மார்ச் 20

அர்ச். தமாஸ்கஸ் அருளப்பர். (கி.பி. 780). 

நல்ல கிறிஸ்தவர்களும் செல்வந்தரும் உயர்ந்த கோத்திரத்திலுள்ள பெற்றோரிடமிருந்து தமாஸ்கஸ் நகரில் பிறந்த இவர், தமாஸ்கஸ் ஜான் அல்லது அருளப்பர் என்னும் நாமம் பெற்றார்.

முகம்மதியரின் அரசாட்சியில் அருளப்பருடைய தந்தை உயர்ந்த உத்தியோகத்திலிருந்தமையால் தமது குமாரனுக்கு மேலான சாஸ்திரங்களைப் கற்கச்செய்தார்.

தமது தந்தை இறந்த பின், அருளப்பர் தமாஸ்கஸ் நகருக்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் லேயோ என்னும் கிறிஸ்தவ இராயன் திருச்சுரூப வணக்கம் கூடாதென்று பிதற்றி, திருச்சுரூபங்களை உடைக்கும்படி கட்டளையிட்டான்.

இதைப்பற்றிக் கேள்விப்பட்ட அருளப்பர் வேதாகமங்களையும் பூர்வீக அர்ச்சியசிஷ்டவர்களுடைய படிப்பினைகளையும் எடுத்துக்காட்டித் திருச்சுரூப வணக்கத்திற்கு அனுகூலமாய் எழுதிப் பிரசித்தப்படுத்தினார்.

இதனால் இராயன் கோபங்கொண்டு அருளப்பர் இராஜத் துரோகியென்றும், அவர் முகம்மதிய இராஜ்யத்தைப் பிடித்துக் கொள்ளும்படியான உபாயங்களை எழுதித் தனக்கு அனுப்பினாரென்றும் முகம்மதிய மந்திரிக்குத் தெரியப்படுத்தினான்.

மந்திரி இராயனுடைய கபடத்தை அறியாமல், அருளப்பர் இராஜத் துரோகியென்று தீர்மானித்து, அவருடைய வலது கையை வெட்டி அவரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டான்.

அருளப்பர் அறுபட்ட கையைத் தேவமாதா சுரூபத்திற்கு முன்பாக வைத்து பக்தியுடன் வேண்டிக்கொண்டபோது, அறுபட்ட கை அவருடைய முழங்கையோடு ஒட்டிக்கொண்டது.

இதையறிந்த மந்திரி அருளப்பர் மாசற்றவரென்று தீர்மானித்து அவரை முன்போல் உத்தியோகத்தில் வைத்துகொண்டான்.

ஆனால் அர்ச். அருளப்பர் அந்த மகிமையான பதவியை விட்டுவிட்டு சன்னியாச மடத்தில் சேர்ந்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்தார்.

அந்த மடத்தில் சகல வித தாழ்ச்சிக்குரிய வேலைகளையுஞ் செய்து, ஒன்றுக்கும் உதவாத அடிமையென்று தன்னைத் தாழ்த்தி, சகல புண்ணியங் களையும் அநுசரித்து முதிர்ந்த வயதில் பாக்கியமான மரணமடைந்து நித்திய சம்பாவணையை அடைந்தார்.

யோசனை 

நமது வீடுகளில் பாவச் சோதனையை உண்டாக்கத் தக்க படங்களை வைக்காமல் அர்ச்சியசிஷ்டவர்களின் சுரூபங்களையும் படங்களையும் ஸ்தாபித்து அவைகளைப் பார்க்கும்போது அவர்களுடைய புண்ணியங்களைப்பற்றி சிந்திப்போமாக.