டிசம்பர் 22

அர்ச். ப்ளேவியன்  வேதசாட்சி - (கி.பி. 362).
செல்வந்தனின் மகனான இவர், தம்முடைய கல்வி சாஸ்திரங்களினாலும் நன்னடத்தையினாலும் உரோமையில் உயர்ந்த பதவியை வகித்து வந்தார். இவருடைய நற்குணங்களைப் பார்த்து, இராயனும் மக்களும் இவரை நேசித்து வந்தார்கள்.

தன் அலுவலின் கடமைகள் பெரிதாயினும், ப்ளேவியன் ஜெபதபம் முதலிய வேத கடமைகளைப் பிரமாணிக்கமாய் அனுசரித்து, சகலருக்கும் முன்மாதிரிகையாய் விளங்கினார்.

அக்காலத்தில் ஆரிய பதிதனாகிய இராயன், ப்ளேவியனை தன் மதத்திற்கு இழுப்பதற்கு செய்த முயற்சியெல்லாம் வீணானதால், வேதனையுடன் இவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டான். இவரோ சற்றும் கலங்காமல், சத்தியவேதத்திற்காகப் பல வகையிலும் உழைத்து வந்தார்.

இந்த இராயனுக்குப்பின் வேதத் துரோகியான ஜுலியான் அரியனையில் அமர்ந்தபோது, ப்ளேவியன வேதத்திற்காகப் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இவர் அனுபவித்த நிந்தை அவமானத்தை சட்டை செய்யாமல், வேதத்தில் தைரியமாயிருந்ததுடன், கிறீஸ்தவர்களுக்குத் தைரியமும் பிற மதத்தினருக்குப் புத்திமதியும் சொல்லி, அநேகரை வேதத்திற்கு மனந்திருப்பினார்.

இவரைக் கொன்றால் உரோமையில் கலகம் உண்டாகும் என்று கொடுங்கோலன் எண்ணி, இவரை நாடுகடத்தினான். அங்கே இவர் பல துன்பங்களை அனுபவித்துப், பசி தாகத்தாலும் கஷ்டத்தாலும் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக் கொண்டார்.

யோசனை

நாம் எந்த நிலையில் இருந்தபோதிலும், அர்ச். ப்ளேவியனைப் போல எதார்த்தமுள்ளவர்களாய் நடந்து, நமது வேத கடமைகளை அனுசரிப்போமாகில், நமது பிரசங்கத்தால் அல்ல, ஆனால் நமது நன்னடத்தையால் அநேகர் மனந்திரும்புவார்கள்.