ஏப்ரல் 20

அர்ச். ஆக்னெஸம்மாள். கன்னிகை (கி.பி. 1317) 

ஆக்னெஸம்மாள் புத்தி விவரம் அறியும் முன்பே தன் வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு கர்த்தர் கற்பித்த ஜெபம், மங்கள வார்த்தை ஜெபம் இவைகளை அநேக மணி நேரம் சொல்லி ஜெபிப்பாள்.

சிறு வயதில் இவள் ஒரு கன்னியர் மடத்தில் விடப்பட்டபோது, அங்கு உலக படிப்புடன் ஞானப் படிப்பையும் படித்து ஒரு சம்மனசு போல வாழ்ந்து வந்தாள்.

இவளுக்கு 15 வயது நடக்கும் போது பாப்பாண்டவருடைய விசேஷ உத்தரவின்படி ஒரு வருடத்திற்குப் பெரிய சிரேஷ்ட தாயாராக நியமிக்கப்பட்டாள்.

அப்போது மோட்ச மன்னா பீடத்தின்மேல் இறங்குவதை அங்கிருந்தவர்கள் கண்டார்கள். மேலும் இப்புண்ணியவதி உருக்கத்துடன் ஜெபம் செய்யும் போதெல்லாம் மோட்ச சுகந்தம் பரிமளிக்கும் ரோஜா, லீலி புஷ்பங்கள் அவளைச் சுற்றி விழும்.

இந்த அர்ச்சியசிஷ்டவள் ஜெபத்துடன் கடின தபத்தையும் புரிந்து தரையில் படுத்து தலைக்கு ஒரு கல்லைத் தலையணையாக வைத்துக்கொள்வாள்.

15 வருட காலமாய் சிறிது ரொட்டியும் தண்ணீரும் மாத்திரம் அவளுடைய போஜனமா யிருந்தது.

இவளுடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட அவள் ஊரார் மன்றாட்டின்மேல், அர்ச். ஆக்னெஸ் தான் பிறந்த ஊருக்குச் சென்று, வேசிகளும், பசாசுகளும் குடிகொண்டிருந்த ஒரு ஸ்தலத்தைத் தெரிந்து கொண்டு, துஷ்ட ஸ்திரீகளையும் பசாசையும் அவ்விடத்தினின்று துரத்திவிட்டு ஒரு மடத்தை அங்கு ஸ்தாபித்தாள்.

இவள் அநேக வருடகாலம் வியாதியால் வருந்தின் போதிலும் அதைப் பொறுமையுடன் அனுபவித்து, புதுமைகளிலும் தீர்க்கத்தரிசனங்களிலும் பெயர் பெற்று அநேக வருடகாலம் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து உயிர் துறந்து தன் ஞான பத்தாவிடம் போய்ச் சேர்ந்தாள்.

யோசனை 

நாமும் நமது உருக்கமுள்ள ஜெபத்தால் மோட்சமடைய பலவந்தம் செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். செர்ஃப், மே. அர்ச். ஜேம்ஸ், து.