அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 28

திருச்சபையும் அர்ச்சியஷ்டவர்களும் பரிசுத்த ஆன்மாக்களும்  அர்ச்.சூசையப்பர்மேல் நெருங்கிய பக்திகொண்டதை தியானிப்போம் 

தியானம் 

தை மாதம் 23-ஆம் தேதியும், பங்குனி மாதம் 19-ஆம் தேதியும், ஆடிமாதம் 20-ஆம் தேதியும்  அர்ச்.சூசையப்பரை பக்தியுடன் வணங்க வேண்டுமென திருச்சபையானது கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்துகிறது. மேலும் பாஸ்கா திருவிழாவிற்கு பின்பு வரும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அவரது அடைக்கலத்தின் திருவிழாவையும் நியமித்துள்ளது. இந்த நான்கு நாட்களையும் கிறிஸ்தவர்கள் பக்தி விசுவாசத்தோடு கொண்டாட வேண்டும் 

அர்ச்சியஷ்டவர்கள் பலர்  அர்ச்.சூசையப்பர்மேல் பக்தி கொண்டிருந்தனர் அவர்களில் குறிப்பிடத்தக்கோரைக் காண்போம். தாம் கடைப்பிடித்த புண்ணியங்களாலும் எழுதிய நல்ல நூல்களாலும், மாமரியன்னை,  அர்ச்.சூசையப்பர்மேல் கொண்ட பக்தியாலும் பரிசுத்தவரானது  அர்ச்.பர்னாந்து. 1380-ஆம் ஆண்டில் பிறந்த செநேன்சி என்ற  அர்ச்.பர்னாந்து,  அர்ச்.சூசையப்பர் மேல் மக்கள் அனைவரும் பக்திகொள்ள வேண்டுமென்று ஒரு செபத்தை எழுதியுள்ளார். " அர்ச்.சூசையப்பரே! எங்களை மறவாதேயும். உமது திருக்குமாரனிடத்தில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உமது பரிசுத்த பத்தினியாகிய பரிசுத்த மாமரியன்னையை எங்களுக்கு இரங்கச்செய்தருளும்". 

சலேசியூஸ் என்ற  அர்ச்.பிரான்சிஸ்குஸ்  அர்ச்.சூசையப்பர் மீது பக்தியுள்ள அர்ச்சியஷ்டவர்கள் அனைவரையும்விட அதிக பக்தியுள்ளவராக இருந்தார். அவர் தினமும் செபித்தார் அவரது அறையில் அழகிய இடத்தில்  அர்ச்.சூசையப்பர் படத்தை ஸ்தாபித்து தம் செப புத்தகத்தில் வேறொரு அர்ச்.சூசையப்பர் படத்தை வைத்து இரண்டையும் அடிக்கடிப் பார்த்துக்கொள்வார். சேசுவிடமும் மாமரியன்னையிடமும் பரிந்துரை செய்ய இவரைத் தேர்ந்து கொண்டார். அதனால் இவருக்கு பல ஞான பலன்கள் கிடைத்தது எனக் கூறுகிறார். 

மேலும் தனது அதிகாரத்திற்குட்பட்ட துறவிகள், அருட் பணியாளர்கள், கன்னியர், பொதுமக்கள்  அர்ச்.சூசையப்பரை அன்புசெய்ய வேண்டுமென்று மிகவும் உருக்கத்தோடு அனைவருக்கும் புத்தி கூறினார் 

கார்மல் மாதா துறவியர் சபையையும் கன்னியர் சபையையும்  அர்ச்.தெரசம்மாள் சீர்படுத்தினார் அர்ச்.சூசையப்பர்மேல் பக்தி வணக்கம் செலுத்த இஸ்பானியா நாட்டிலும் மற்ற நாடுகளிலும் பரப்ப மிகவும் முயற்சி செய்தார்கள். நன்றாக செப தியானம் செய்ய ஞானத்தந்தையாகவும், போதகராகவும் மாதிரிகையாகவும் தெரிந்து கொண்டு தினமும் முழு விசுவாசத்தோடு வணங்கினார்கள். அவர் நிறுவிய 32 வேறு துறவற சபைகளுக்கு அர்ச்.சூசையப்பரின் பெயரை சூட்டினார். அங்குள்ள கன்னியர்கள் அர்ச்.சூசையப்பரை தங்களுக்கு தந்தையாகவும் பாதுகாவலராகவும் எப்போதும் வணங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் அதனால் இப்போதும் இச்சபையைச் சார்ந்த துறவிகளும் கன்னியர்களும் அர்ச்.சூசையப்பரை மிகுந்த பக்தியோடு வணங்கி வருகிறார்கள். அர்ச்.சூசையப்பரோ தனது பிரிய மகளான  அர்ச்.தெரசம்மாளுக்கு அடிக்கடித் தோன்றுவதோடு அவர்களது உடலுக்கும் ஆன்மாவிற்கும் ஏற்பட்ட பெரிய ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியதோடு பல ஞான பலன்களையும் அடையச் செய்தார் 

அர்ச்.லியோநார்தூஸ்,  அர்ச்.லிகோரியூஸ் இன்னும் பல அர்ச்சியஷ்டவர்களும்,  அர்ச்.சூசையப்பரைப்பற்றி சொன்னதும் எழுதியதும் செயல்பட்டதையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது 

வேதவல்லுநர்களில் தலை சிறந்தவரான ஜேர்சோனியூஸ் என்பவர் அர்ச்.சூசையப்பரை வணங்கியதோடல்லாமல் பிறரையும் வணங்கச் செய்தார்.  அர்ச்.சூசையப்பரைப்பற்றிய காவியத்தைச் செய்து அதில் அவரை வாழ்த்தி, அவரது புண்ணியங்களை வெளிப்படுத்தி எல்லோரும் அவரை வணங்கும்படி செய்திருந்தார். வேத வல்லுநர்களுக்கு தலைவராய் இருக்கிற சுவாரேசியூஸ் என்பவர் அர்ச்.சூசையப்பரைப் பற்றிய நூல் ஒன்றினை எழுதி எல்லா அர்ச்சியஷ்டவர்களையும் மோட்சத்திலுள்ளவர்களை விடவும் உயர்வானவர் என்பதை விளக்கியுள்ளார். அது முதல் இந்திய நாட்டில்  அர்ச்.சூசையப்பருக்கு பக்தியும் வணக்கமும் குறைவின்றி நடந்து வருகிறது. மறவர் நாட்டிலே சருகணி என்ற ஊரில் பங்குத்தந்தையாக இருந்த சின்ன சவேரியார் என அழைக்கப்படும் குருசுவாமி, தனது புதன்கிழமை மறையுரை நூலில் என 52 மறையுரைகள் மூலம்  அர்ச்.சூசையப்பருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார் 

வீரமாமுனிவர் என்ற பெயரை உடைய தைரியநாத சுவாமி தேம்பாவணி என்ற காப்பியத்தை எழுதி அதில் 36 படலத்தில் 3615 பாவில், அர்ச்.சூசையப்பருடைய மகிமையையும் தர்ம செயல்களையும் எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் எழுதியுள்ளார் 

கிறிஸ்தவர்களாகிய நாம்  அர்ச்.சூசையப்பரை நமக்கு விசேஷ பாதுகாவலராக கொண்டு அவரிடம் பக்தியோடு வணங்கவேண்டும். தை மாதம் 23-ஆம் தேதியில் வரும் அவரது திருமண நாளும் பங்குனி மாதம் 19-ஆம் நாள்வரும் அவரது திருவிழாவும், ஆடிமாதம் 20 ஆம் தேதியில் வரும் அவரது மரணத்தின் திருநாளும், பாஸ்காத் திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் வரும் அவரது அடைக்கலத்தின் திருவிழா கிறிஸ்தவர்களாகிய நம்மால் பக்தியோடு கொண்டாடவேண்டிய நாட்களாகும். இயன்றவரை அவரது மகிமையை வெளிப்படுத்துவதோடு நமது பிள்ளைகளையும் செல்வங்களையும் அர்ச். ஒப்புக்கொடுப்போம். 

புதுமை 

மலர்களாலான மாலைகளைச் சூட்டுவதைவிட புண்ணியங்களாலான மாலை சூட்டுவதுதான்  அர்ச்.சூசையப்பருக்கு பிடிக்கும். மலர்களாலான மாலைகள் வாடிவிடும், புண்ணிய மாலைகள் வாடாது. நாம் அவரது பீடத்தில் பணங்களை வைப்பதைவிட நமது பாவ செயல்களையும், நல்ல செயல்களையும் சமர்ப்பிப்பதே சிறந்தது. பல நாடுகளில் உள்ள துறவியர் இல்லத்தில் படிப்போர் தாங்கள் அடைந்த வெற்றிகளையும், செய்யும் நற்செயல்களையும் அர்ச்.சூசையப்பருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுப்பார்கள். இங்கு படிப்போர் தான் நாள் முழுவதும் செய்த புண்ணியங்களையும் அடக்கிய துர்குணங்களையும் பட்டியலிட்டு ஒரு சீட்டில் எழுதி மாலையில்  அர்ச்.சூசையப்பரின் திருசுரூபத்தின்முன் சமர்ப்பிப்பார்கள் 

முன்பு சர்வேசுரன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று நினைத்து 10 தடவை புகழ்வேன், மனத்தாழ்ச்சியுடன் ஐந்து தடவை மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்தேன், என்கோபத்தை ஆறுதடவை அடக்கிக் கொண்டேன், எட்டுத் தடவை பிறருக்கு நல்ல அறிவுரை கூறினேன், பசாசின் சோதனைகளை நாலு தடவை ஜெயித்தேன், என துண்டுச் சீட்டுகளில் எழுதி  அர்ச்.சூசையப்பருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுப்பார்கள். மாத முடிவில் வானதூதர்களே வியந்துப் போவார்கள். 

இவ்வாறு ஆண்களும் பெண்களும் தங்களது ஆங்காரம், பொறாமை சோம்பல், உணவில் ஆர்வம் போன்றவற்றை அடக்கி நல்லவர்களாக நடப்பார்கள்

இப்போதும் பல குழந்தைகள் தங்கள் ஆரோக்கியம், கல்வி அல்லது வேறு ஏதாவது உதவிக்காக தங்கள் புண்ணியங்களையும், வெற்றிகளையும் ஒப்புக்கொடுத்து தாங்கள் விரும்பியதை அடைந்தார்கள் 

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய புண்ணியங்களால்  அர்ச்.சூசையப்பருக்கு பிரியப்படும்படி வாழ்வோம். 

(1பர, 3அரு, பிதா) 

செபம் 

அர்ச்சியஷ்டவர்களாலும் மறைநூல் வல்லுநர்களாலும் வணங்கப்பட்ட தந்தையாகிய அர்ச்.சூசையப்பரே! உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்கிறோம். உம்மை மென்மேலும் அனைத்து மக்களும் வணங்கி புகழ்வார்களாக. உமது தான தர்மங்களும் புண்ணியங்களும் மகிமையும் எல்லா புகழைவிடவும் உயர்வாக இருப்பதால் உமது ஏழைப்பிள்ளைகளாயிருக்கிற எங்களுடைய வணக்கத்தைப் புறக்கணிக்காமல் கிருபை செய்தருளும். நாங்கள் இவ்வுலகில் இருக்கும்வரை உம்மை துதித்து வணங்குவதே எங்களுக்கு சிறப்புதான் இறந்தபின் மோட்சத்தில் புகழ்வது எங்களுக்கு இன்பமளிக்கும் நாங்கள் உமக்குச் செய்யும் வணக்கத்தைப் பார்த்து உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். 

ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

சகல புனிதர்களாலும் வணங்கப்படும் தந்தையாகிய அர்ச்.சூசையப்பரே உம்மை வணங்குகிறோம் 

மறைநூல் வல்லுநர்களால் கொண்டாடப்படும் மகிமை நிறைந்த

அர்ச்.சூசையப்பரே உம்மை வணங்குகிறோம் 

திருச்சபைக்கு அடைக்கலமான தந்தையாகிய அர்ச்.சூசையப்பரே

உமது அடைக்கலத்தை நாடி வருகிறோம் 

செய்ய வேண்டிய நற்செயல் 

ஒப்புரவு அருட்சாதனத்திற்கு நம்மையே தயார் செய்துகொள்வது.