(1) ஞான உபதேச அறிவு

பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் தமது ஆச்செர்போ நீமிஸ் என்னும் மடலில் (15.4.1905), "தற்காலத்திய அசட்டைத்தனத்திற்கும், ஒரு வகையில் ஆத்துமங்கள் நோய்வாய்ப் பட்டிருப்பதற்கும், அதன் விளைவாக எழும் மோசமான தீமைகளுக்கும் முதன்மையான காரணம் தெய்வீகக் காரியங்களைப் பற்றிய அறியாமைதான்... இரட்சணியத்திற்கு அவசியமான இந்த சத்தியங்களை முற்றிலுமாக அறியாதிருக்கிற கிறீஸ்தவர்கள் நாம் வாழும் இந்தக் காலத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

அந்த இருள் எவ்வளவு ஆழ்ந்ததாக இருக்கிறது என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடைப்பது கடினமாயிருக்கிறது. எல்லாவற்றிலும் அதிகப் புலம்பலுக்குரியதா யிருப்பது என்னவெனில், இந்த இருளுக்கு மத்தியிலும் எவ்வளவு ஆழ்ந்த அமைதியில் அவர்கள் இளைப்பாறுகிறார்கள் என்பதுதான். உன்னத சிருஷ்டிகரும், சகலத்தையும் ஆண்டு நடத்துபவரு மான சர்வேசுரனைப் பற்றியோ, அல்லது கிறீஸ்துநாதருடைய விசுவாச போதனைகளைப் பற்றியோ மிக அரிதாகவே நினைக்கிறார்கள்.

தேவ வார்த்தையானவரின் மனித அவதாரத்தைப் பற்றியும், (தமது திவ்விய பலியின் மூலம்) மனுக்குலத்தை அதன் தொடக்கப் பரிசுத்த நிலையில் மீண்டும் ஸ்தாபிப்பதை அவர் பூரணமாகச் செய்து முடித்தது பற்றியும் அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை.

நித்திய காரியங்களை அடைந்து கொள்வதற்கான தேவ உதவிகளில் எல்லாம் மிக மேலானதாகிய வரப்பிரசாதமும், எவற்றின் வழியாக நாம் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்கிறோமோ அந்த திவ்விய பலிபூசை மற்றும் தேவத்திரவிய அநுமானங்களும் அவர்களால் முற்றிலுமாக அறியப்படாதவையாக இருக்கின்றன.

பாவத்தின் கெடுமதி, அதன் இழிந்த தன்மையைப் பற்றிய எந்த உணர்வும் அவர்களிடம் இல்லை; இதன் காரணமாக பாவத் தைத் தவிர்ப்பது பற்றியோ, அதை விட்டு விலகுவது பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆகவே பரிதாபத்திற்குரிய நிலையில் அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவுக்கு வந்து சேர்கிறார்கள் என்று கூறுகிறார்.

சர்வேசுரனை அறியாமல் அவரை நேசிக்க முடியாது, நேசியாமல் அவருக்கு ஊழியம் செய்ய முடியாது, ஊழியம் செய்யாமல் மோட்சத்தை அடைய முடியாது. ஆகவே மோட்சத்தை அடைய அடிப்படைத் தகுதியாயிருக்கிற இந்த ஞான உபதேச அறிவைக் கத்தோலிக்கர்கள் தங்களில் வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆத்துமங் களுக்கு அந்த அறிவைத் தர தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குருக்கள் தங்கள் மந்தைக்கும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். இது சரிவரச் செய்யப்பட்டாலே, நரகத்தின் வாயினின்று அநேக ஆன்மாக்களை நாம் கடவுளின் உதவியோடு மீட்டு விட முடியும்.

இக்காரியத்தில் குருக்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் கடவுளுக்கு ஒரு கண்டிப்பான கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும் என்பதை ஒருபோதும் மறந்து போகலாகாது.