டிசம்பர் 21

அர்ச். தோமையார், அப்போஸ்தலர்
தோமையார் கலிலேயா தேசத்தில் பிறந்து, மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தார். யூதரான இவர், தேவ பக்தியுள்ளவராய், மோயீசனின் வேதக் கட்டளைப்படி வாழ்ந்து வந்தார்.

சேசுநாதருடைய பிரசங்கத்தைக் கேட்டும், அவர் செய்த அற்புதங்களைக் கண்டும்வந்த தோமையார், சேசுநாதரே உலக இரட்சகர் என்று விசுவசித்து அவருக்கு சீஷரானார். 

இறந்துபோன லாசரை உயிர்ப்பிக்கும்படி கர்த்தர் பெத்தானியாவுக்குப் போகவிருப்பதைக் கண்ட மற்ற அப்போஸ்தலர்கள், யூதர் அவரைக் கொல்லத் தேடுவதால் அவர் அங்கே போகாதப்படிக்கு தடுத்ததைக் கண்ட தோமையார் நாமும் கர்த்தருடன் பெத்தானியாவுக்குச் சென்று அவருடன் மரிக்க வேண்டியிருந்தாலும் மரிப்போமாக என்று சொன்னார்.

உயிர்த்த பிறகு, கர்த்தர் ஒரு வீட்டில் இருந்த 10 அப்போஸ்தலர்களுக்குத் தம்மைக் காட்டியதைப் பற்றி கேள்விப்பட்ட தோமையார்: “நான் அவரை என் கண்ணால் கண்டு, என் கை விரலை அவர் காயத்தில் விட்டுப் பார்க்கும் வரையில், நான் விசுவசிக்க மாட்டேன்” என்று சாதித்தார்.

மறுபடியும் கர்த்தர் அப்போஸ்தலர்களுக்குத் தம்மைக் காட்டியபோது, தோமையாரும் அவர்களுடனிருப்பதை சேசுநாதர் கண்டு: “தோமா, உன் விரலை என் காயங்களில் விட்டுப் பார்” என்றார்.  அதற்கு தோமையார், “ஆண்டவரே! என் தேவனே!” என்று கூறியதைக் கர்த்தர் கேட்டு, “நீ என்னைக் கண்டு விசுவசித்தாய்! ஆனால் என்னைக் காணாமல் விசுவசிப்பவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.

கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின், ஆசியா தேசத்திற்கு தோமையார் புறப்பட்டுப் போய, அநேக நாடுகளில் சுவிசேஷம் போதித்து, திரளான ஜனங்களுக்கும் அரசருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்.

பிறகு தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில், மைலாப்பூருக்குச் சென்று, அவ்வூர் அரசனுக்கும் ஏராளமான ஜனங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்து, பிராமணரால் கொல்லப்பட்டு, அவ்விடத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்.

யோசனை
நாமும் நமது சத்திய வேதத்தில் போதிக்கப்படும் விசுவாச சத்தியங்களில் தளராமலிருப்போமாக.