பிப்ரவரி 20

அர்ச். யுகேரியஸ். மேற்றிராணியார் (கி.பி. 743) 

இவர் பிரான்ஸ் தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்து சிறு வயதில் புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தார். இவர் வேதாகமங்களையும் விசேஷமாக அர்ச். சின்னப்பருடைய நிருபங்களையும் சலிக்காமல் வாசித்ததினால் உலக சந்தோஷ வாழ்வு நிழலுக்கு சமமென்று அறிந்து உலகத்தை துறந்து துறவியானார்.

இவர் மடத்தில் அரிதான புண்ணியங்களையும் கடினமான தபங்களையும் செய்துவருகையில் ஓர்லென்ஸ் நகருக்கு மேற்றிராணியாராக தெரிந்துக்கொள்ளப்பட்டார். கீழ்ப்படிதலினிமித்தம் அந்த பட்டத்தைப் பெற்றுக் கொண்டு வெகு கவனத்துடன் தமது கடமைகளைச் செய்துவந்தார்.

ஜனங்களுக்கு பிரசங்கிப்பதிலும் அவர்களைத் திருத்துவதிலும் மகா பிரயாசை யுடன் உழைத்துவந்தார். அத்தேசத்து அரசன் செய்த யுத்தத்தின் செலவுக்காக கோவிலுக்குச் சொந்தமான நிலபுலன்களையும், திரவியங்களையும் கொள்ளை யடித்ததினிமித்தம் யுகேரியஸ் மேற்றிராணியார் அரசனுடைய தேவ துரோகத்தைக் கண்டித்துப் பேசினார்.

இதனால் அரசன் சினங்கொண்டு அவரை நாடு கடத்தினான். அங்கு அர்ச்சியசிஷ்டவருடைய புண்ணியங்களால் சகலரும் அவரை மேலாக மதித்ததினால் அரசன் அவரை வேறொரு ஊருக்கு அனுப்பிவைத்தான். அவ்விடத்திலும் இவர் மகிமைப்படுத்தப்பட்டு சகல புண்ணியங்களிலும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

யோசனை

நமது ஒன்றுமில்லாமையை உணர்ந்து பெயர், பெருமை, சிற்றின்ப சுகம் முதலியவைகளை வீணிலும் வீண் என்று எண்ணுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சடொத்தும் துணை. வே.
அர்ச். எலேயுதேரியுஸ், வே.
அர்ச். மில்திரட், க.
அர்ச். உல்ரிக், மு.