ஏப்ரல் 19

அர்ச். 9-ம் லியோ. பாப்பானவர் (கி.பி. 1054) 

இவர் பிறந்தபோது இவர் சரீரத்தில் சிகப்பு சிலுவைக் குறிகள் காணப்பட்டன. இவர் இராஜக் கோத்திரத்தில் பிறந்து புண்ணிய வழியில் வாழ்ந்து 24-ம் வயதில் மேற்றிராணியார் பட்டம் பெற்றார்.

ஆத்தும் இரட்சண்யத்தின் மட்டில் இவருக்கு உண்டாகியிருந்த ஆசையால் தமது புத்திமதியாலும் நன்மாதிரிகை யாலும் குருக்களை புண்ணிய வாழ்வில் ஸ்திரப்படுத்தி துறவற மடங்களைச் சீர்திருத்தம் செய்து, கிறிஸ்தவர்களை நல்வழியில் நடத்தி வந்தார்.

இதற்காக இந்த மேற்றிராணியார் ஊரூராய்ப் பிரயாணஞ் செய்து, பிரசங்கித்து, ஒரு நல்ல ஆயனைப் போல் வாழ்ந்தார். 2-ம் தமாசுஸ் பாப்பாண்டவர் இறந்தபின், இவர் பாப்பாண்டவராகத் தெரிந்துகொள்ளப்பட்டபோது, இவர் அதற்குச் சம்மதியா திருந்தும் உரோமையிலுள்ள குருக்கள், விசுவாசிகளின் மன்றாட்டுக்கு இணங்கி அர்ச். இராயப்பர் சிம்மாசனமேறினார்.

இந்த உந்தப் பதவிக்கு வந்தபின் ஜெப தபங்களையும், தவக்காரியங்களையும் இருமடங்காக்கி, அநேக சங்கங்களைக் கூட்டி, திருச்சபைக்கு அனுகூலமான சட்டங்களை ஏற்படுத்தினார்.

இந்தப் பரிசுத்த பாப்பரசர் அதிகமாக ஜெப தபம், ஒருசந்தி, உபவாசம் முதலிய புண்ணிய காரியங்களைக் கடைபிடித்து மயிர் சட்டையைத் தரித்துக்கொள்வார்.

தரையில் படுத்து சிறிது நேரம் மாத்திரம் நித்திரை செய்வார். ஏழை எளியவர்களை அன்புடன் விசாரித்து அவர்களுக்கு உதவி புரிவார்.

இவருக்கு மரண காலம் நெருங்கி வந்தபோது தேவதிரவிய அநுமானங்களை மகா பக்தியுடன் பெற்று, தீர்வை நாளில் தாம் தமது கல்லறையினின்று உயிர்ப்பதைப்பற்றி அங்கு இருந்தவர்களுக்குப் பிரசங்கம் செய்து உயிர் துறந்து மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்தார்.

யோசனை 

நாமும் நமது முடிவைப்பற்றி நினைப்போமாகில் பாவத்தில் என்றும் விழமாட்டோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எல்பேஜ், வே.
அர்ச். யுர்ஸ்மார், மே.