அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 19

பிதா பிதாக்களின் தந்தை அர்ச்.சூசையப்பரின் பெருவிழா 

அர்ச்.சூசையப்பர் மற்ற புனிதர்களைவிட மேலானவர் என்பதை தியானிப்போம் 

தியானம் 

சர்வேசுரனின் அதிசயமான வரங்களால் தீர்க்கத்தரிசிகளையும்  அர்ச்.திருமுழுக்கு அருளப்பரையும் நிரப்பச் செய்தார். சேசு கிறிஸ்து தனது பரிசுத்த மாதாவுக்கும் வளர்ப்பு தந்தைக்கும் அளவில்லாத வரங்களை அருளினார் எல்லாவித மகிமை, நன்மை, சகல புண்ணியங்களுக்கும் காரணமான தனது தந்தைக்கு அளவில்லாத அருள் வரங்களை வழங்கி வந்தார் வழங்கியும் வருகிறார். மாமரியன்னை சேசுவைப் பெற்று வளர்த்தவர்களாதலால் அவரை மோட்ச அரசியாக முடிசூட்டச் செய்தார். 

ஏழ்மையில் வாழ்ந்த  அர்ச்.சூசையப்பரை பின்பற்ற வேண்டுமென்று ஐந்துகாய  அர்ச்.பிரான்சீஸ் அசிசியார் வறுமையை தனக்கு துணையாகக் கொண்டு வாழ்ந்ததோடல்லாமல் அதனை தன்னுடைய சபையில் உள்ள துறவிகளுக்கு அடையாள குறியீடாகக் கொண்டார். எப்போதும் கீழ்ப்படிந்து நடந்த சேசுவை தியானித்து அவரைப்போல் வாழ வேண்டும் என்று  அர்ச்.இஞ்ஞாசியார் கீழ்ப்படிதல் என்ற புண்ணியத்தை தான் நிறுவிய சேசுசபைக்கு வெற்றிக் கொடியாகக் கொடுத்தார் 

அளவற்ற துன்பங்களோடு கிறிஸ்தவத்தை பரப்பிய சேசு கிறிஸ்துவை கண்டுபாவிக்க வேண்டுமென்ற நமது ஞானத் தந்தை அர்ச்.சவேரியார் அரும் முயற்சி செய்து நற்செய்தியைப் பரப்பினார். ஒவ்வொரு புனிதர்களும் திருக்குடும்பத்தின் வாழ்வில் தங்களுக்குப் பிடித்த பக்தி முயற்சியை தத்தம் வாழ்வில் கடைப்பிடித்தனர் 

முப்பது வருடங்களாக சேசுவுடன் இருந்து அவரது புண்ணியங்களையும் நன்மாதிரியையும் தினமும் இணைபிரியாது அனுபவித்த  அர்ச்.சூசையப்பர் மிக அதிக கவனத்தோடு சர்வேசுரனுக்கு

ஏற்புடையவராக விளங்கினார் என்று நிகழ்வுகள் சான்று கூறுகிறது 

தேவசுதனான  சேசுகிறிஸ்துவோடு ஒன்றாக வாழ்ந்து, உண்டு உறங்கி, செபித்து முப்பதாண்டுகள் மோட்ச பேரின்பந்தை அனுபவித்தவர்கள் மாமரியன்னையையும்  அர்ச்.சூசையப்பரையும் தவிர

வேறு யாரும் இருக்க முடியாது 

தனது தலைவன் கொடுத்த ஐந்து தாலந்தை பத்தாக மாற்றிய வேலையாளை பாராட்டி உயர்ந்த பதவியை அளித்தான் என சேசு கிறிஸ்து உவமையாக இந்நிகழ்ச்சியை நமக்கு கூறினார். சர்வேசுரன் நமக்கு சில வரங்களை அளிக்கும் போது நாம் அவற்றை சரிவர பயன்படுத்தினால் அவர் இரட்டிப்பாக வழங்குவார் என வேதவல்லுநர்கள் அறிவித்துள்ளார்கள்.  அர்ச்.சூசையப்பர் முப்பதாண்டுகள் சகல வரங்களையும் வல்லமைகளையும் சரிவர பயன்படுத்தியதால் அவர் சகல அர்ச்சியஷ்டவர்களுக்கும், வான தூதர்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார் 

முகம்பார்க்கும் கண்ணாடியில் நமது பிம்பம் தெரிவதுபோல் அர்ச்.சூசையப்பருக்கு முன்னால் மாமரியன்னையும், சேசுவும் தெரிந்தார்கள் இரு கண்ணாடிகள் வைத்து அதிலே சூரிய ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கச் செய்தால் இரும்புகூட அந்த வெப்பத்தில் உருகும். மாமரியன்னையின் மீதும் சேசுவின் மீதும் தெய்வீகத்தின் சூரியன்டட்டு, அர்ச்.சூசையப்பர் மீது விழுந்ததால் அவரது இதயம் தேவ அன்பால் நிறைந்திருந்தது என மறைநூலார்கள் குறிப்பிடுகின்றனர் 

இவற்றினை அறிந்துகொண்ட நாம் அர்ச்.சூசையப்பரை கண்டு பாவிக்க வேண்டும். திருக்குடும்பத்தை நாம் நேசித்து மிகவும் பக்தியோடு தினமும் செபிக்கவேண்டும். அப்படி செய்கிறவர்களுக்கு விசேஷ வரங்களையும் புண்ணியங்களையும் வழங்கி பரிசுத்தவர் ஆக்குவார் என அர்ச்.தெரசம்மாள் எழுதியுள்ளார். சேசு, மாமரியன்னை இவர்களது பக்தியையும் புண்ணியங்களையும் நேரில் பார்த்த அர்ச்.சூசையப்பர் மனதில் மிக அழுத்தமாக பதிந்தது. இதனை அறியும் நம் மனதிலும் பக்தி பரவசம் ஏற்பட வேண்டும். 

செபமும் தியானமும் செய்கிறவர்கள் நரகத்திற்கு போக மாட்டார்கள், செபமும் தியானமும் செய்யாதவர்கள் நரகத்திற்கு தப்பமாட்டார்கள் என அர்ச்.தெரசம்மாள் கூறியுள்ளார். எனவே நாம் தினமும் கொஞ்ச நேரமாவது செபமும் தியானமும் செய்வதோடு வருடத்திற்கு ஒருதடவை ஒருவாரம் அல்லது ஐந்து நாட்களாவது ஞான தியானங்களை செய்யவேண்டும். 

அர்ச்.சூசையப்பர் தமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களை நன்கு பயன்படுத்தி நாளுக்குநாள் அதிகமாய் புண்ணியவாழ்வு வாழ்ந்து தான் தூயவர்களுக்கும் மேலானவர் என்பதை உறுதிப்படுத்தினார். எனவே, நாம் அவரது திருவிழாவை பக்தி சிறப்போடு கொண்டாட நேர்மையான ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று திவ்விய நற்கருணை வாங்குவோம்

புதுமை 

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனி நாட்டில் முதல் லியோப்போல்னூஸ் என்ற அரசர் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தார். அரசர்களுக்குரிய மாட்சி, தைரியம் இருந்ததோடு தெய்வபக்தி மகிமையான குருவணக்கம், எழைகளின்பால் பரிவும் பாசமும் அவரிடத்தில் விளங்கியது. அவர்களோடு முழுவதும் சமாதானத்தை நிலவவிட்டார் அதனால் அவரின் நாட்டிலுள்ளவர்கள் அவரை நேசித்தார்கள். இதனை சகிக்க முடியாத விஷமிகள் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய ஆலோசனை செய்தார்கள்.  அர்ச்.சூசையப்பரின் அருளால் அவர் அந்த கொடிய மரணத்திலிருந்து தப்பினார். அவர் அதனை கொண்டாடும் பொருட்டு பெரிய விழா எடுத்து சிறப்பித்தார் 

இவரது கட்டளையின் பேரில் பாப்பரசர், துறவியர்களும், படைத்தலைவர்களும், பிரபுக்களும், பொதுமக்களும் குறிப்பிட்ட நாளில் வியன்னா மாநகரில் கூடினார்கள். அங்குள்ள தெருக்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க, பீரங்கிகள் வெடிக்க மக்கள் மகிழ்ச்சியில் பூரித்து பக்தியோடு அர்ச்.சூசையப்பரின் திருநாள் கொண்டாடப்பட்டது. அந்நகரில் உள்ள அர்ச்.முடியப்பரின் ஆலயம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் மோட்ச வீட்டைப்போல் பிரகாசித்துக்கொண்டிருக்க, முத்து இரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட இருக்கையில்  அர்ச்.சூசையப்பருடைய தங்கச் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டது 

கர்தினால் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது அரசர் தனது ஆசனத்திலிருந்து இறங்கி பீடத்தின் முன் முழந்தாள்படியிட்டு வணங்கி தன்னுடைய மணிமகுடத்தை எடுத்து அர்ச்.சூசையப்பர் திருசுரூபத்தின் தலையின்மீது சூட்டினார். தன்னையும் தன் மக்களையும், படையையும், நாட்டையும்  அர்ச்.சூசையப்பரின் பெயரில் எழுதி அவரை பாதுகாவலராகக் கொண்டு கர்தினால் கையில் அனைவர் முன்னிலையிலும் கொடுத்தார் 

திருப்பலி நிறைவுற்றதும் அலங்காரத் தேரில்  அர்ச்.சூசையப்பர் திருசுரூபத்தை வைத்து நகரின் வீதிகளில் உலாவர செய்தார். மக்கள் கூட்டம் பரவசத்துடன் பக்தி வெள்ளத்தில் அலை மோதியது 

எல்லாவற்றிலும் நமக்கு ஆடையாகவும், பாதுகாவலராகவும் தஞ்சமாகவும் அர்ச்.சூசையப்பர் விளங்குகிறார் என தெரிந்து கொள்வோம் 

(1 பர, 3அரு, பிதா)

செபம் 

புண்ணியம், மகிமை, சிறப்புப்பெயர் இவற்றால் மோட்ச வீட்டில் உள்ள அனைவரையும்விட மேலாக விளங்கும் அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். உமது வல்லமையை அறிந்து மகிழ்கிறோம். சகல அர்ச்சியஷ்டவர்களும் உம்மை வணங்குகிறார்கள். நீர் உமது அரியணையில் இருந்து உமது பிள்ளைகளாகிய எங்கள் மீது இரக்கம் காட்டியருளும். எங்களது பலவீனத்தை போக்கி, துர்க்குணங்களை ஒதுக்கி, எதிரிகளை ஒழித்து எங்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும். உமக்கு பிள்ளைகளாயிருக்கிற எங்களை கைவிடாதேயும். எங்களுக்காக உமது திருக்குமாரனையும் மாமரியன்னையையும் செபிக்கும்படி மன்றாடுகிறோம். ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

சகல அர்ச்சியஷ்டவர்களிலும் மேலானவரான அர்ச். சூசையப்பரே உம்மை புகழ்கிறோம் 

சகல அர்ச்சியஷ்டவர்களைவிட சர்வேசுரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே

உம்மை புகழ்கிறோம் 

மோட்சத்தில் மேலான இடத்தில் இருக்கிற பிதா பிதாக்களின் அர்ச்.சூசையப்பரே! உம்மை நோக்கி மன்றாடுகிறோம். 

செய்ய வேண்டிய நற்செயல் 

அர்ச்.சூசையப்பருடைய மகிமை, புகழ் பற்றி சிலரிடம் மேலும் அறிமுகப்படுத்துங்கள்