசையப்பரை மேலான இடத்திற்கு உயர்த்தும் போது அவர் அதற்குரிய குணங்கள், வரங்கள், புண்ணியங்களால் நிறைந்திருந்தார். அர்ச்.சூசையப்பர், மாமரியன்னையை திருமணம் செய்யும்போது குறைவில்லா நீதிமானாய் இருந்தார் என நற்செய்தி கூறுகிறது. 

வியாபாரம் செய்பவன் பெரிய தொகையை முதலீடாக வைத்து தினமும் அதிக அதிகமாய் சம்பாதிப்பதுபோல  அர்ச்.சூசையப்பரும் தனது ஞான வியாபாரத்தை அனுதினமும் பெருக்கினார். அதனால் அவருக்கு சர்வேசுரன் மோட்சத்தில் சகல அதிகாரத்தையும் மகிமையையும், சுதந்திரத்தையும் அளித்தார். மாமரியன்னையைத் தவிர வேறுயாரும் அர்ச்.சூசையப்பரை மிஞ்சியவர்கள் இல்லை 

மறைநூல் அறிஞர்கள், இறைவாக்கினர்கள் ஒன்பது நவவிலாச சம்மனசுக்கள் சர்வேசுரனின் சேவகர்களாக இருக்க, அர்ச்.சூசையப்பர் மட்டும் சேசுவின் வளர்ப்பு தந்தையாக இருக்கமுடிந்தது. அபிரகாம், ஈசாக், யாக்கோபு, மோயிசன் போன்றோர் வரப்போகிற குழந்தை சேசுவை முன்னறிவித்து, அவரைக் காண ஆவலாய் இருந்தனர். ஆனால்  அர்ச்.சூசையப்பரோ பிறந்த குழந்தை சேசுவை கையால் எடுத்து, வளர்த்து, பாதுகாத்து,உணவூட்டி  அரவணைத்து முத்தமிட்டு, முப்பது ஆண்டுகள் அவருடனே வாழ்ந்து, அவரது கரங்களிலே நன்மரணம் அடைந்தார். 

அப்போஸ்தலர்கள் சேசுவின் தூதர்களாக இருந்து இறையரசை பூவுலகில் எங்கும் போதித்தார்கள். அர்ச்.சூசையப்பரோ சேசுவுக்கு தந்தையாயிருந்து அதிகாரம் செலுத்தி அவரை நடத்தி வந்தார் மறைசாட்சிகள் தங்களது இறைபக்தியை விடாமல் உறுதியான மனதுடன் இருந்து தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள்.  அர்ச்.சூசையப்பர் மறைசாட்சியாக இறக்காவிட்டாலும் அவர் மறைசாட்சிகளின் அரசராக கருதப்படுகிறார். சேசுவை குறித்து மாமரியன்னை வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதால் மறைசாட்சிகளுக்கு அரசியானார். சேசுவைப் பற்றி அளவில்லாத துன்பதுயரங்களை அனுபவித்த அர்ச்.சூசையப்பர் மறைசாட்சிகளின் அரசர் என அழைக்கப்படுகிறார் 

கிறிஸ்தவர்களாகிய நாம் மனதால் அர்ச்.சூசையப்பர் மோட்சத்தில்

அனுபவிக்கும் மகிமையை தரிசித்துப் பார்க்கவேண்டும். நமது தந்தையின் மகிமை அவரது பிள்ளைகளாகிய நமக்கும் பொருந்தும் தந்தை தனக்குள்ள அதிகாரத்தை தனது பிள்ளைகளுக்காய் பயன்படுத்தாவிட்டால் வேறு யாருக்கு பயன்படுத்துவார்? அதனால் நாம் அர்ச். சூசையப்பரின் அடைக்கலத்தை நாடி நமக்கு தேவையானவற்றை அவரிடத்தில் விசுவாசத்தோடு கேட்க வேண்டும். அர்ச். சூசையப்பர் தனது அதிகாரத்தில் உள்ள வரங்களையும் ஆசீரையும் ஏராளமாய் நமக்கு அளிக்க ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார். 

ஒருவன் பூமியில் செய்த புண்ணியங்களுக்கு தகுந்தவாறு மகிமை மோட்சத்தில்  கிடைக்கும். அதனால் அர்ச்.தெரசம்மாள் தான் மோட்சத்தில் அதிக மகிமை அடைய வேண்டுமென்று பூலோகத்தில் கடின தபசு செய்தார்கள், அதனால் நாமும் அதிக மகிமை அடைய அதிக தபசும் புண்ணியங்களும் செய்வோம். நாம் உலகில் கொஞ்ச நாட்கள்தான் இருப்போம் அதற்குள் அதிக புண்ணியங்களை சம்பாதித்துக்கொள்வோம். 

புதுமை 

சிந்து நாட்டின் அப்போஸ்தலரான அர்ச்.சவேரியார் சீனாவில் நற்செய்தியை போதிக்க விரும்பினார். ஆனால் அவர் சாஞ்சியா என்ற தீவில் நன்மரணம் அடைந்தார். அவர் இறந்த முப்பதாம் ஆண்டு 1582-இல் சேசுசபை குரு மத்தேயு ரிக்சி என்பவர்  அர்ச்.சூசையப்பரின் உதவியை நம்பி அந்த நாட்டில் நற்செய்தியை போதித்து பலரை மனந்திருப்பினார் 

அந்நாட்டில் பிறநாட்டவர் குடியேறக்கூடாதென்று கண்டிப்பான கட்டளை இருந்ததோடு அதை மீறி குடியேறியவர்கள் பிடிபட்டால் மரணதண்டனை அல்லது சிறைச்சாலை தண்டனையாகக் கிடைக்கும், அந்நாட்டின் உணவு உடை, மொழி, கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. இந்த விவரங்களை அக்குரு அறிந்திருந்தாலும் அவர் எதற்கும் அஞ்சாமல் தன்னை  அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தில் வைத்து, அந்நாட்டை அவருக்கு அர்ப்பணித்து, அந்நாட்டில் இரகசியமாய் நுழைந்து நாலைந்து வருடம் மறைந்து வாழந்து சீன மொழியை நன்றாக படித்து பலரை நற்செய்தியைப் பின்பற்றச் செய்தார் 

பரிமளம் இருப்பதை வாசனை தெரியப்படுத்துவதுபோல் இந்த குருவுடைய மரியாதை, சாந்தம், பொறுமை, படிப்பு, சாதுரியம் இவற்றால் பல அறிஞர்களும் அலுவலர்களும் அவரைக் காணவிரும்பியும் அவரது போதனையைக் கேட்கவும் பலர் சத்திய வேதத்தினை பின்பற்றினர். நாளுக்குநாள் அவரது புகழ் எங்கும் பரவி அவரது பெயர் பிரபலமானதால் அந்நாட்டின் அரசர் குருவை தனது இருப்பிடத்திற்கு அழைத்து, அவருக்கு மரியாதை செய்து, நற்செய்தியைப் போதிக்கவும், பெக்கீன் என்ற நகரத்தில் வசிக்கவும் உத்தரவிட்டார். இத்தகைய செயல் அர்ச்.சூசையப்பரின் அருளால் நடைபெற்றதால் அந்நாட்டிற்கு  அர்ச்.சூசையப்பரை பாதுகாவலராகவும் ஸ்தாபித்தார். ரிக்சி இறக்கும்முன் சீன நாட்டில் சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு அதிகமாய் மனம்மாற்றம் செய்ததோடு ஆலயங்களையும் கட்டுவித்தார். அவர் இறந்தபின் நற்செய்திக்கு எதிராய் குழப்பங்கள் தோன்றியதோடு பலர் மறைசாட்சிகளாய் கொல்லப்பட்டனர். இருப்பினும் அங்கு நற்செய்தி செழித்து வளர்ந்தது. இப்போது அங்கு பல இலட்சம் பேர் கிறிஸ்தவர்களாகவும், பல ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் வாழ்ந்து வருவதோடு அவர்கள் மாமரியன்னைக்குப் பிற்பாடு  அர்ச்.சூசையப்பரைத் தங்களது முதல் அர்ச்சியஷ்டவராகவும், ஆதரவாகவும், அடைக்கலமாகவும் மகாப்பக்தி நம்பிக்கையோடு வணங்கி வருகிறார்கள். 

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த இந்திய நாட்டில் தேவ வார்த்தை மேன்மேலும் பரவ அர்ச். சூசையப்பரை மகா நம்பிக்கையோடு வேண்டிக்கொள்வோம் 

(1பர, 3அரு, பிதா) 

செபம் 

மோட்சத்தில் உள்ள சகலரையும்விட அதிக மகிமையும் வல்லமையும் கொண்ட பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் பட்ட துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கி மனிதனுடைய சொற்களுக்கு அப்பாற்பட்ட சந்தோஷம் அடைந்திரே. இந்த மகிமை சந்தோஷத்தைக் கண்ட நாங்கள் அகமகிழ்ந்து, உம்மை புகழ்ந்து கொண்டாடுகிறோம் நீர் உமக்குள்ள மேலான வல்லமை, அதிகாரத்தை உமது பிள்ளைகளாயிருக்கிற எங்கள் மீது செலுத்தும். எங்களது குறைகளை நீக்கி எங்கள் துன்பங்களை தீர்த்து, எங்களுடைய ஞான விரோதிகளை நீக்கி, எங்களுக்கு வேண்டிய நன்மைகளைக் கட்டளையிட்டருளும். திருச்சபையின் மூலம் சத்திய வேதத்தை பரப்பச் செய்து சகலரையும் உமது திருக்குமாரனிடம் சேர்த்தருளும். இந்த உமது அளவில்லாத மகிமையைப் பார்த்து, உமது பக்தர்களாக இருக்கிற நாங்கள் மோட்சத்தில் உம்மை தரிசிக்க செய்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென். 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

மோட்சத்தில் மேலான மகிமைப் பெற்றிருக்கிற அர்ச்.சூசையப்பரே

உம்மை அனைவரும் வணங்குவார்களாக 

மோட்சத்தில் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிற அர்ச்.சூசையப்பரே உம்மை அனைவரும் நம்பக் கடவார்களாக 

மோட்சத்தில் மேலான திறமையைக் கொண்டிருக்கிற அர்ச்.சூசையப்பரே

உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் எல்லாரும் இருக்கச் செய்யும் 

செய்ய வேண்டிய நற்செயல் 

அர்ச்.சூசையப்பரின் மகிமையைப் பிரகடனப்படுத்துவது.