மார்ச் 19

அர்ச். சூசையப்பர்.

அர்ச். சூசையப்பர் இராஜ கோத்திரத்தாராயிருந்தும் உலக மகிமையைத் தேடாமல் தரித்திர அந்தஸ்திற்குள்ளாகி தச்சு வேலையைச் செய்து விரத்தராய் ஜீவித்து வந்தார்.

இவருடைய தாழ்ச்சியைக் கண்ட சர்வேசுரன் இவரைக் கன்னிமரியாயிக்கு பத்தாவாகவும், மனித அவதாரமெடுக்கும் சுதனாகிய சர்வேசுரனை வளர்க்கும் கைத்தாதையாகவும் தெரிந்துகொண்டார்.

இவர் நீதிமானென்று சுவிசேஷத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அர்ச். சூசையப்பர் புண்ணியவாளரும், பரிசுத்தவானும், சாந்தகுணமுள்ளவருமாய் மனித சந்தடியைத் தேடாமல் ஏகாந்தத்தில் ஜீவித்து சர்வேசுரனோடு ஒன்றித்திருந்தார்.

சகலத்திலும் தேவ அழைத்தலுக்குச் செவி சாய்த்து சகல புண்ணியங்களையும் அநுசரித்து வந்தார்.

தனது பத்தினியான கன்னிமரியாள் கர்ப்பந்தரித் திருப்பதையறிந்து அதிசயித்துக் கலங்குகையில், சம்மனசுவினால் மேற்கூறிய அற்புத சம்பவத்தை அர்ச். சூசையப்பர் அறிந்து சர்வேசுரனைத் ஸ்துதித்தார்.

இவர் திருக்குடும்பத்திற்குத் தலைவராயிருந்து தமது நெற்றி வியர்வை வியர்க்கக் கஷ்டப்பட்டு உழைத்து திருக்குடும்பத்தை நடத்திவந்தார்.

சம்மனசுவின் உத்தரவின் மேல் திருக்குடும்பத்தை எஜிப்து தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போய் மறுபடியும் தேவ கட்டளைப்படி அவர்களை நசரேத்துக்கு மோசமின்றி கூட்டிக்கொண்டு வந்தார்.

நசரேத்துாரில் அர்ச். சூசையப்பர் அநேக வருஷகாலம் திருக்குடும்பத்துடன் ஜீவித்துக் கஷ்டப்பட்டு உழைத்தபோதிலும் ஜெபத்தை மறவாமல் தேவ கட்டளையை வெகு கவனமாய் அநுசரித்து வயோதிகராய் சேசுநாதருடையவும் தேவமாதாவுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை

இல்லறத்தாரும் துறவறத்தாரும் அர்ச். சூசையப்பரைத் தங்கள் முன்மாதிரியாகப் பாவித்து பாக்கியமான மரணத்தைக் கட்டளையிட அவரிடம் மன்றாடுவார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஆல்க்ம ண்ட் , வே.