டிசம்பர் 08

தேவமாதா மாசில்லாமல் உற்பவித்த திருநாள்.

சர்வேசுவரன் ஆதித் தாய் தகப்பனை உண்டாக்கியபோது அவர்களுக்கு அவர் கொடுத்த கட்டளையை அவர்கள் மீறினதினால், அவர்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து மோட்ச உரிமையைப் பறிகொடுத்து, வியாதி, துன்பம், சாவு முதலிய தீமைகளுக்கு ஆளானார்கள்.

மேலும் அவர்களுடைய சந்ததியாரான சகல மனிதரும் முன் சொல்லப்பட்ட கேட்டுக்கு உள்ளாகி, அவர்கள் பிறக்கும்போது தேவ இஷ்டப்பிரசாதமின்றி பசாசுக்கு அடிமைகளாய்ப் பிறக்கிறார்கள்.
ஆனால் தயையுள்ள சர்வேசுவரன் அவர்கள்மீது இரக்கங்கொண்டு மனுக்குலத்தை இரட்சிக்கும்படி ஒரு இரட்சகர் ஒரு ஸ்திரீயிடத்தினின்று பிறப்பாரென்றும், அந்த ஸ்திரீ நரக சர்ப்பமாகிய பசாசின் தலையை மிதித்து நசுக்குவாளென்றும் ஆதித்தாய் தகப்பனுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார்.

சர்வேசுவரன் குறித்து பேசின ஸ்திரீ அர்ச். கன்னிமரியம்மாளே. இவள்     ஜென்மப் பாவமின்றி உற்பவித்ததினால் பசாசின் தலையை மிதித்தாள்.  ஆகையால் உலக இரட்சகரைப் பெற்றெடுக்கவிருக்கும் அக்கன்னி மரியம்மாள், தன் தாய் வயிற்றில் உற்பவித்த கணமே ஜென்மப் பாவமின்றி உற்பவித்தது, தேவ இஷ்டப்பிரசாதத்தால் அலங்கரிக்கப்பட்டாள்.

தேவமாதா தன் தாய் வயிற்றில் உற்பவித்த பொழுது ஜென்மப் பாவமின்றி உற்பவித்தாள் என்னும் வேத சத்தியத்தை திருச்சபை 1854-ம் வருடம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி உலகத்திற்கு பிரசித்தப்படுத்தினதினால், இன்றையத் தினம் ஆடம்பரத்துடன் திருச்சபையில் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

யோசனை

நாமும் மோட்ச இராக்கினியின்மேல் அதிக பக்தி வைத்து, ஓ! மரியாயே! உமது ஜென்ம தோஷமில்லாத உற்பவத்தால் என்னிருதயத்தைப் பரிசுத்தப்படுத்தி, என் ஆத்துமத்தை அர்ச்சித்தருளும் என்று மன்றாடுவோமாக.